இந்த மாதம் மரணத்திற்கு இலக்கியப் பசியா? வைரமுத்து இரங்கல்
தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியும் எழுத்தாளருமான கருணாநிதியின் மறையில் இருந்தே தமிழக மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் இன்னொரு முதுபெரும் அரசியல்வாதியும் இலக்கியவாதியுமான வாஜ்பாய் நேற்று காலமானார். இந்த இரு இலக்கியவாதிகளின் மறைவு குறித்து கவியரசர் வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
இந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும் ஒரு கவிஞருக்குமென்று இரண்டு மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இந்த மாதம் மரணத்திற்கு இலக்கியப் பசி போலும். தெற்கே ஓர் இமயமாகத் திகழ்ந்த கலைஞரையும், வடக்கே ஒரு கடலாகத் திகழ்ந்த வாஜ்பாயையும் ஒரே மாதத்தில் உண்டு முடித்திருக்கிறது. வாஜ்பாயிக்கான கண்ணீர் மண்தொடும் பொழுது அவருக்கான பெருமைகள் விண்தொடும் என்பது எனது நம்பிக்கை. அவருக்கு மதநேயம் உண்டு; ஆனால் அதைத்தாண்டிய மனிதநேயம் உண்டு. தன் மொழியைத் தாழவிடாத மொழிப்பற்று உண்டு; ஆனால் இன்னொரு மொழியைத் தாழ்த்திவிடாத தனிப் பண்பு உண்டு. கவிதை மனம்கொண்ட ஒருவன் பொதுவாழ்வில் புகுந்தால் அவன் கடைசிவரை கண்ணியமாகவே இருப்பான் என்பதற்கு வாஜ்பாயியின் வாழ்வே எடுத்துக்காட்டு.
வாஜ்பாயியின் தந்தை கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் ஒரு கவிஞர். அவரது தாத்தா சியாம்லால் வாஜ்பாய் ஒரு பண்டிதர். “கவிதை எனது குடும்பச் சொத்து” என்று சொல்லிக் கொள்வதில் சுகம் கண்டவர் வாஜ்பாய். பத்திரிகையாளர் – நாவலர் – விடுதலைப்போராட்ட வீரர் – நெருக்கடி நிலையில் ஓராண்டு சிறையில் இருந்த போராளி – பத்மவிபூஷண் விருது பெற்ற கல்வியாளர் – 10 முறை வென்ற நாடாளுமன்றவாதி – மூன்றுமுறை நாடாண்ட பிரதமர் – பொக்ரான் வெடித்த புரட்சியாளர் – தங்க நாற்கரச் சாலைகளால் இந்தியாவை இணைத்த தேசியவாதி என்று ஒற்றை மனிதனுக்குள் இருந்த பன்முகங்களை இந்தியா இழந்து நிற்கிறது.
அவர் பிரதமராக இருந்தபோது அவரது கவிதைகளின் தமிழ்ப் பதிப்பை பிரதமர் இல்லத்தில் வெளியிட்ட நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த அன்பு இப்போது என் கண்களில் ஈரமாகிறது. அகில இந்தியக் கவியரங்குக்கு என்னை அமெரிக்கா அழைத்துச்சென்ற பண்பும் நினைவில் கசிகிறது.
அவரது மனிதநேயம்தான் அவரது கவிதை. “பொழிவது அமெரிக்கக் குண்டுகளோ ரஷ்ய வகையோ, சிந்துவது என்னவோ ஒரே ரத்தம்தான்” – போருக்கு எதிராக வாஜ்பாய் எழுதிய வெள்ளை எழுத்து இது. ‘உயரத்தில் என்னை ஏற்றி வைக்காதீர்கள்’ என்ற அவரது கவிதை உன்னதமானது. ‘உயரத்தில் என்னை ஏற்றி வைக்காதீர்கள், அங்கே மரங்கள் வேர் கொள்ளா; செடிகொடிகள் வளரா, உயரே செல்லச் செல்ல மனிதன் தனிமையாகிறான், தனது சுமைகளைத் தானே தாங்குகிறான்’. எவரையும் அரவணைக்காத உயரத்தில் என்னை ஏற்றி வைக்காதீர்கள். இது அவரது பணிவைச் சொல்லும் பாட்டு.
‘இந்தியும் – தமிழும் இரு துருவங்கள் என்று கருதப்படுகிறபோது, காலத்தால் அழியாத திருவள்ளுவரையும், விடுதலைக் கனல் மூட்டிய பாரதியையும் தந்த தமிழ்மொழி மீது நான் அளவற்ற அன்பும் பற்றும் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னபோது ஒரு கட்சித் தலைவராக இல்லாமல் தேசியத் தலைவராகவே உயர்ந்து நின்றவர் வாஜ்பாய்.
கொள்கை வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மனிதநேயம் என்ற புள்ளியில் இதயங்கள் இளைப்பாற முடியும் என்று சொல்லிப் போகிறது வாஜ்பாயின் வாழ்க்கை. அதைத்தான் அரசியலின் நிகழ்காலம் நெஞ்சில் எழுதிக் கொள்ள வேண்டும்.
இந்தியா எழுந்து நின்று அழுகிறது.
ஒரு கண்ணால் ஒரு தலைவனுக்காக;
மறு கண்ணால் ஒரு கவிஞனுக்காக.
வாஜ்பாயிக்கு என் கண்ணீர் வணக்கம்.