இந்த கோவிலுக்கு சென்றால் பேச்சு குறைபாடு நீங்கிவிடுமாம்!

இந்த கோவிலுக்கு சென்றால் பேச்சு குறைபாடு நீங்கிவிடுமாம்!

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு மகிமை ஒரு சக்தி உண்டு. அந்த வகையில் பேச்சில் குறைபாடு இருந்தால் அந்த குறைபாட்டை நாகை மாவட்டத்தில் உள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயம் நீக்கிவிடுமாம். இந்த கோவில் குறித்து தற்போது பார்ப்போம்

நாகை மாவட்டத்தில் 11 வைணவ திருப் பதிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கக்கூடிய தலம் திருநாங்கூர். இந்த ஊரில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுதினம், 11 பெருமாளும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தருவார்கள். இதுவே ‘கருடசேவை’ ஆகும். இந்த உற்சவம் இன்றும் தொடர்ந்து வைணவ பக்தர்களால் பற்பல சிறப்புகளோடு நடை பெற்று வருவது இத்தலத் தின் சிறப்பம்சமாகும்.

இந்த ஊரைச் சுற்றி 11 சிவதலங்களும் உள்ளன. அந்த 11 ஆலயங்களில் ஒன்று தான் மதங்கீஸ்வர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மதங்கீஸ்வரர். இறைவி பெயர் ராஜமாதங்கீஸ்வரி. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பை தாண்டியதும் விஸ்தாரமான பிரகாரம். வலது புறம் இறைவியின் தனி ஆலயம்.

இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத்தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதியாம்.

பின் மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை உடுத்தச் செய்து சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு அன்னைக்கு பாலாபிஷேகம் செய்யும் போது, அன்னையின் மேனியில் வழியும் பால் பச்சை நிறமாக காட்சி தருவது பக்தர்களை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சம் வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்களாகும். இவை தெற்கு பிரகாரத்தில் உள்ளன.

மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக் கின்றனர். எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் மதங்கீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்

இந்த கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், சீர்காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.

Leave a Reply