இந்த செங்கல்லை பயன்படுத்தினால் பூசவே வேண்டாம்!
கட்டுமானப் பொருட்களுள் முக்கியமானது செங்கல். இந்தச் செங்கல்லுக்கு மாற்றாகப் பலவிதமான கட்டுமானக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிஎல்சி, கான்கிரீட் ப்ளாக் எனப் பலவிதமான கற்கள் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இம்மாதிரியான மாற்றுக் கட்டுமானக் கற்களுள் ஒன்றுதான் இண்டர்லாக் கட்டுமானக் கல் (Interlock Bricks).
மரபான கட்டுமானத்துக்குச் செங்கல்தான் அதிகமாக இப்போதும் பயன்பட்டு வருகிறது. செங்கல் தயாரிப்புக்கு மண் மட்டும் போதுமானதல்ல. அதைச் சுடவைக்க அதிக அளவு வெப்பமும் தேவைப்படும். இதற்காக விறகுகள் எரிபொருளாகப் பயன்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் இருவிதத்தில் பாதிக்கப்படுகிறது. ஆனால், இந்த இண்டர்லாக் கல் தயாரிப்புக்கும் மண் தேவைப்படும். ஆனால், அதைச் சூடாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் வெப்ப ஆற்றல் மிச்சம். மேலும் இண்டர் லாக் தயாரிப்பு முறையும் மிக எளிது.
இண்டர்லாக் கட்டுமானக் கல் தயாரிப்பு முறை
இண்டர்லாக் முறை என்பது கட்டுமானக் கல்லை ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பள்ளம், மேடுடன் உருவாக்கப்படும். உதாரணமாக மின் ப்ளக்குகளில் உள்ளதுபோல ஆண், பெண் ப்ளக்குகள் எனக் கொள்ளலாம். இரு கல்லையும் சிமெண்ட் உதவியின்றி இணைக்கும்படி இருக்கும். இதற்காக பிரத்யேக அச்சு தயாரிக்கப்படும். இந்த அச்சு இண்டர்லாக் கட்டுமானக் கல்லுக்கான அளவும் மேடு, பள்ளத்துடனும் இருக்கும்.
முதலில் இண்டர்லாக் கட்டுமானக் கல்லுக்கு அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் மண்ணையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக செம்மண் அதிகமாகக் கிடைக்கும் பகுதியில் செம்மண்ணையே பயன்படுத்துகிறார்கள். செம்மண்ணைத் தெளித்து வரும் பொடி மண்ணைத் தனியாகவும், பரு மண்ணைத் தனியாகவும் பிரித்துக்கொள்ள வேண்டும். பரு மண்ணை க்ரஷரில் இட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மண்ணுடன் பொடி மண்ணையும் 50:50 என்ற விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மண் கலவையுடன் 90:10 என்ற விதத்தில் சிமெண்டைக் கலக்க வேண்டும். அதாவது பத்து சட்டி மண்ணுக்கு ஒரு சட்டி சிமெண்ட் என்ற விதத்தில் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையுடன் சிறிதளவு ரசாயனம் ஒட்டுத் தன்மைக்காகச் சேர்க்க வேண்டும்.
பிறகு இந்தக் கலவையை அச்சில் இட்டு, அதை 1,500 கிலோ அழுத்தம் தரக்கூடிய இயந்திரத்தில் வைத்து அழுத்த வேண்டும். இப்போது அச்சிலிருக்கும் மண் கலவை, கட்டுமானக் கல் அமைப்பில் வெளிவரும். இதை ஒரு வாரம் வரை உலர்த்த வேண்டும். அதற்குப் பிறகு இதை அப்படியே கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
# இண்டர்லாக் கட்டுமானக் கல் பயன்படுத்துவதன் மூலம் சிமெண்ட் பயன்பாடு குறையும்
# கட்டுமானக் கம்பியின் பயன்பாடும் குறையும்
# கட்டுமானக் கல்லைக் கையாள்வது எளிது.
# சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
# மரபான செங்கல்லைவிடத் தாங்குதிறன் அதிகம்
# இண்டர்லாக் கட்டுமானக் கல்லுக்கு மேற்புறம் சிமெண்ட் பூச வேண்டிய அவசியம் இல்லை.
பயன்படுத்தும் முறை
இண்டர்லாக் கட்டுமானக் கல்லை மரபான செங்கல்லை அடுக்குவதுபோல இதை அடுக்க வேண்டும். ஆனால், இந்த இண்டர்லாக் கட்டுமானக் கல்லை இணைக்க சிமெண்ட் தேவையில்லை. ஒவ்வொரு கல்லிலும் உள்ள மேடு, பள்ளங்களை இணைத்துக்கொண்டே வந்தால் போதுமானது.
இணைத்து முடித்த பிறகு கடைசியாக இந்தக் கட்டுமானக் கல்லின் மேல் பாகத்தில் உள்ள துளையின் வழியாக சிமெண்ட் கலவையை ஊற்றினால் போதுமானது. மேலும் இண்டர்லாக் கல் பயன்படுத்திக் கட்டிய கட்டுமானத்துக்கு மேற்புறப் பூச்சும் தேவையில்லை. அப்படியே வண்ணம் பூச முடியும். இண்டர்லாக் கட்டுமானக் கல் ரூ.16யிலிருந்து சந்தையில் கிடைக்கிறது.