இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்திய ரிசர்வ் வங்கி, உதவியாளர் பதவியில் 623 காலியிடங்களை நேரடி நியமன முறையில் தேர்வுசெய்திட அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் கூடுதலாக அடிப்படைக் கணினி அறிவும் தேவை. வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைப்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு வயது 33 வரையும் ஓ.பி.சி. வகுப்பினருக்கு 31 வரையும் இருக்கலாம். உடல் ஊனமுற்றோருக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்த்தப்படும்.

பணியும் பதவியும்

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகளும் ஆன்லைன் வழியில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், கணிதம் ஆகிய பகுதிகளில் (முதன்மைத் தேர்வில் கூடுதலாகப் பொது அறிவு, கணினி அறிவு) ‘அப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்படும். உரிய கல்வியும் வயதுத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் (www.rbi.org.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இன்றைய நிலையில், உதவியாளர் பதவிக்குச் சம்பளம் ரூ.32,528 கிடைக்கும். சம்பளத்தோடு அலுவலகக் குடியிருப்பு வசதி, மருத்துவச் செலவினங்களுக்கான தொகையைத் திரும்பப் பெறும் வசதி, இலவச மருத்துவ வசதி, நாளிதழ்கள், புத்தகங்கள் வாங்க பணம், குறைந்த வட்டியில் வீட்டுவசதிக் கடன், கார் வாங்க கடன் என ஏராளமான சலுகைகளையும் பெறலாம். மேலும், பதவி உயர்வுக்கான தேர்வெழுதி படிப்படியாக உயர் பதவிக்கும் செல்லலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டம், தேர்வு மையம், தேர்வுக்காக எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கு இலவச பயிற்சி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

முக்கியத் தேதி

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 10

முதல்நிலைத் தேர்வு: நவம்பர் 27, 28

முதன்மைத் தேர்வு: டிசம்பர் 20

Leave a Reply