இந்தியாவை இந்தி இணைக்காது; பிஎஸ்என்எல் தான் இணைக்கும்: புதுச்சேரி எம்பி
இந்தியாவை இந்தி மொழி ஒருங்கிணைக்காது என்றும் இந்திக்கு பதில் பிஎஸ்என்எல் 4 ஜி இணைப்பை எல்லோருக்கும் கொடுத்தால் இந்தியா ஒருங்கிணையும் என்றும் அதனால் பிஎஸ்என்எல் 4 ஜி இணைப்பை கொடுங்கள் என்றும் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பிஎஸ்என்எல் அரசின் நம்பிக்கையான நிறுவனம். இந்திய அரசும், மக்களும் முழுமையாக நம்பக்கூடிய நிறுவனம். ஆதிகாலத்தில் இருந்து தொலைபேசியை மக்களுக்கு கொடுத்த நிறுவனம். அந்த நிறுவனம் இன்றைய தினம் எப்படி உள்ளது? மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை போல் பிஎஸ்என்எல் மலர வேண்டும் என்றால், அவைகளுக்கு ஏற்றார்போல வசதிகளை தர வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருக்கின்றனர். குறிப்பாக 4ஜி அலைவரிசை கட்டமைப்பை கொடுத்தால்தான் மற்ற நிறுவனங்ளுடன் போட்டிப் போட்டு வளர முடியும் என்ற நிலை உள்ளது.
இதனை புதுச்சேரி மக்களின் நன்மைக்காக மத்திய அரசிடம் கண்டிப்பாக எடுத்துச் சொல்வேன். அதேபோல் இங்கு பணியாற்றும் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் நிலுவை இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்க உள்ளேன். மக்களிடம் நான் கேட்டுக்கொள்வதுதெல்லாம் பிஎஸ்எல்எல் இணைப்பினை பெற்று முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார். அப்போது, இந்தியாவின் ஒரே மொழி இந்தி என மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இந்தி இந்தியாவை ஒருங்கிணைக்காது. பிஎஸ்என்எல் தான் ஒருங்கிணைக்கும். எனவே பிஎஸ்என்எல்-க்கு 4 ஜி-ஐ முதலில் கொடுங்கள்,” என்றார்.