இணைய நூலகம் குவெஸ்டியா

இணைய நூலகம் குவெஸ்டியா

உலகம் முழுவதும் உள்ள புத்தகங்கள், பத்திரிகளை மற்றும் சஞ்சிகைகளில் உள்ள தகவல்களயும், கட்டுரைகளையும் தேடி வாசித்து ஆய்வில் ஈடுபடுவதற்கான இணைய நூலகமாக குவெஸ்டியா விளங்குகிறது.)

குவெஸ்டியா தேடியந்திரத்தை இலவசமாக பயன்படுத்த முடியாது, கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், குவெஸ்டியாவின் அருமையை தெரிந்து கொண்டவர்களை அதை பயன்படுத்த கட்டணம் செலுத்த தயங்க மாட்டார்கள். ஏனெனில் குவெஸ்டியா மாபெரும் இணைய நூலகமாக விளங்குகிறது. ஒரு நூலகத்தில் சென்று தேவையான புத்தகத்தை தேடுவது போலவே, குவெஸ்டியா மூலம் உலகில் உள்ள புத்தகங்களை தேடலாம். புத்தகங்கள் மட்டும் அல்ல, பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றில் உள்ள கட்டுரைகளையும் தேடி வாசிக்கலாம். இவை எல்லாமே கல்வி சார்ந்தவை என்பதால், குவெஸ்டியா மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் விரும்பி நாடும் தேடியந்திரமாக இருக்கிறது.

இணையம் மூலம் புத்தகங்களை தேடும் வசதி என்றவுடன் பலருக்கும் கூகுள் வழங்கும் கூகுள் புக்ஸ் தேடல் சேவை நினைவுக்கு வரலாம். ஆம், கூகுள் புக்ஸ் போன்ற சேவை தான் குவெஸ்டியாவும். ஆனால் இந்த பிரிவில் குவெஸ்டியா தான் முன்னோடி. கூகுள் புக்ஸ் சேவை துவக்கப்படுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே குவெஸ்டியா அறிமுகமாகி விட்டது.

அது மட்டும் அல்ல, கூகுள் புக்ஸ் அனைத்து விதமான புத்தகங்களையும் டிஜிட்டல் மயமாக்கி அவற்றில் தேட வழி செய்கிறது. குவெஸ்டியா பெரும்பாலும் கல்வி சார்ந்த புத்தகங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தவிர கூகுள் புக்ஸ் போல குவெஸ்டியா காப்புரிமை விவாதத்தில் சிக்கி கொண்டதில்லை. முறைப்படி அனுமதி பெற்று கட்டணச்சேவையாக புத்தக தேடலை வழங்குகிறது.

குவெஸ்டியா 1998 ம் ஆண்டு அறிமுகமானது. அமெரிக்காவின் டிராய் வில்லியம்ஸ் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்த சேவையை துவக்கினார். வில்லியம்ஸ் தெளிவான இலக்கு மற்றும் வேட்கையுடன் இந்த சேவையை நிறுவினார். உலகில் உள்ள புத்தகங்களை இணையம் மூலம் எளிதாக தேட வழி செய்வது தான் அவரது இலக்காக இருந்தது.

சட்ட மாணவராக இருந்த போது ஏற்பட்ட அனுபவமே இதற்கான தூண்டுதலாக அமைந்ததாக வில்லியம்ஸ் பேட்டிகளில் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் புகழ் பெற்ற சட்டத்துறை சஞ்சிகையான ஹார்வர்டு லா ரீவ்யூ இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, நீதிமன்ற வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதாக தேடி முடிந்ததை வில்லியம்ஸ் கவனித்தார். அதே போல இலக்கிய புத்தகங்களை தேட வழியில்லையே எனும் ஏக்கம் உண்டானது. இந்த குறையை போக்கும் வகையில் தான் அவர் குவெஸ்டியாவை உண்டாக்கினார்.

ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை இணையம் மூலம் தேட வழி செய்யும் வகையில் இந்த சேவையை உருவாக்கினார். 1998 ல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புத்தகங்களில் தேடும் வசதி கொண்ட இணைய நூலகமாக குவெஸ்டியா அறிமுகமானது.

சட்டத்துறையில் இருந்தவர் என்பதால், வில்லியம்ஸ் காப்புரிமை சிக்கல்களை அறிந்திருந்தார். எனவே பதிப்பகங்களுடன் பேசி அனுமதி பெற்று புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கினார். அவற்றில் யார் வேண்டுமானாலும் தேடி தகவல்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தேடிய தகவல்களை முழுவதும் வாசிக்க வேண்டும் எனில் ஆண்டு சந்தா கட்டணம் செலுத்தி உறுப்பினராகி இருக்க வேண்டும். இப்படி தான் குவெஸ்டியா அறிமுகமானது.

வில்லியம்ஸ் புத்தகங்களை எல்லாம் சும்மா டிஜிட்டல் மயமாக்கிவிடவில்லை. புத்தகங்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் கவனமாக இருந்தார். சில ஆயிரம் புத்தகங்களை ஸ்கேன் செய்து இது போன்ற சேவையை வழங்க முடியாது என அறிந்திருந்தார். எனவே முதல் கட்டத்திலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் துவங்கினார். மேலும் அனுபவம் வாய்ந்த நூலகர்களை கொண்டு ஒவ்வொரு துறையிலும் உள்ள தரமாக நூல்களை தேர்வு செய்து நூலகத்தில் இடம்பெற வைத்தார். புத்தகங்கள் மட்டும் அல்லாமல், முன்னணி பத்திரிகளைகள், ஆய்விதழ்கள், சஞ்சிகளை ஆகியவற்றையும் டிஜிட்டல் மயமாக்கினார்.

விளைவு குவெஸ்டியா அறிமுகமான போதே மாணவர்கள், ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்திருந்தது. கூகுள் போன்ற பொது தேடியந்திரங்களில் புத்தகம் தொடர்பான தகவலையும் தேடிப்பெறலாம் தான். ஆனால் அவை எல்லாம் வழக்கமான பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்றது. கல்வி அல்லது ஆய்வு நோக்கில் அணுகும் போது, சரியான கட்டுரைகளும், தகவல்களும் தேவை. அவற்றின் மூலம் நூல்களை மேற்கோள் காட்டுவது சாத்தியமாக வேண்டும். கூடுதல் குறிப்புகளை பெறுவதும் சாத்தியமாக வேண்டும். குவெஸ்டியா இது எல்லாவற்றையும் செய்தது. இதன் காரணமாகவே மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

2010 ம் ஆண்டு குவெஸ்டியா சென்கேஜ் லேர்னிங் நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது.

இடைப்பட்ட ஆண்டுகளில் குவெஸ்டியா மேலும் விரிவாகி இருப்பதோடு முற்றிலும் நவீன தேடியந்திரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. குவெஸ்டியா முகப்பு பக்கத்தில் நுழைந்ததுமே இதை உணரலாம்.

இதன் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் தேவையான குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். குறிச்சொல் தவிர, முழு வாசகம், நூல் அல்லது கட்டுரையின் பெயர், நூலாசிரிய பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலாம். உடனே தேடலுக்கு பொருத்தமான புத்தகங்கள், கட்டுரைகள் தோன்றும். இந்த பொதுவான தேடல் இலவசம். தேடல் முடிவுகளின் சுருக்கங்களையும் இலவசமாகவே காணலாம். ஆனால் முழு பிரிதியையும் அணுக கட்டண உறுப்பினராக இருக்க வேண்டும்.

தேடலில் தோன்றும் முடிவுகள் மூல நூல்களாக இருக்க வேண்டும் மற்றும் பேராசிரியர்களால் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு தேடலாம். இவைத்தவிர நூலகத்தில் தேடுவது போலவே குறிப்பிட்ட வகையில், குறிப்பிட்ட தலைப்பில் உள்ள புத்தகத்தையும் தேடலாம்.

83, ஆயிரத்திற்கு மேலான புத்தகங்கள், ஒரு கோடிக்கும் அதிகமான கட்டுரைகளில் தேடும் வசதி இருப்பதாக குவெஸ்டியா தெரிவிக்கிறது.

அடிப்படை தேடல் தவிர தரவுகளை மேற்கோள் காட்டுவது, அடிக்கோடிடுவது, குறிப்புகள் எழுதுவது, கட்டுரைக்குள் தேடுவது, பொருள் காண்பது உள்ளிட்ட கூடுதல் வசதிகளையும் அளிக்கிறது. ஸ்மார்ட்போன் செயலி மற்றும் பிரவுசர்களுக்கான நீட்டிப்பு சேவையாகவும் பயன்படுத்தலாம்.

ஆய்வு மாணவர்களுக்கு என கூடுதல் வசதிகளும் இருக்கின்றன. குறிப்பிட்ட பொருளில் தானாக கூடுதல் தவல்களை தேடி விரிவாக்குவது, தொடர்புடைய புத்தகங்களின் மேற்கோள் பட்டியலை தயாரிப்பது உள்ளிட்ட வசதிகளையும் அளிக்கிறது. இந்த வசதிகளை நீள் அகலங்களை ஆய்வாளர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

பள்ளி மாணவர்களுக்கு என குவெஸ்டியா ஸ்கூல் சேவையும் இருக்கிறது.

தேடியந்திர முகவரி: https://www.questia.com/

Leave a Reply