இந்திய பொறியியல் பணித் தேர்வுக்கு அக்டோர்பர் 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் இந்தியப் பொறியியல் பணித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வானது 2017 ஜனவரி 8-ஆம் தேதியன்று நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதியாகும்.
யு.பி.எஸ்.சி. இந்திய குடிமைப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ்) தேர்வுகளைப் போல் இந்தியப் பொறியியல் பணித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.
இதில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்பவர்களுக்கு, ஐஏஎஸ், ஐபிஎஸ்-களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு எப்போது? இப்போது இந்திய பொறியியல் பணி முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானது 8-1-2017 அன்று நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 26-10-2016 கடைசித் தேதியாகும்.
தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற யு.பி.எஸ்.சி. இணைய தளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: நான்கு ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
மேலும், வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ இயற்பியல் அல்லது ரேடியோ பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை சிறப்புப் பாடமாகக் கொண்டு எம்.எஸ்சி. முடித்தவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரையுடையவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை அளிக்கப்படும்.
என்ன பதவி? சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
இதில் தகுதி பெறுபவர்கள் இந்தியன் ரயில்வே, ராணுவம், கப்பல் படை, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலை, நில அளவைத் துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் உதவி செயற் பொறியாளர் பணி அல்லது அதற்கு இணையான பதவியில் பணியமர்த்தப்படுவர்.