இணையத்தில் தமிழுக்கு கிடைத்த முதலிடம்
பல வருடங்களாக ஃபேஸ்புக், யூடியூப், வலைப்பூ போன்ற டிஜிட்டல் தளங்களில் தங்களுடைய சிந்தனைகளையும் படைப்புகளையும் தமிழிலேயே வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அநேகர். ‘இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனமும் கே.பி.எம்.ஜி. (KPMG) நிறுவனமும் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. அதில், இணையத்தில் பகிரப்படும் இந்திய மாநில மொழியிலான உள்ளடக்கத்தில் 42% தமிழ் என்ற அடிப்படையில் தமிழ் முதலிடத்தைப் பிடிப்பதாக ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. தமிழுக்கு அடுத்ததாக 39% இந்தி என்று அதில் கண்டறியப்பட்டது.
மறுக்கப்பட்ட அங்கீகாரம்
ஆனால், சில தினங்களுக்கு முன்புவரை டிஜிட்டல் தொழில் உலக ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தமிழ் மொழியைத் தன்னுடைய அலுவல் மொழியாக அங்கீகரித்திருக்கவில்லை. 2014-ம் ஆண்டிலேயே இந்தியை, 2017-ல் வங்காள மொழியை கூகுள் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால், தமிழை ஏற்காமலேயே இருந்துவந்தது. ஒருவழியாக கூகுளின் ‘AdWords’, ‘AdSense’ ஆகிய பிரிவுகளில் 41-வது மொழியாகத் தமிழ் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு பிப்ரவரி 21 அன்று வெளியானது.
‘கூகுள் இந்தியா’வின் கூகுள் மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸின் இயக்குநர் ஷாலினி கிரிஷ், “இணையத்தைப் பயன்படுத்தும் பெருவாரியான இந்தியர்களுக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லை. ஆகவே, இந்திய மொழிகளை கூகுளில் இணைப்பதன் மூலம் பலருக்கு இணையத்தைக் கொண்டுசேர்க்கத் திட்டமிட்டோம். தமிழை கூகுள் அங்கீகரித்திருப்பதால் இனி டிஜிட்டல் ஊடகத்தில் தமிழில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களும் விளம்பரதாரர்களும் இணைக்கப்படுவார்கள்” என்று பிப்ரவரி 21 அன்று அறிவித்தார்.
திறந்தது புதிய பொருளாதாரக் கதவு
இப்படி கூகுள் அறிவித்திருப்பதன் அர்த்தம் என்ன? இணைய உலகின் மிகப் பெரிய தேடுபொறியான கூகுள், செய்திகள், தகவல்கள், துணுக்குகள் ஆகியவற்றுக்கு ஆட்சென்ஸ் (Adsense) என்ற அதிகாரபூர்வமான பிரிவை வைத்துள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றிடம் இருந்து கூகுளின் ஆட்சென்ஸ் விளம்பரங்களைப் பெறும். பிறகு, அந்த விளம்பரங்களை வெளியிடும் அனுமதியை இணையதளம், வலைப்பூ நடத்துபவர்களிடம் இருந்து பெறும். இதன் மூலம் இணையப் படைப்பாளிகளுக்கு வருமானம் கிடைக்கும்.
அதேபோல் குறிசொற்கள் (keywords) மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி ஒரு செய்தியையோ பிராண்டையோ இணையதளத்தையோ டிரெண்டாக்கச் செயல்பட்டுவருவதுதான் ஆட்வர்ட்ஸ் (AdWords).
இவை இரண்டும் சேர்ந்துதான் டிஜிட்டல் ஊடகத்தில் நாம் வெளியிடும் எந்தத் தகவலை டிரெண்டாக்கலாம், எதற்கு வருமானம் வழங்கலாம் என்பதை முடிவுசெய்கின்றன. இதுவரை இலக்கியம், அறிவியல், கல்வி, பொழுதுபோக்கு போன்ற பிரிவுகள் தொடர்பான உள்ளடக்கங்களைத் தமிழ் மொழியிலேயே இணையத்தில் பலர் வெளியிட்டுவந்தாலும் மிகச் சிலரால் மட்டுமே அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிந்திருக்கிறது.
காரணம், ஆட்சென்ஸும் ஆர்வர்ட்ஸும் இதுவரை தமிழை அங்கீகரித்திருக்கவில்லை. தற்போது தமிழ் மொழியை இவை ஏற்றுக்கொண்டிருப்பதால் தமிழுக்குப் புதிய பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக டிஜிட்டல் ஊடக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழர் வி. ஏ. சிவா அய்யாதுரை, கூகுளின் தலைவராக உயர்ந்துநிற்கும் தமிழர் சுந்தர் பிச்சை – போன்ற டிஜிட்டல் தமிழர்களை மட்டுமல்லாமல் இனித் தமிழையும் கூகுள் கொண்டாடும் என நம்புவோம்!
‘சுந்தர் பிச்சைக்கு தொடர் டிவீட்’
தமிழை கூகுள் அங்கீகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் கடந்த பத்தாண்டுகளாகப் பலர் ஈடுபட்டுவந்தாலும் ‘ஆட்சென்சின்’ சரியான திறவுகோலைக் கண்டுபிடித்தவர் கொழும்பைச் சேர்ந்த ஈழத் தமிழர் விக்டர். சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொலி டிரெண்டிங் ஆனது.
கொழும்பில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைவராகச் செயல்பட்டுவரும் இவர், 2016-ம் ஆண்டின் ‘உலகத் தொழிலதிபர் மாநாட்டில்’அன்றைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். அப்போது தான் சுந்தர் பிச்சையை நேரில் சந்தித்ததாகவும் அதன் பிறகு தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் தமிழ் இணைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.
விக்டர்
“தமிழில் இயங்கும் இணையதளங்கள் பெரிய அளவில் இணையவாசிகளைக் கவராது என இத்தனை காலமாக கூகுள் நினைத்துக்கொண்டிருந்தது. ஆனால், உலகில் ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருப்பதையும் அதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இணையத்தைத் திறம்படப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டி ஆட்சென்ஸுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.
அது மட்டுமல்லாமல் சுந்தர் பிச்சையுடன் நேரில் அறிமுகம் கிடைத்ததால் ஆட்சென்ஸ் தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த இரண்டாண்டுகளாக அவருக்கு டிவீட் செய்துகொண்டே இருந்தேன். அதற்க்கான பலன் கிடைத்துவிட்டது என நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இனித் தமிழ் இணையதளங்களுக்கு கூகுளே விளம்பரங்களைத் தேடிக் கொடுக்கும். தமிழிலேயே விளம்பரங்கள் வெளியிடப்படும். உதாரணமாக, உணவு வகைகள் பற்றிய கட்டுரைகளை ஒருவர் தன்னுடைய வலைப்பூவில் தமிழில் எழுதுகிறார். அவருக்கு நிறைய பார்வையாளர்கள் கிடைக்கிறார்கள். அப்படியானால் அவர் எழுதும் உணவு வகைளுக்குத் தொடர்புடைய விளம்பரங்களை கூகுளே வாங்கி அவருடைய வலைப்பூவில் வெளியிடும். இவ்வாறாக அவர் வருவாய் ஈட்டலாம்” என்கிறார் விக்டர்.
விளம்பரதாரரை ஈர்க்கும் சொல்
தமிழை கூகுள் ஏற்றுக்கொண்டதால் மீண்டும் தமிழ் ‘பிளாகர்ஸ்’ புத்துணர்ச்சிப் பெறுவார்கள் என நம்பிக்கையுடன் கூறுகிறார் டெல்லியைச் சேர்ந்த தமிழ் பத்திரிகையாளரும் இணைய எழுத்தாளருமான ஆர். ஷாஜஹான்.
எல்லோரும் ஆட்சென்ஸ் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆட்வர்ட்ஸும் மிக முக்கியமான பிரிவு என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இவர். “ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வந்த பிறகு பிளாகிங் செய்யும் ஆர்வமும் அதற்கான வரவேற்பும் குறைந்துபோனதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஆட்சென்ஸ் தமிழை அங்கீகரிக்காததும் பிளாகர்ஸ் சோர்வடைந்துபோனதற்கு முக்கியக் காரணம்.
இந்தியை ஆட்சென்ஸ் அங்கீகரித்த பிறகு இந்தி பிளாகர்ஸ் இணையம் மூலமாக நல்ல சம்பாத்தியம் பெற ஆரம்பித்தார்கள். இனிமேல் தமிழர்களுக்கும் அப்படியான பிரகாசமான வாய்ப்பு கிடைக்கும் எனத் தோன்றுகிறது. அதற்கு முதலாவதாகத் தமிழ் உள்ளடக்கப் படைப்பாளிகள் ஆட்சென்ஸில் முறையாகப் பதிவுசெய்ய வேண்டும்.
அடுத்து, ஆட்வர்ட்ஸ் நிர்வகிக்கும் keywords மிகவும் முக்கியம். எந்தச் சொற்கள் நம்முடைய உள்ளடக்கத்தில் இடம்பெற்றால் விளம்பரதாரர்களை ஈர்க்கலாம் என்பதையும் ஆராய்ந்து அதற்கேற்றாற்போல எழுதினால்தான் இணைய வழியில் பணம் சம்பாதிக்க முடியும். பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எவ்வளவு பணம் நிர்ணயிக்கப்படும் என்பதும் அதன் மூலம் எவ்வளவு வருமானம் ஈட்டலாம் என்பதும் போகப்போகத்தான் தெரியும்” என்கிறார் ஷாஜஹான்.