இன்றே முதலீடு செய்யுங்கள்… வாழ்க்கையை வளமாக்குங்கள்!
`தினமும் எட்டு மணி நேரம் வேலை… வாரம் 40 மணி நேரம் வேலை’ என சதாசர்வகாலமும் வேலையே செய்துகொண்டிருந்தால், சம்பாதித்த பணத்தை அனுபவிப்பது எப்போது?’ என்பது ஒருசிலருக்கு மட்டுமே உள்ள பிரச்னை. நம்மில் பலருக்கோ, பணத்தைச் சம்பாதிக்க முடியவில்லையே… வருமானத்தைப் பெருக்க முடியவில்லையே என்பதுதான் மிக முக்கியப் பிரச்னை.
நம்மில் பலரிடம் செல்போன், வங்கிக்கணக்கு, பான் கார்டு, ஏன் ஆதார் கார்டுகூட கையில் இருக்கும். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் அஞ்சல் அலுவலக முதலீடு என முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு மேற்கொண்டதற்கான பதிவுகள் பெரும்பாலும் இருப்பதில்லை.
பொதுவாக இந்தியர்கள் எங்கு, எவ்வளவு, எப்படி முதலீடு செய்கிறார்கள் என்ற விவரத்தைக் கொஞ்சமாவது தெரிந்துகொள்வது நம் எதிர்கால வாழ்க்கைக்கு நலம்பயக்கும்.
நம் நாட்டு மக்களைப் பொறுத்தவரை, 2017-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி கணக்கீட்டின்படி சொத்தில் 57 சதவிகிதமும், வங்கி டெபாசிட்களில் 16 சதவிகிதமும், தங்கத்தில் 12 சதவிகிதமும், இன்ஷூரன்ஸ் மற்றும் ஃபண்டுகளில் ஆறு சதவிகிதமும், புராவிடென்ட் மற்றும் பென்ஷன் ஃபண்டுகளில் நான்கு சதவிகிதமும், ஈக்விட்டியில் நான்கு சதவிகிதமும் மற்ற முதலீட்டுத் திட்டங்களில் ஒரு சதவிகிதமும் என முதலீட்டை மேற்கொண்டுவருகின்றனர். இப்படி ஏதாவது ஒரு திட்டத்தில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான நபர்கள் நம் நாட்டில் முதலீட்டை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் இதில் என்ன பிரச்னை என்றால், நம்மில் பலருக்கும் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை. தினமும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் எனக் குழந்தைகள் கொஞ்சம், கொஞ்சமாக உண்டியலில் சேர்த்து வருவதைப்போல, பெரியோர்களும் பணத்தை பீரோவிலும், லாக்கரிலும், கடுகு டப்பாவிலும் பணத்தைச் சேமித்துவருகின்றனர். இதையும் ஒரு முதலீடாகவே கருதுகின்றனர். அன்றாடம் நாம் உழைத்தால் மட்டும் போதுமா, நம்முடைய பணமும் உழைக்க வேண்டாமா?
இன்றைய சூழ்நிலையில் ஏதாவது ஒரு வேலையில் இருந்துகொண்டோ அல்லது ஒரு தொழிலைச் செய்துகொண்டோ பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. நம்முடைய பணத்தை முதலீடு செய்வதன் மூலமும், வருமானத்தைப் பெருக்க முடியும்; பணத்தைச் சம்பாதிக்க முடியும். நாம் ஏதாவது ஒரு வேலையில் இருந்தால் குறிப்பிட்ட ஒரு நேரம்தான் வேலை செய்ய முடியும். அதேநேரம் நாம் ஒரு தொழிலை செய்துவந்தாலும் அதற்குரிய வருமானம் மட்டுமே கிடைக்கும்.
ஆனால், முதலீட்டின் மூலம் நம்முடைய பணம் இரவு-பகல் பாராமல் நமக்காக வேலைசெய்து வருமானத்தை ஈட்டித் தரும் வல்லமை படைத்தது. நாம் நம் வேலையே கதி என இருந்தாலும் அல்லது வேறு எந்தக் காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், அந்த முதலீடு அதன் வேலையைச் செய்துகொண்டு பணத்தைப் பன்மடங்காகப் பெருக்கும். முதலீடு என்ற உடன் `பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடா!’ எனப் பதறாதீர்கள். உங்களுக்கு விருப்பமான அல்லது நன்கு தெரிந்த ரியல் எஸ்டேட், தங்கம், வங்கி டெபாசிட் அல்லது அஞ்சல் அலுவலக முதலீடு என நல்ல முதலீட்டுத் திட்டம் ஒன்றில் முதலீட்டை மேற்கொள்ளுங்கள். `ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய்’ என நம் முன்னோர்கள் சொன்னதைப்போல, எந்த முதலீட்டுத் திட்டம் உங்களுக்குச் சரியாக இருக்கிறதோ, அந்த முதலீட்டுத் திட்டத்தில் இன்றே முதலீடு செய்யுங்கள்… வாழ்க்கையை வளமாக்குங்கள்!