இயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி!

இயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி!

நம் எல்லாப் பயணங்களிலும் உடன் வரும் தோழர், இயர்போன். வயதானவர்களுக்குக் கைத்தடி போல, இளம் தலைமுறையினருக்கு இயர்போன். கைத்தடி நடப்பதற்குப் பயன்பட்டது. ஆனால், இதுவோ பாட்டைக் கேட்கவும், மற்றவர் களுடன் பேசவும் பயன்படுகிறது. இவ்வளவுதான் வித்தியாசம். இதைக் காதில் மாட்டிக்கொண்டே தூங்குவார்கள் சில இளசுகள். அவர்களின் காதிலிருந்து இயர்போனைக் கழற்றும் காட்சி நம் வீட்டிலேயே தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பயணத்தில் இதன் துணையோடு ஜன்னல் ஓர சீட்டைத் தேடி அமர்ந்துவிட்டால் அந்தப் பயணமே சுகம்தான். பாட்டோ, பேச்சோ இரண்டுக்குமே கைகொடுக்கும் கருவி இது. ‘என்னோட இயர்போனைக் காணோம்’ என நாள் முழுக்கத் தேடிய அனுபவம் எத்தனையோ பேருக்கு இருந்திருக்கும். அவ்வளவு முக்கியமான இந்த இயர்போன், செல்போன் கதிர்வீச்சுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்தாலும், சில பாதிப்புகளையும் ஏற்படுத்தவே செய்கிறது. எப்போதும் இதை மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்பது, செல்போனில் தொடர்ந்து பேசுவது போன்றவற்றால் வளரும் தலைமுறையினருக்குக் காது கேளாமைப் பிரச்னை அதிகரிப்பதாகச் சொல்கின்றன மருத்துவ ஆய்வுகள். எனில், இதற்கான தீர்வுதான் என்ன? பார்ப்போம்!

என்னென்ன பிரச்னைகள்?

அதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும்போது, பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். இந்தப் பாதிப்பு, இரண்டு மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

* காது கேளாமைப் பிரச்னை.

* செவித்திறன் பாதிப்பது (90 டெசிபலுக்கு மேல் கேட்டால்).

* வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வு கள், நரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும். இறுதியாக, முழுமையாகவே காதுகேளாமை வந்துவிடும்.

* 100 டெசிபலுக்கு மேற்பட்ட சத்தத்துடன் 15 நிமிடங்கள் வரை இயர்போனில் பாட்டைக் கேட்டால், காது கேளாமை பாதிப்பு நிச்சயம் வரும்.

* இயர்போன் அல்லது ஹெட்செட் கேட்டுக் கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட அளவு வரையுள்ள சத்தத்தைத் தாண்டினால், ‘வார்னிங் மெசேஜ்’ காட்டும். சிலர் அதைப் புறக்கணித்து விட்டு, அதிகச் சத்தம் வைத்து பாட்டைக் கேட்பது உண்டு. இதனால், செவியில் உள்ள மெல்லிய சவ்வுகள் நிச்சயம் பாதிப்படையும்.

* இயர்போனைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, காதுக்குள் செல்லும் காற்றோட்டத்துக் குத் தடை ஏற்படும். இதனால், காதில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். மற்றவருடைய இயர்போனை வாங்கிப் பயன்படுத்துவதால்கூட, காதில் நோய்த்தொற்று ஏற்படலாம். அதாவது, பாக்டீரியாக்கள் இயர்போன் மூலமாக மற்றவருக்குப் பரவும்.

* அதிகச் சத்தத்துடன் பாட்டைக் கேட்ட பிறகு, காது மரத்துப் போகும். தற்காலிகமாகக் காது கேட்கும் திறன் குறைந்து, மீண்டும் அது இயல்புநிலைக்குத் திரும்ப சில மணி நேரம் ஆகும். இதை, `நம்ப்னெஸ்’ (Numbness) என்பார்கள்.

* சிலர் புளூடூத் பயன்படுத்துகின்றனர். இது கதிர்வீச்சுகளை வெளியேற்றும். இந்தக் கதிர்வீச்சுகளால், கேட்கும்திறன் குறைவது, நரம்பு மண்டலம் பாதிப்பது, உட்புறக் காது பாதிப்பது, மூளையில் பாதிப்புகள் வருவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.

* கார், ரோடு, ட்ரெயின் விபத்துகள்கூட இயர்போன்கள் பயன்படுத்துவதால் நிகழ்கின்றன. ஹாரன் சத்தம் கேட்காமல் போவதால், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.

இயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்

* காதில் தொடர் இரைச்சல் கேட்கத் தொடங்கும்.

* தூரத்திலிருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும்.

* அருகில் எழும் சத்தம்கூடக் கேட்காமல் போகும்.

* காதில் மந்தமான நிலை உருவாகும்; காது மரத்துப் போகும்.

பரிசோதனை முறைகள்

* இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரை அணுகவேண்டும்.

* முதல்கட்டமாக, அடிப்படையான சோதனை கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக, காதின் உட்பகுதியில் பாதிப்பு உள்ளதா, காதின் நடுப்பகுதியில் பாதிப்பு உள்ளதா, நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும்.

* அடுத்த கட்டமாக, ஆடியோலாஜிக்கல் (Audiological test), ஆடியோகிராம் (Audiogram) போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கேட்கும் திறன் பாதிப்புகளும் காது கேளாமை திறன் பாதிப்புகளும் உறுதிசெய்யப்படும்.

தீர்வுகள்

பொதுவாகவே, காது கேளாமை பாதிப்பு வந்தால், அந்தப் பாதிப்பைக் குணப்படுத்துவது கொஞ்சம் கடினம்தான். நரம்பு மண்டலத்தில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். நரம்புகளின் பாதிப்புபோல, காது தொடர்பான மற்ற பாதிப்புகளுக்கும் இது 95 சதவீதம் வரை பொருந்தும். ஒருமுறை செவித்திறன் குறைந்து விட்டால், மீண்டும் அதைப் பெறுவது என்பது கடினமான காரியம். ஆனால், மருத்துவரின் ஆலோசனைப்படி மேலும் செவித்திறன் குறையாமல் இருக்கச் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால், காது கேட்கும் கருவியைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply