இன்று காலை 9 மணிக்குள் பணி திரும்ப வேண்டும்: ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு வரவில்லை என்றால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இன்று பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் அலுவலர்களிடம் எஸ்.எம்.எஸ், வாட்ஸ் ஆப், தொலைபேசி அல்லது நேரிலோ தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக பணியில் சேரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான நெறிமுறைகளை குறித்தும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு அதுசார்ந்த கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். பள்ளிக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த முன்னுரிமை தரவேண்டும். பணி ஆணையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மாதம் ரூ. 10,000 தொகுப்பூதியம் மட்டுமே வழங்க முடியும். தற்காலிக பணியாணையை வைத்து அரசின் வேலைவாய்ப்புக்கு எந்த உரிமையும் கோர முடியாது
இவ்வாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.