இன்னும் ‘ஸ்னாப்சேட்’டுக்கு வரலையா நீங்க?
பாலிவுட் பிரபலங்களின் ஸ்னாப்சேட் (Snapchat)பயனர் பெயர் என்ன தெரியுமா?
கேள்வி பதில் இணையதளமான ‘க்வோரா’(Quora) வில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்குப் பலர் ஆர்வத்துடன் பதில் அளித்துள்ளனர். அதன்படி பார்த்தால் நடிகர் ஹிருத்திக்கின் ஸ்னாப்சேட் பெயர் ஜஸ்ட் ஹிருத்திக் (justhrithik), நடிக்கை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஸ்னாப்சேட் பெயர் ஜாக்குலின் 143 (jacqueen143), நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் பெயர் அலிசோனா (-asilsona). ரசிகர்கள், ஸ்னாப்சேட்டில் இவர்களைப் பின் தொடர விரும்பினால் இந்தப் பெயரை அடையாளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்னும் யாரெல்லாம் ஸ்னாப்சேட்டில் இருக்கின்றனர் என அறிய விரும்பி கூகுளில் தேடினால், ஸ்னாப்சேட்டில் பிரலபலமாக இருக்கும் பாலிவுட் பிரபலங்களின் பல்வேறு பட்டியல்கள் கவர்ந்திழுக்கின்றன. நடிகை சோனம் கபூரில் தொடங்கி, நர்கிஸ், பரினீதி சோப்ரா என பலரும் இந்தப் பட்டியலில் இருக்கின்றனர். ரன்வீர் கபூர், மிலிந்த் சோமன் என நடிகர்கள் பட்டியலும் நீளமாக இருக்கிறது. அண்மையில் அனுஷ்கா சர்மாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். ஸ்னாப்சேட் மூலம் அவர் பகிர்ந்துகொண்டுள்ள அசத்தலான ஒளிப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த ஒளிப்படங்களில் கலந்திருக்கும் நகைச்சுவையான தன்மை வெகுவாக ரசிக்கப்படுகிறது.
பாலிவுட்டிலிருந்து விலகி உலக அளவில் சென்றால் ஸ்னாப்சேட்டில் பின் தொடர வேண்டிய பிரபலங்கள், ஒளிப்படக் கலைஞர்கள், நட்சத்திரங்கள் எனப் பல்வேறு பரிந்துரைகளைப் பார்க்கலாம். ஸ்னாப்சேட் கதைகள், ஸ்னாப்சேட் நினைவுகள், ஸ்னாப்கோடு என இன்னும் பலவித நவீனப் பரிபாஷைகள் சார்ந்த பட்டியலையும் பார்க்கலாம்.
ஸ்னாப்சேட் என்பது…
எல்லாம் சரி, ‘ஸ்னாப்சேட்டா அது என்ன?’ எனச் சிலர் விழிக்கலாம். இன்னும் சிலர், ஸ்னாப்சேட் சேவை புரியாத புதிராக, குழப்பமாக இருக்கிறதே என நினைக்கலாம். மாறாக, இளசுகள் கண்ணில் ஒளி பொங்க, ஸ்னாப்சேட் அருமை பெருமைகளைப் பேசத் தயாராகலாம்.
எது எப்படியோ ஸ்னாப்சேட் சேவையைப் பரிச்சயம் செய்து கொள்வது நல்லது. ஏனெனில் இணைய உலகில் வேகமாக வளரும் சேவைகளில் ஸ்னாப்சேட்டும் ஒன்று அதிகம் பேசப்படும் சேவையாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சேவையாகவும் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கும், அதன் துணைச் சேவைகளுமான இன்ஸ்டாகிராமும், வாட்ஸ் அப்பும் அண்மைக் காலமாக அறிமுகம் செய்யும் புதிய வசதிகள் எல்லாம் ஸ்னாப்சேட் சேவையின் நகல்கள் என்றே சொல்லப்படுவதும், இதன் தாய் நிறுவனமான ‘ஸ்னாப் இன்கார்ப்பரேஷன்’ பங்குச் சந்தையில் நுழைந்து அதன் இணை நிறுவனரான இவான் ஸ்பிஜெல்லை இளம் கோடீஸ்வரராக்கியதும், ஸ்னாப்சேட் பற்றிய ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளன.
ஸ்னாப்சேட் அடிப்படையில் மெசேஜிங் சேவை. ஆனால் வழக்கமான மெசேஜிங் சேவை அல்ல. இதிலும் ஒளிப்படங்களையும், காணொலிகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்றாலும், அதில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. ஸ்னாப்சேட் சேவை வழியே பகிரப்படும் படங்கள் தற்காலிகமானவை. அந்தப் படங்கள் பார்க்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும் தன்மை கொண்டவை. அதிகபட்சமாகப் பத்து விநாடிகள் மட்டுமே அவற்றைப் பார்க்கலாம். அதற்கு மேல் அவை இல்லாமல் போய்விடும்.
பயன் என்ன?
இப்படித் தானாக மறையும் படங்கள்தான் ஸ்னாப்சேட்டின் தனிச் சிறப்பு என்றாலும், முதல் முறையாக இந்தச் சேவையை அறிமுகம் செய்துகொள்ளும் எவருக்குமே, அழியும் படங்களைப் பகிர்வதால் என்ன பயன் என்றுதான் கேடக்கத் தோன்றும். பகிர்வதும் அதன் பிறகு சேமித்து வைப்பதுமே பெரும்பாலான இணைய சேவைகளின் தன்மையாக இருக்கும்போது, தற்காலிகத்தன்மை கொண்ட ஒளிப்படங்களைப் பகிர்வது வீணானது என நினைக்கத் தோன்றும்.
2011-ல் ஸ்னாப்சேட் அறிமுகமாகும் போது பலரும் இப்படிக் குழம்பித் தவித்தனர். ஆனால் அதையெல்லாம் மீறி ஸ்னாப்சேட் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முக்கியக் காரணம், புத்தாயிரமாண்டு வாக்கில் பிறந்து வளர்ந்த இளம் தலைமுறை இந்தச் சேவையை ஆர்வத்தோடு தங்களுக்கானதாக ஏற்றுக்கொண்டதுதான். பெரியவர்கள் எல்லாம் ஃபேஸ்புக் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த நிலையில், இளம் தலைமுறை ஒளிப்படப் பகிர்வுச் சேவையான இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று கொண்டிருந்த நிலையில், பதின் பருவத்தினர் ஸ்னாப்சேட் மூலம் பேசிக்கொண்டனர்.
பார்க்கப்பட்டவுடன் அழிந்துவிடும் என்பதை அறிந்தும்கூட, தாங்கள் பகிர விரும்பும் தருணங்களை ஒளிப்படமாக ஆர்வத்தோடுப் பகிர்ந்துகொண்டனர். தங்கள் நட்பு வட்டத்திலிருந்து இப்படி வந்து சேர்ந்த படங்களை இன்னும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். அந்தப் படங்கள் எல்லாம் காணாமல் போனது பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.அவர்களைப் பொருத்தவரை, அந்தக் கணங்கள்தான் முக்கியம். இந்தத் தன்மையால் ஸ்னாப்சேட், புதுயுகத்தின் தகவல் தொடர்பு மொழியானது. மெல்ல இளசுகளின் வட்டத்திற்கு வெளியேயும் அது பிரபலமானது.
எனவே இதை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் விலைக்கு வாங்க முற்பட்டார். ஆனால் ஸ்னாப்சேட்டின் இளம் நிறுவனரான ஸ்பிஜெல் இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். அதன் பிறகு ஸ்னாப்சேட் பெற்றுள்ள வளர்ச்சி ஸ்பிஜெல்லின் பிடிவாதம் அசட்டுதுணிச்சல் அல்ல என நிரூபித்திருக்கிறது. இன்று ஃபேஸ்புக்தான் எப்படியாவது ஸ்னாப்சேட்டைத் தன் கோட்டைக்குள் அழைத்து வந்துவிட வேண்டும் எனத் துடித்துக்கொண்டிருக்கிறது.
நிஜ உலகைப் போல…
ஸ்னாப்சேட்டின் வெற்றிக்குக் காரணம் அதன் விநோதத் தன்மைதான். ஸ்னாப்சேட் உரையாடல் என்பது பல விதங்களில் நிஜ உலக உரையாடல் போலவே அமைந்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நாம் உரையாடுகிறோம், பார்க்கிறோம், பேசிக்கொள்கிறோம். அவ்வளவு தானே! அதைத் தாண்டி அந்தத் தருணங்களை எல்லாம் நாம் படம் எடுத்துச் சேமித்து வைப்பதில்லையே. ஸ்னாப்சேட் உரையாடலும் இப்படித்தான் நிகழ்கிறது.
பயனாளிகள் தாங்கள் பகிர விரும்பும் தருணங்களை கிளிக் செய்து பகிர்ந்துகொள்கின்றனர். ஸ்னாப்சேட் செயலியைத் திறந்ததுமே கேமரா திரைதான் தோன்றும். சுயபடம் அல்லது வேறு காட்சியை கிளிக் செய்து, தொடர்புப் பட்டியலில் உள்ளவர்களுடன் பகிரலாம். அவர்கள் பார்த்தவுடன் அந்தப் படம் மறைந்துவிடும்.
உதாரணத்திற்கு ஒரு இளம் பயனாளி இசைகச்சேரிக்குச் செல்கிறார் என வைத்துக்கொள்வோம், கச்சேரி அரங்கிற்கு வெளியே நிற்கும் காட்சியை கிளிக் செய்து அவர் வெளியிடலாம். நான் இங்கே இருக்கிறேன் எனத் தெரிவிப்பது மட்டும்தான் அவரது நோக்கம். நண்பர்களும் அதை தெரிந்து கொள்கின்றனர். அவ்வளவுதான் முடிந்தது விஷயம். இதுதான் ஸ்னாப்சேட்டின் அடிநாதம்.
இந்த வசதி புத்தாயிரமாண்டின் தலைமுறையைக் கவர்வதற்குக் காரணம், இத்தகைய அக உரிமை அவர்களுக்குத் தேவைப்பட்டதுதான். சமூக வலைப்பின்னலாக ஃபேஸ்புக் பிரபலமானதும் அதிலும் பெற்றோர்களும், பெரியவர்களும் கூட்டம் கூட்டமாக உள்ளே வந்ததைப் பிள்ளைகள் ரசிக்கவில்லை. நம் உலகில் ஊடுருவியதாக நினைத்தவர்கள் பலரும் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறினர்.
அதே நேரத்தில் அறிமுகமான ஸ்னாப்சேட் சேவை அவர்களுக்குப் பொருத்தமாக இருந்ததோடு, உற்சாகமான தருணமொன்றில் எடுக்கப்பட்ட அந்தரங்கமான, தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும்படியான படங்கள் பார்க்கப்பட்டவுடன் அழிந்துவிடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பைத் தந்தது. இதனால் அந்தப் படங்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு தொடர்பில்லாதவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டது.
இந்த அம்சங்களே ஸ்னாப்சேட்டை வெற்றி பெற வைத்தாலும், அது படிப்படியாகப் புதிய அம்சங்களை அமைத்து மேலும் மேலும் வளர்ந்து வந்திருக்கிறது. ஆரம்ப வரவேற்பிற்குப் பிறகு ஸ்னாப்சேட் தானாக மறையும் படங்கள் தவிர, 24 மணி நேரம் மட்டும் இருக்கக் கூடிய படங்களை உருவாக்கும் வசதியை ‘ஸ்னாப்சேட் ஸ்டோரி’ எனும் பெயரில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து பிடித்தப் படங்களைச் சேமித்து வைக்கும் மெமரி வசதியை அறிமுகம் செய்தது. மேலும் படங்களை இஷ்டம் போல மாற்றிக்கொள்ளும் ஃபில்டர் வசதிகளையும் அறிமுகம் செய்தது.
பயனாளிகள் மற்றவர்கள் கதைகளைப் பின் தொடரும் வசதியையும் அறிமுகம் செய்தது. அப்படியே பிராண்ட்கள் மற்றும் பிரபலங்களின் பக்கமும் சென்றது. திடீரெனப் பார்த்தால், பிரபலங்களும், தொழில்முறைக் கலைஞர்களும் ஸ்னாப்சேட்டில் இருந்தனர். ஸ்னாப்சேட் மூலம் ரசிகர்களைப் புதிய முறையில் தொடர்புகொள்ள முடிவதாக நட்சத்திரங்கள் கருதுகின்றனர். இவ்வளவு ஏன் ஸ்னாப்சேட்டை ஆர்வமாகப் பயன்படுத்தும் டாக்டர்கள் எல்லாம் இருக்கின்றனர். இக்காலத் தலைமுறையுடன் தொடர்புகொள்ள ஸ்னாப்சேட்டே பொருத்தமான வழியாகக் கருதப்படுகிறது.
ஸ்னாப்சேட் அகராதி
ஸ்னாப்ஸ்: ஸ்னாப்சேட் செயலி முலம் எடுக்கப்படும் ஒளிப்படம் அல்லது காணொலி.
ஸ்னாப்சேட்டர்ஸ்: ஸ்னாப்சேட் பயனாளிகள்
ஸ்னாப்பேக்: ஸ்னாப்களுக்கான பதில்
ஸ்டோரி: பின் தொடர்பாளர்களுக்கு ஒளிபரப்பக் கூடிய ஒளிப்படங்களின் வரிசை. 24 மணி நேரம் பார்வையில் இருக்கும். ஸ்னாப்சேட்டில் கதை சொல்வதைப் போலக் கருதலாம்.
ஸ்கோர்: பயனாளி பகிர்ந்த ஸ்னாப்கள், பெற்ற ஸ்னாப்கள், கதைகள் உள்ளிட்டவையின் எண்ணிக்கை.
ஸ்னாப்கோட்: ஸ்னாப்சேட்டில் நண்பர்களை எளிதாகச் சேர்த்துக்கொள்ள வழி செய்யும் ஸ்கேன் செய்யும் வசதி கொண்ட குறியீடு. ப்ரொஃபைல் திரையின் மத்தியில் இருக்கும். கேமரா திரையின் மேல் உள்ள பிசாசு ஐகானை கிளிக் செய்து அணுகலாம்.
சேட்: ஸ்னாப்சேட் பயனாளிகளின் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வசதி. வீடியோசேட் வசதியும் உண்டு. லென்ஸ்: ஸ்னாப்களை மேலும் கேளிக்கை மிக்கதாக மாற்றும் வசதிகள். ஸ்பெஷல் எஃபெக்ட் போன்றவை. கேமரா திரையில் தோன்றும்.
ஃபில்டர்கள்: ஸ்னாப்கள் மீது பலவிதத் தோற்றங்களை உண்டாக்கும் வசதி.