இண்டர்நெட் பெட்ரூமை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
இணையத்தில் தகவல்கள் தேடலாம், ஷாப்பிங் செய்யலாம், வேலைவாய்ப்புக்கு வலைவீசலாம், வீடியோ பார்க்கலாம், இசை கேட்கலாம், அரட்டை அடிக்கலாம். எல்லாம் சரி, இணையத்தில் தூங்க முடியுமா?
இணையத்தில் தூங்கலாம் வாங்க என்று அழைப்பு விடுப்பதற்காகவே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக என்றே ஒரு இணையதளமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இணையதளத்தின் பெயர், வேறென்ன? இணைய படுக்கையறைதான் – Internet Bedroom!
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பிரிண்ட் ஸ்கிரீன் கண்காட்சியின் ஒரு பகுதியாக, இந்த இணையப் படுக்கயறை அமைக்கப்பட்டிருந்தது. ஆர்வம் உள்ளவர் வாருங்கள், வீடியோ அரட்டை அடியுங்கள், அப்படியே தூங்கிவிடுங்கள், அவ்வளவுதான் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தின் இணை நிறுவனரான கென்சுகி செம்போ (Kensuke Sembo ) இணையம் ஒரு போதும் தூங்குவதில்லை என்று அறிந்தபோதுதான் இந்த யோசனை பிறந்ததாக மதர்போர்டு இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். “ ஜப்பானிய மக்கள் தூங்கத் தொடங்கும்போது, நியூயார்க்கில் உள்ளவர்கள் விழித்துக்கொள்கின்றனர்” என்று கூறுபவர், “ இணையத்திற்குத் தூக்கம் தேவை, அப்போதுதான் இயல்பான இடமாக இருக்கும் என நினைத்தோம்” என்கிறார்.
எல்லாம் சரி, இணையத்தில் எப்படித் தூங்குவது என்று கேட்கலாம். எப்படி என்றால் வெப்கேம் வழியாகத்தான். நிகழ்ச்சி நடைபெற்ற கண்காட்சி அரங்கில் தூங்குவதற்கு என்றே அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. நேரடியாக வர முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே கூகுள் ஹாங்கவுட் மூலம் தூக்கத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.- http://idpw.org/bedroom/000002 /
இந்த அமைப்பின் முதல் இணையத்தில் தூக்கம் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. கடந்த மாதம் இஸ்ரேலில் நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது என இண்டெர்நெட் பெட்ரூம் இணையதளம் தெரிவிக்கிறது.
இரவு உடை அணிந்து வாருங்கள், ரிலாக்ஸ்டாக இருங்கள், உங்கள் லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் நுழைந்து கூகுள் ஹாங்கவுட் மூலம் இணையப் படுக்கையறையில் தூங்குங்கள் என, இணையத் தூக்கத்துக்கான வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது.