இந்தியாவில் 101 பில்லியனர்கள்! முகேஷ் அம்பானி டாப்!
இந்தியாவில் மொத்தம் 101 பில்லியனர்கள் இருப்பதாக, ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் 2,043 கோடீஸ்வரர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு 7.767 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். உலகம் முழுவதும் கோடீஸ்வர்களின் எண்ணிக்கை 18 சதவிகிதம் ஆகும். இதில், 86 பில்லியன் அமெரிக்க டாலருடன் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின், வாரன் பஃபெட் உள்ளார். அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் மூன்றாவது இடம், ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் ஐந்தாவது இடம், ஆரக்கிளின் லாரி எலிசன் ஏழாவது இடம் என்று டாப் டென் லிஸ்ட்டில் டெக்கீஸ்களின் ஆதிக்கமே அதிகம்.
குறிப்பாக, இந்தியாவில் 101 பில்லியனர்கள் இருக்கிறார்களாம். இதில் முகேஷ் அம்பானி முதல் இடம். அவரது சொத்து மதிப்பு 23.3 பில்லியன் டாலர். முதல்முறையாக, இந்த ஆண்டு, இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 544-வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டாலர் ஆகும். குறிப்பாக, பில்லியனர்கள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. அங்கு மொத்தம் 565 பில்லியனர்கள் இருக்கிறார்கள். 319 பில்லியனர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 114 பில்லியனர்களுடன் ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு இந்தப் பட்டியலில் நான்காவது இடம்.