இன்புளூயென்சா வைரசை துரத்தும் சித்த மருத்துவம்

உலக மக்களுக்கு மரண பயத்தை உண்டாக்கி உலுக்கிய கொரோனா மூன்றாம் அலையிலிருந்து இந்தியா சிறிது காலம் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இன்புளூயென்சா வைரஸ் தொற்று மக்களிடையே பரவலாக காணப்பட்டு வருகிறது. சாதாரணமான சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளாக தென்பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் பெரியவர்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்நோய்க்கு நவீன மருத்துவத்தில் ஆன்டிபயாட்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டிருக்கும் தருணத்தில் வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வேறு உடல் பாதிப்புகள் ஏற்படாதவாறு சித்த மருத்துவம் பல வழிமுறைகளை அறிவுறுத்துகிறது.

இன்புளூயென்சா எனப்படுவது புளூ என பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். இதில் பல்வேறு வகை உண்டு. இதில் ஏ, பி, சி, டி என நான்கு வகையான வைரஸ் காணப்பட்டாலும், முதல் மூன்று வகை மட்டுமே மனிதர்களை தாக்குகின்றன. இன்புளூயென்சா வைரஸ் தொற்று இருக்கும் நபர்களில் ஏறக்குறைய 33 சதவீதம் நபர்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படுவதில்லை, வெளியில் தெரிவதும் இல்லை. இன்புளூயன்சா நோய் தாக்கினால் அதிக காய்ச்சல் (100 முதல் 103 பாரன்ஹீட்), மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, தசை வலி, தலைவலி, தொடர் இருமல், உடல் சோர்வு, அசதி, கைகால் தளர்ச்சி, வலி போன்றவை பொதுவான அறிகுறிகளாக இருக்கும்.

வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்படும். குறைந்தது ஒரு வாரத்திற்கு இந்த அறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும். இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும். இந்த நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும் போதும் தும்மும் போதும் அதன் வழியாக வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. எனவே நோய் தொற்று ஏற்பட்டவர்கள் பிறருக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது பரவுவதை தடுக்க உதவும். தொண்டை சளி அல்லது மூக்கு பரிசோதனையின் மூலம் தொற்று நோய் பாதிப்பை உறுதிப்படுத்தப் படலாம். சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை மூலம் என்ன நோய் என்று எளிதாக கணிக்க முடியும். விரைவு பரிசோதனை விரைவில் குணமடைய உதவும்.சித்த மருத்துவத்தில் இன்புளூயன்சா காய்ச்சல், இருமல் சளி தீர்க்கும் எளிய மருந்து மாத்திரைகள் உள்ளன. நம் உடலில் இரண்டு வகை நோய் எதிர்ப்பு திறன் உள்ளன. அதில் இன்னேட் இம்யூனிட்டி என்பது இயல்பாகவே நம் உடலில் உள்ளது. அக்கொயர்டு இம்யூனிட்டி என்பது நோய் தொற்றினால் உண்டாவது.

இந்த இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைப்படும். செல்வழி நோய் தற்காப்பு, எதிர்ப்பு பொருள் வழி நோய் தற்காப்பு. உடலில் நோய் தொற்றினாலோ, தடுப்பூசிகளினாலோ இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை இந்த வைரஸ் கிருமிகள் திசை திருப்புவதால் செல்வழி நோய் தற்காப்பை நாம் அதிகரிக்க வேண்டும். இதற்கு சித்த மருத்துவத்தில் அநேக மருந்துகள் உள்ளன. அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 1.அமுக்கரா சூரணம்-மாத்திரை, 2.நெல்லிக்காய் லேகியம், 3.திரிபலா சூரணம்-மாத்திரை. காய்ச்சல், சளி, இருமலுக்கு 1.பிரம்மானந்த பைரவ மாத்திரை, 2.பாலசஞ்சீவி மாத்திரை, 3.வசந்த குசுமாகர மாத்திரை, 4.சாந்த சந்திரோதய மாத்திரை, 5.தாளிசாதி சூரணம், 6.திரிகடுகு சூரணம், 7.சீந்தில் சூரணம், 8.நிலவேம்பு குடிநீர், 9.கபசுர குடிநீர், 10.திப்பிலி ரசாயனம், 11.பூரண சந்திரோதயம், 12.முத்து பற்பம், 13.பவள பற்பம், 14.முத்து சிப்பி பற்பம், 15.ஆடாதோடை மணப்பாகு முதலிய மருந்துகள் முக்கியமாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் மற்றும் பிற வகை காய்ச்சல்களுக்கும் கைகொடுக்கும், குணப்படுத்தும் பக்க விளைவு இல்லாத, விலை குறைந்த மருந்துகளாகும். எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீர் மிகச்சிறந்த மருந்து. இது அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். நோயாளர் வயது, குறிகுணங்கள், நோயின் வகை, நோயின் தீவிரம் ஆகியவற்றை ஆராய்ந்து தெரிந்து சித்த மருத்துவர் மருந்துகளை தேர்ந்தெடுத்து வழங்கி இவ்வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைத்து நோயாளர் விரைந்து குணமடைய வழிவகை செய்வர். மேலும் நோய் வராமல் தடுக்க தொற்றியிருந்தது பாதுகாத்துக்கொள்ள பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமச்சீர் உணவுகளை அதாவது சத்தான அறுசுவை உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல், வேண்டிய அளவு நீர் அருந்துதல், மலத்தை சரியான நேரத்தில் காலை மாலை அடக்காமல் வெளியேற்றுதல், தூக்கத்தை அடக்காமல் இருப்பது, நேரத்தில் தூங்குதல், எல்லா காலங்களிலும் தண்ணீரை கொதிக்கவைத்து ஆறிய பின் குடிப்பது, துரித உணவுகளை தவிர்ப்பது போன்றவற்றுடன் மாறுபட்ட குறிகுணங்கள் உடலில் தோன்றியதுமே உடனே மருத்துவரிடம் சென்று சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இச்சமயங்களில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் குறிகுணங்களைக்கூறி தயவுசெய்து யாரும் மருந்து வாங்கி சாப்பிடவேண்டாம். மேலும் மருந்துக்கடை உரிமையாளர்களும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பணத்திற்காக மருந்தை விற்பதுடன் விலை மதிப்பில்லா உயிரோடு விளையாட வேண்டாம். உடல், உயிர் பாதிப்பிற்கு நாம் காரணமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு கடிக்காத வண்ணம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.