இந்தியாவில் 5ஜி வெளியீடு – நோக்கியா உபகரணங்களை பயன்படுத்தும் ஜியோ

ஆகஸ்ட் மாத வாக்கில் நடத்தப்பட்ட ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச அளவில் நெட்வொர்க் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உபகரணங்களை பல ஆண்டுகள் வழங்குவதற்கான உரிமத்தை வென்று இருப்பதாக நோக்கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இதை அடுத்து இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம் பேஸ் ஸ்டேஷன்கள், அதிக திறன் கொண்ட 5ஜி MIMO ஆண்டெனா, பல்வேறு ஸ்பெக்ட்ரம் பேண்ட்களை சப்போர்ட் செய்யும் ரிமோட் ரேடியோ ஹெட்கள், நெட்வொர்க் மென்பொருள் உள்ளிட்டவைகளுக்கான உபகரணங்களை நோக்கியா வினியோகம் செய்ய இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ மட்டுமின்றி ஏர்டெல் நிறுவனத்திற்கும் நோக்கியா தனது ஜி உபகரணங்களை வழங்க இருக்கிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளின் பீட்டா சோதனையை- மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் துவங்கி இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த சேவை மேலும் அதிக நகரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்க இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக ரிலையன்ஸ் குழும ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்-ஐ வழங்க திட்டமிட்டு இருப்பதாக நோக்கியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ மேம்பட்ட 5ஜி சேவைகளை வழங்க முடியும்.