இந்த 8 குணங்கள் இருந்தால் உங்கள் டீம் லீடர் கெத்துதான்! #FridayFeels
நாம் எப்படி வேலைப் பார்க்கிறோம்’ என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட யாரிடம் வேலைப் பார்க்கிறோம் என்பதும் முக்கியம். நல்ல பாஸ் அமைந்தால்தான் உங்கள் தவறுகளைக் கண்டுபிடித்துத் திருத்துவதில் ஆரம்பித்து, உங்களின் திறமைக்கு ஏற்ற வேலையைக் கொடுப்பார். ஒழுங்கா வேலை செய்தால், நமக்கான சம்பள உயர்வை போராடி வாங்கித்தருவார். ‘அது சரி.. எல்லா பாஸும் வேலை வேலைன்னுதானே விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..இதில் நல்ல பாஸை எப்படிக் கண்டுபிடிக்கிறது” எனக் கேட்கிறீர்களா? கீழ்க்காணும் இந்த 6 குணங்கள் இருந்தால், கண்டிப்பாக நல்ல பாஸாகத்தான் இருப்பார். உங்கள் உழைப்பைச் சரியான நபரிடம்தான் கொட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.
நம்பிக்கை – ஒவ்வொரு விஷயத்தையும் பாஸிட்டிவாக அணுகுவார். ஒரு புராஜெக்ட் ஆரம்பித்து அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்க வில்லை என்றாலும், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை தன் டீமிடம் பகிர்ந்துகொள்வார். சிறிதுகூட தயக்கமின்றி அடுத்தக்கட்ட வேலைக்கு நம்பிக்கையுடன் தயாராவார்.
வெளிப்படை – உண்மையாக இருப்பார். நீங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. ஆனால், அவருக்கு நீங்கள் நெருக்கமானவர் என்றாலும் தயங்காமல் முகத்துக்கு நேராக உங்கள் குறைகளைச் சொல்லிவிடுவார். ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம் ரகசியத் தொனியில் பேசமாட்டார். இந்த வெளிப்படைத்தன்மையுடன் அவர் இருப்பதால்தான் ‘டீம் ஸ்ப்ரிட்’ உண்டாகிறது. இதன் பயன் வேலையில் தெரியும்.
இடைவெளி – தன் டீமுடன் எப்போது நெருக்கமாக இருக்க வேண்டும், எப்போது விலகி இருக்க வேண்டும் என அறிந்தே இருப்பார். ஒரு வேலையைக் கொடுத்துவிட்டு, சும்மா சும்மா அது குறித்து கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க மாட்டார். நம்மை சுதந்திரமாக செயல்பட விடுவார்.
ஊக்கம் – உங்களின் டீம் லீடராக இருந்தாலும், தானும் ஒரு ஊழியன்தான் என்கிற நினைப்பில் எந்தச் சூழலிலும் நிறுவனத்தைத் தவறாக பேசமாட்டார். மாறாக, நிறுவனத்தைத் தான் நேசிக்கும் விதத்தை உங்களுக்குப் புரியும்படி நடந்துகொள்வார். உங்களுக்கும் அப்படியான நேசம் நிறுவனத்தின் மீது வரும் வகையில் அவரின் செயல்பாடுகள் இருக்கும். நிறுவனத்தின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும் நேசமும் அர்ப்பணிப்புடன் வேலைப் பார்க்கவைக்கும் என அவருக்குத் தெரியும்.
கணிப்பு – யாருக்கு எந்த வேலையைக் கொடுப்பது என்பதை இலகுவாகக் கணித்துவிடுவார். அதிக வேலை பார்க்கும் நபரிடம் தேவையற்ற சுமைகளைக் கொடுக்கமாட்டார். அதேபோல, சராசரியைவிடக் குறைவான வேலைப் பார்க்கும் நபர்களிடம் நேரடியாகவே தெரிவித்துவிடுவார்.
வளர்ச்சி – தன் டீமில் உள்ள நபர் தகுதிகளை வளர்த்துக்கொள்வதை ஆதரிப்பார். அதை தனக்கு எதிரான ஒன்றாக எந்தச் சூழலிலும் கருதமாட்டார். அப்படி ஒருவர் உருவாகும்பட்சத்தில் தனக்குச் சமமான இடத்தில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்க முன்வருவார்.
பகிர்வு – செய்த வேலைகளில் கிடைக்கும் வெற்றியைத் தன் அணியுடன் பகிர்ந்துகொள்வார். அந்த வெற்றிக்குப் பங்களித்த ஒவ்வொருவரையும் நிர்வாகத்திடம் அறிமுகம் செய்வார். அவர்களால் கிடைத்த வெற்றியை, ஒரு நல்ல டீம் லீடர் தனிப்பட்ட ஒன்றாகக் கருதவேமாட்டார்.
பாஸ் அல்ல வழிகாட்டி – உங்கள் மீது அதிகாரம் உள்ள பாஸ் போல நடந்துகொள்ளவே மாட்டார். மாறாக, உங்களை கனிவுடன் வழிநடத்தும் ஆசிரியராக,வழிகாட்டியாக நடந்துகொள்வார்.
மேற்காணும் எட்டு குணங்களும் உங்கள் டீம் லீடரிடம் இருந்தால் கவலையே படவேண்டாம். சரியான டீமில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கான கடமையைச் சரியாகச்செய்து உயர வாழ்த்துகள்! Thanks to vikatan.com