இணைய வழி பணப் பரிவர்த்தனை: நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
நாளுக்கு நாள் இணைய வழி பணப் பரிவர்த்தனை செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல இணையம் சார்ந்த பணத் திருட்டும் பரவலாகி வருகிறது. இந்நிலையில், இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
> பொது இடங்களில் இருக்கும் வை-ஃபை இணைப்புகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருங்கள். நம்பகம் இல்லாத, பலரால் பயன்படுத்தப்படும் ஓர் இணைய அமைப்பில் அச்சுறுத்தல்களுக்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால் பாஸ்வேர்ட் பாதுகாப்பு இல்லாத இணைய இணைப்புகளில் இத்தகைய பரிவர்த்தனையை தவிர்த்தல் நலம்.
> பொதுவான கம்ப்யூட்டர் பயன்பாடு: அலுவலகம், பிரவுசிங் மையங்கள் என பலர் பயன்படுத்தும் பொதுவான கம்ப்யூட்டர்களில் பணப் பரிமாற்றங்களை தவிர்த்துவிடுங்கள். முக்கிய, தனிப்பட்ட பணப் பரிவர்த்தனைக்கு தனிப்பட்ட, சொந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.
> ஒன் டைம் பாஸ்வேர்ட்: பரிவர்த்தனையின் போது ஒன் டைம் பாஸ்வேர்ட் (One Time Password) முறையையே தேர்ந்தெடுக்கவும். அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்படும் 3டி பின் முறையை விட இது அதிக பாதுகாப்பான முறையாகும்.
> HTTPS: இணைய முகவரியில் HTTPS என்ற பாதுகாப்பு நெறிமுறை இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். இது அந்த இணையத்தளத்தில் பயனர் மற்றும் பரிவர்த்தனைத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கான அங்கீகாரமாகும். பாதுகாப்பான பணப் பரிமாற்றத்துக்கான தளங்களில் பச்சை நிற ஸ்டிக்கர் இருக்கும். தளத்தின் முகவரி http அல்லது www என்று ஆரம்பிக்காமல் HTTPS என்று ஆரம்பிக்கும்.
> ஃபயர்வால் மற்றும் ஆன்டி வைரஸ்: மேம்படுத்தப்பட்ட வலிமையான ஃபயர்வால் மற்றும் ஆன்டி வைரஸ் மென்பொருளை பயன்படுத்தும்போது ஹாக்கிங் அல்லது புதிய வகை மோசடி முயற்சிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த மென்பொருள்கள் அடிக்கடி நமது கருவியில் வைரஸ் இருக்கிறதா என்பதை ஆராயும். மேலும், தேவையற்ற விளம்பரங்களை (ad block) முடக்குவதற்கான மென்பொருள்களும் கை கொடுக்கும்.
> பரிமாற்றங்கள் பல, பாஸ்வேர்ட் ஒன்று: பலருக்கு பாஸ்வேர்டுகளை நியாபகத்தில் வைத்துக் கொள்வது கடினம் என்பதால், பல்வேறு கணக்குகளுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவார்கள். இது இணைய வழி வங்கிக் கணக்கிலிருந்து, கிரெடிட் கார்ட் பயன்பாடு வரை இருக்கும். இதனால் ஹாக்கர்கள் உங்கள் ஒரு பாஸ்வேர்டை களவாடினால் அதை வைத்தே உங்கள் அனைத்து கணக்குகளையும் கையில் எடுத்துக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்ட் பயன்படுத்துவதே சிறந்தது.