இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய்: வெனிசுலா அதிரடி முடிவு
கச்சா எண்ணெயை உலக நாடுகள் அனைத்தும் டாலரில் வாங்கி கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஈரான் கச்சா எண்ணெயை டாலரில் விற்பனை செய்ய போவதில்லை என்றும், இந்திய ரூபாயில் விற்பனை செய்ய தயார் என்றும் அறிவித்தது. இந்த நிலையில் ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன் வந்துள்ளது. இதனால் அமெரிக்காவின் டாலர் பிரச்சினை இல்லாமல், இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யவும், பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெயை பெறவும் இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாகும் என கூறப்படுகிறது
கடந்த சில மாதங்கலுக்கு முன் வெனிசுலா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் வெனிசுலா நாடு பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார சிக்கலை சீர்படுத்த வெனிசுலா அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
அமெரிக்காவின் தடை உள்ளபோதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையிலும், இந்திய ரூபாயிலும் இந்தியா வாங்கி வரும் நிலையில் இதேபாணியில் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வெனிசுலா முன் வந்துள்ளது. இதற்காக வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் டாலருக்கு வேலையில்லாமல் இந்திய ரூபாய் மதிப்பிலேயே கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்படும்.