இதயத்துக்கு இதம் தரும் தாமரை விதைகள்!
தேசிய மலரான தாமரை இந்தியாவில்தான் அதிகம் பயிராகிறது என்றாலும், தற்போது தெற்காசியக் கண்டத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள் ஆச்சர்யமூட்டக் கூடியவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீனா மற்றும் கம்போடியாவில் தான் இவை அதிகமாகக் கிடைக் கின்றன. சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும், ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் இவற்றின் ஆரோக்கியப் பலன்கள் பற்றியும் எந்தளவுக்கு இவற்றை உண்ணலாம் என்பது பற்றியும் தெரியாமல் இருக்கின்றோம் என்பதே உண்மை. அவை குறித்து இங்கே பார்ப்போம்.
ஊட்டச்சத்தின் அளவு
100 கிராம் தாமரை விதைகளில் சுமார் 350 கலோரிகள், 63-68 கிராம் கார்போஹைட்ரேட், 17-18 கிராம் புரதம், 1.9-2.5 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளன; மீதமுள்ளவை தண்ணீர் (சுமார் 13 சதவிகிதம்) மற்றும் தாதுக்கள். முக்கியமாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் குறைவாகவே உள்ளன.
தாமரை விதையின் பலன்கள்
வயிற்றுப்போக்கு
நீண்ட, நாள்பட்ட வயிற்றுப்போக்கைத் தடுக்க உதவுகிறது. எனவே, மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் இதை உட்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
இதய நோய்கள்
நமது உடலில் குறைந்தளவு மக்னீசியம் இருந்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. இதய நோய் ஆபத்துகளும் குறைகின்றன.
ரத்த அழுத்தம்
தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.
ஆன்டிஏஜிங் பண்புகள்
இவற்றில் செல் முதிர்ச்சி அடைவதைத் தாமதப்படுத்தும் என்சைம்கள் உள்ளன. மேலும், சேதமடைந்த புரதங்களுக்கு இந்த என்சைம்களை அளித்து உதவவும் செய்கின்றன. இதன் காரணமாக, பல அழகு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்களில் தாமரை விதையின் ஆன்டிஏஜிங் என்சைம்களைச் சேர்க்கின்றன.
மனச்சோர்வு குறைக்கும் காரணி
இவை மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன. அமைதியின்மை மற்றும் பதற்றத்துடன்கூடிய மனஅழுத்தம் ஆகியவற்றுக்குப் பாரம்பர்ய சிகிச்சைகளில் தாமரை விதை பயன்படுத்தப் படுகிறது.
உண்ணும் முறை
தற்போது எல்லா மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் உலர்ந்த தாமரை விதைகள் கிடைக்கின்றன.அவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து சூப்புகள், சாலட்டுகள் அல்லது மற்ற உணவுகளில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளலாம். உலர்ந்த தாமரை விதைகளை பாப்கார்னைப்போல வறுத்துச் சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம்.