இயற்கைச் சீற்றமும் இல்லமும்

இயற்கைச் சீற்றமும் இல்லமும்
house
அதிக ஆயுளை நமக்கு மட்டுமல்ல நமது வீட்டுக்கும் விரும்புவோம். ஏனெனில் சாமானியர்கள் வாழ்க்கையில் ஒரு முறைதான் வீடு கட்டுகிறார்கள். வீடு என்பது அத்தியாவசியம் எனும்போது அதன் பாதுகாப்பும் மிகவும் அத்தியாவசியமானது.

நாம் வீடு கட்டும் நிலத்தின் மண் பரிசோதனை, அப்பரிசோதனையின் பேரில் பரிந்துரைக்கப்படும் அஸ்திவாரம், உறுதியான கட்டுமானம் போன்றவற்றை எல்லாம் கொண்டுதான் திடமான உறுதியான இல்லங்களை அமைக்கிறோம். சாதாரணமான சூழல்களை அவை தாங்கி நிற்கும் ஆனால் புவியதிர்ச்சி போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்த்து நிற்க அவற்றால் முடியுமா என்பது சந்தேகமே.

இப்போதெல்லாம், திடீர் திடீரென நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஒரு வீடு கட்டும்போது அது புவியதிர்ச்சியைத் தாங்கும் தன்மையில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டியதும் அவசியமாகிவரும் சூழல் இது. ஆகவே எந்தெந்தக் கட்டுமானப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும், எந்தெந்தக் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும், எப்படிக் கட்டுமானம் அமைத்தால் வீடு அசாதாரணச் சூழ்நிலைகளைத் தாங்கிநிற்கும் போன்றவை குறித்துச் சிறிது அறிந்துகொண்டால் அது நமக்கு நலம் பயக்கும்.

நாம் வீடு கட்ட செங்கல், கான்கிரீட், கண்ணாடி போன்ற கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றால் கட்டப்படும் வீடு உறுதியானது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இது சாதாரணச் சூழலுக்குச் சரி. பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்துக்கு இது சரியான தேர்வு அல்ல என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இவை கொண்டு உருவாக்கப்பட்டும் கட்டிடங்கள் செங்குத்தாகவோ பக்கவாட்டிலோ பலத்த விசையை எதிர்கொள்ள நேரும்போது அவற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்துவிடும்.

அதனால்தான் சிறிது வலிமை கொண்ட நிலநடுக்கம் ஏற்படும்போதே இவற்றைக் கொண்டு அமைக்கும் கட்டுமானங்கள் விரிசலடைகின்றன, முறிந்துபோகின்றன. ஏனெனில் நிலநடுக்கத்தின்போது பல திசைகளிலிருந்தும் வரும் அதிக அழுத்தம் கொண்ட விசை கட்டுமானத்தைத் தாக்கும்.

அப்படியான தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கட்டுமானங்கள் சரிந்துவிடுகின்றன. இத்தகைய கட்டுமானங்களை மேலும் வலுவேற்றத்தான் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவை ஓரளவு இத்தகைய அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொண்டு கட்டிடங்களையும் பாதுகாக்கின்றன.

ஆக, புவியதிர்ச்சியைத் தாங்கும் கட்டுமானங்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும் எனப் பார்த்தால் புவியதிர்ச்சியைத் தாங்கும் கட்டுமானப் பொருள்களால் கட்டிடத்தை உருவாக்க வேண்டும். ஆனால் அப்படியான கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது துரதிர்ஷ்டமே. ஆகவே கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் நில நடுக்கத்தைத் தாங்கும் வீடுகளை உருவாக்க வேண்டும்.

நிலநடுக்கத்தால் வீடு ஏன் இடிந்து விழுகிறது? வீட்டின் ஆதாரமான நிலமே நிலைகுலைகிறது. ஆகவே அதன் மேல் அமைந்த வீடு நிலைநிற்க முடியாமல் தடுமாறிச் சரிகிறது. இதைப் போக்க என்ன செய்ய வேண்டும்? நிலத்தில் ஏற்படும் அதிர்ச்சியை அதன் மேல் கட்டப்பட்டுள்ள வீட்டுக்குக் கடத்தாத தொழில்நுட்பம் வேண்டும். அதாவது பலத்த அதிர்ச்சியை வீடு தாங்கிக்கொள்ள அவற்றுக்கு அதிர்ச்சி தாங்கி வேண்டும்.

இரு சக்கர, நான்கு சக்கர வாகனங் களில் செல்லும்போது நமக்கு ஏற்படும் பாதிப்பைப் போக்க அவற்றில் அதிர்ச்சி தாங்கிகள் அமைக்கப்படுவது போல் வீட்டையும் நிலத்தின் மீது அமைந்த அதிர்ச்சி தாங்கிகளில் அமைக்க வேண்டும். ஆகவே நிலம் அதிர்ந்தாலும் வீடு அதிராமல் காப்பாற்றப்படும். நில அதிர்ச்சி ஏற்படும்போது அதன் மேல் அமைந்த வீடு பெரும் சேதங்களுக்கு ஆளாகாமல் தவிர்க்கப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதற்கு ஐஸோலேட்டிங் பேஸ் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பம் சிறந்தது என்கிறார்கள் நியூசிலாந்தைச் சேர்ந்த கட்டிட நிபுணர்கள். ஏனெனில் அதன் அடிப்படை ஸ்பிரிங் மீது கட்டிடத்தை எழுப்புவதுதான். இவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன் என்னும் நகரில் ஒரு அருங்காட்சியகத்தைக் கட்டி எழுப்பி யுள்ளார்கள்.

வழக்கமான கட்டிடங்களைக் கட்டுவதைவிட இப்படியான கட்டிடங் களை உருவாக்கச் சற்றுச் செலவு அதிகமாகும். ஆனால், இயற்கைச் சீற்றங்களால் வீடு அடையும் சேதங்களைக் குறைக்க சிறிது செலவு செய்துதான் ஆக வேண்டும்.

Leave a Reply