இந்த கோவிலுக்கு சென்றால் வழக்குகள் தீரும்… வாழ்க்கை செழிக்கும்!
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் செய்துங்கநல்லூர். முற்காலத்தில் திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வழியில் தங்குவதற்கான அன்னதான மண்டபம் ஒன்று இங்கிருந்தது என்கிறார்கள். பக்தர்கள் அங்கு தங்கியிருந்து உணவு சமைத்து உண்டு, களைப்பாறிவிட்டுச் செல்வார்களாம். அதாவது, செய்து உண்டு தங்குவதற்கு உகந்த நல்லூர் என்பதால் ‘செய்துங்கநல்லூர்’ என்று பெயர்வந்ததாகச் சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
சரித்திரம் சார்ந்த இன்னொரு காரணமும் உண்டு. அதாவது முன்னர், ‘முறம்புநாட்டு திருவரங்க சதுர்வேதிமங்கலம்’ என்ற பெயருடன் திகழ்ந்த இந்த பகுதி, செய்துங்க மகாராஜா என்ற அரசனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததாம். அவரது பெயராலேயே செய்துங்கநல்லூர் என்ற பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள்.
எது எப்படியோ, இன்றைக்கும் திரள் திரளாக தன்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் அல்லவை நீக்கி நல்லவை அருளும் நல்லூராகவே திகழ்கிறது இவ்வூர். அதற்குக் காரணம், இவ்வூரின் ஒரு பகுதியான ஐயனார்குளப்பட்டியில் அருளாட்சி நடத்தும் சுந்தரபாண்டிய சாஸ்தா!
சாபத்தால் கல்லான சாஸ்தா!
இவ்வூருக்கு மேற்கே இருந்த ‘சிவந்திபட்டி’ எனும் ஊரில் வசித்த பெண்ணொருத்தி, தினமும் செய்துங்கநல்லூர் பகுதிக்கு வந்து பாலும் மோரும் விற்பனை செய்வாள். ஒருநாள் அவள் இவ்வழியே வரும்போது கல் இடறி தடுமாற, தலைக்குமேல் வைத்திருந்த பாலும் மோரும் தரையில் சிந்தின. அன்று மட்டுமின்றி, ஒரு வார காலமாகத் தொடர்ந்தது இந்த நிகழ்வு. அதனால் பயந்துபோன மோர்க்காரி, ஒரு வாரத்துக்குப் பிறகு தன் மகனையும் வழித் துணையாக அழைத்து வந்தாள்.
குறிப்பிட்ட இடம் வந்ததும் வழக்கம்போல் கல் இடறியது. உடனே அவளுடைய மகன், இரும்புத் தடியால் அந்தக் கல்லை இடித்துப் பெயர்க்க முயன்றான். ஆனால், அவன் கல்லின் மீது ஓர் அடி அடித்ததும், அதிலிருந்து ரத்தம் பீறிட்டு பொங்கியது. அவ்வளவுதான், தாயும் மகனும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்கள். மெள்ள மெள்ள மயக்கம் நீங்கி அவர்கள் கண் விழித்தபோது, ஓர் அசரீரி ஒலித்தது. ‘நான்தான் சுந்தர பாண்டிய சாஸ்தா. மேற்கு தேசத்தில் என் தர்மபத்தினியான பூரணாவுக்குத் தெரியாமல் புஷ்கலையை காந்தர்வ விவாஹம் செய்துகொண்டேன். இதை பூரணாவிடம் தெரிவித்து அவளை சமாதானம் செய்யலாம் என்று பயணப்பட்டேன். ஆனால், இந்த விஷயத்தை முன்னதாகவே அறிந்து கொண்ட பூரணா என்னைச் சபித்ததால், கல்லாக மாறினேன்’’ என்ற அசரீரி தொடர்ந்து, ‘‘இந்த பகுதிக்கு அக்னி மூலையில் இருக்கும் ‘இரட்டை புளிக்காடு’ எனும் இடத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் தொன்றுதொட்டு என்னை வழிபட்டு வருகிறது. அவர்களைக் கொண்டு கைங்கரியங்கள் செய்தால், எல்லோருக்கும் அனுகூலம் நல்குவேன்’’ என்றது. அசரீரி வாக்கைக் கேட்ட அம்மாவும் மகனும் சிறிதும் தாமதிக்காமல் சென்று, ஊர்ப் பெரியவர்களிடம் நடந்ததை விளக்கினார்கள்.உடனே, அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற ஊர்க்காரர்கள், கல்லாக இருந்து ரத்தம் பீறிட்ட ‘சுயம்பு சுந்தர பாண்டிய சாஸ்தாவை’ எடுத்து, கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். அன்றிலிருந்து இன்று வரை, அம்மக்களின் காவல் தெய்வமாக அருள்புரிந்து வருகிறார் சுந்தரபாண்டிய சாஸ்தா.
ஆழிப்பூதத் தேவர்
சபரிமலையில் இருப்பது போன்றே இத்தலத் திலும் துவார பாலகர்கள் கருவறைக் காவலர்களாக அருள்பாலிக்கிறார்கள். பெரும்பாலான தலங் களில் பூரணை-புஷ்கலா தேவியருடன் தம்பதி சமேதராகக் காட்சியளிக்கும் சாஸ்தா, இந்த ஊரில் அம்பாளின் சாபத்தின் காரணமாக, தனியே காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பம்சம் என்கிறார்கள்.
இவருடைய காவல் பரிவார தெய்வமான ‘ஆழிப்பூதத்தேவர்’ விஸ்வரூப தரிசனத்தில் கோயில் எல்லையில் காட்சி தருகிறார். மேலும் தளவாய் மாடசாமி, மாடத்தி, கருத்தசாமி, கருத்த அம்பிகாசாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி, இசக்கியம்மன், சுடலைமாடன், சுடலை மாடத்தி, பாதாளகரண்டி அம்பாள், பலவேஷக்கார சாமி, வன்னியசாமி, வன்னியச்சி, முண்டன்சாமி, சப்த கன்னியர் ஆகியோரையும் இங்கே தரிசிக்க முடிகிறது.
இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வேம்புத்துரை என்ற பக்தர் நம்மிடம் பேசியபோது, “நீதிமன்ற வழக்கு பிரச்னை இருக்கிறவங்க இக்கோயிலுக்கு வந்து வேண்டினால் பிரச்னைகள் அனைத்தும் சுமுகமாகத் தீரும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர், சுந்தரபாண்டிய சாஸ்தாவை மனமுருகி வேண்டினால் புத்திர பாக்கியம் எளிதில் கிடைக்கும்” என்றார்.
இன்னொரு பக்தரான சுடலைமுத்துவின் வேண்டுதல் சுவாரஸ்யமானது. “எங்கள் தோட்டத்தில் பிறக்கும் நாய்க்குட்டிகள் ஒருநாள்கூட உயிர் தங்காமல் இறந்துவிடும். மனம் நொந்து போனோம். சாஸ்தாவை வேண்டிக்கிட்டு, ஒரு நாய் சிலை செய்து எடுத்து வந்து கோயிலில் வைத்தோம். அதற்குப் பிறகு நாய்க்குட்டிகள் உயிர்ச்சேதம் இல்லவே இல்லை. அதேமாதிரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யணும்னு சாஸ்தாவிடம் இருந்து உத்தரவு கிடைத்தது. என்னோட பொருளாதாரச் சூழலில் அது சாத்தியமான்னு தயங்கினேன். ஆனால் சாஸ்தாவின் அருளால், இப்போ எந்தக் குறையுமில்லாமல் தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறேன்’’ என பூரிப்புடன் பகிர்ந்து கொண்டார் சுடலைமுத்து.
பங்குனி உத்திரத்தில் பாலபிஷேகம்
பங்குனி உத்திரம் சாஸ்தாவின் அவதார தினம் என்பதால், இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஊர்மக்கள் அனைவரும் ‘பால் குடம்’ ஏந்தி வந்து, சாஸ்தாவுக்கு அபிஷேக ஆராதனை செய்கிறார்கள். அத்துடன் அன்று சுந்தரபாண்டிய சாஸ்தாவுக்கு பொங்கலிட்டு படைத்து வழிபட்டால், பொங்கல் பொங்குவது போல் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிப்பெருகும் என்பது நம்பிக்கை.
பிரார்த்தனைச் சிறப்பு: அவரவர் பிறந்த நட்சத்திர நாள்களில் இங்கு வந்து சாஸ்தாவுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், இன்னல்கள் யாவும் நீங்கும். மேலும், பங்குனி உத்திர நாளன்று பாற்குடம் எடுத்துவந்து அபிஷேகம் செய்து வழிபடுவது வெகுவிசேஷம்.
எப்படிச் செல்வது: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளில் ஏறினால், சுமார் 40 நிமிட நேர பயணத்தில் செய்துங்கநல்லூரை அடையலாம். வழியிலேயே சிற்பச் சிறப்பு மிக்க கிருஷ்ணாபுரம் கோயிலையும் தரிசிக்க இயலும். மேலும் செய்துங்கநல்லூரைத் தாண்டி வைகுண்டம், இரட்டைத் திருப்பதி, ஆழ்வார்திருநகரி ஆகிய தலங்களையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
நடை திறந்திருக்கும் நேரம்: திருக்கோயிலின் நடை தினமும் காலை 9 மணியிலிருந்து 11 வரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து 6.30 வரையிலும் திறந்திருக்கும்.