இந்தியா டாக்டர்களை உருவாக்குகிறது, பாகிஸ்தான் ஜிகாதிகளை உருவாக்குகிறது: சுஷ்மா ஸ்வராஜ்
இந்தியா டாக்டர்களையும் பொறியாளர்களையும் உருவாக்கி வரும் நிலையில் பாகிஸ்தான் ஜிகாதிகளையும் தீவிரவாதிகளையும் உருவாக்கி வருவதாக ஐ.நா.வில், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நேற்றிரவு பேசிய சுஷ்மா ஸ்வராஜ், அதிகரிக்கும் வன்முறை, தீவிரவாதம், பருவநிலை மாற்றம் ஆகிய சவால்களை, உலகம் சந்தித்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
தீவிரவாதம், மனித இனத்திற்கு மிகப்பெரும் ஆபத்து என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறிய அவர், காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளை நிச்சயம் நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கி, இந்தியா தகவல் தொழில்நுட்ப வல்லரசாக உருவாகி வரும் வேளையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளை மட்டுமே உருவாக்கி வருவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் சாடினார்.
இது குறித்து, உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, இந்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களையும் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகியவை இந்தியாவில் செயல்படுத்தப்படுவதாகவும், ஐ.நா.பொதுக்கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.