இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: எச்சரிக்கும் ஆ.ராஜா
மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல் என நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ஆ. ராஜா, ‘பாஜக ஆட்சியில், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய இந்தியாவின் முக்கிய மூன்று கூறுகளுக்கும் ஆபத்து வந்துள்ளது. இந்துத்துவாவுக்கு எதிரான கருத்துகளைச் சொன்னால் எங்களைக் கொல்ல வருகிறார்கள். கவுரி லங்கேஷ், கல்புர்கி, நரேந்திர தபோல்கர் உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள் இதனால் கொல்லப்பட்டனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இன்று ஆபத்து வந்துள்ளது. அதன் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் மூடுகிறார்கள். ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் என்ற தொழிற்சாலையை மூடி விட்டனர். அதனை புதுப்பிக்க காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிக் கொடுத்த 300 கோடி ரூபாயையும் ‘ஸ்வாஹா’ செய்து விட்டனர். இப்படியே போனால், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தையும் மூடி விடுவார்கள் அல்லது தனியாருக்கு தாரை வார்த்து விடுவார்கள். இந்தியாவை இந்து நாடாக்குகின்றனர்.
பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல். அரசியல் சட்டத்தைக் கொளுத்திவிட்டு, அதிபர் ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவர். சமூக நீதி இருக்காது. இந்தியா இந்து தேசமானால், பாகிஸ்தானில் என்ன நிலைமையோ அதுதான் இங்கும் ஏற்படும்.
இவ்வாறு ஆ.ராசா பேசினார்.