இரவில் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்!
காலை நேரத்தில் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைகளால் அவை ஜீரணித்துவிடும். இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து நம்மைக் காக்கும். இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில …
1. பால்: இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலில் அதிக அளவு புரோட்டின், கால்சியம் உள்ளது. இவை உடலுக்கு முக்கியமானவைதான். ஆனால், பாலில் உள்ள லாக்டோஸ் செரிக்கத் தாமதமாகும். இரவில் பால் அருந்துவதால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். சீரான தூக்கம் பாதிக்கப்படும்.
2. சாக்லேட்: சாக்லேட்டில் சாக்ரின், காஃபின், சர்க்கரை, கொழுப்புச்சத்து போன்றவை உள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால், தூக்கம் பாதிக்கப்படும். இப்படியான நிம்மதியற்ற தூக்கம் தொடர்ந்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) அளவு அதிகரித்து திசுக்கள் உடைய நேரிடும். மேலும், காஃபின் செரிமானத்தைப் பாதித்து அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
3. இறைச்சி: இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதைச் செரிக்க அதிக நேரம் எனர்ஜி தேவைப்படும். இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது. இறைச்சி உணவுகள் ஜீரணமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். ஆகையால், செரிமானக் கோளாறு ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படும். வாய்வுத்தொல்லை உருவாகும்.
4. பாஸ்தா: பாஸ்தா அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்தது. இது உடலின் அதிகப்படியான இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. அதிக அளவு கலோரியை கொண்ட பாஸ்தா, உடலின் தசை செல்களுக்குள் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.
5. கீரை: கீரையை இரவு உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச்செய்கிறது. இதனால், செரிமானக் கோளாறு ஏற்படும்.
6. நீர்ச்சத்துள்ள உணவுகள்: பூசணி, புடலை, சுரக்காய், பாவைக்காய், கோவைக்காய், தர்பூசணி, செளசெள போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை இரவில் சாப்பிடும்போது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த வகை உணவுகளை இரவில் சாப்பிடவே கூடாது.
7. பச்சைமிளகாய்: இரவில், பச்சைமிளகாய் சாப்பிட்டால், உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். மிளகாயில் உள்ள அமினோஅமிலம், நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். இதில் உள்ள புரோட்டின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. தூக்கமின்மையை உண்டாக்குகிறது.
8. காபி மற்றும் டீ: டீ, காபியில் உள்ள ‘கேஃபைன்’ வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும். மேலும், காலை வேளைகளில் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். டீயில் இருக்கும் த்யோப்ரமைன்(Theobromine) மூளைக்குச் சுறுசுறுப்பை அளிக்கும். தூக்கத்தை விரட்டும். எனவே, இரவு நேரங்களில் காபி, டீயை தவிர்ப்பது நல்லது.
9. ஸ்பைசீ உணவுகள்: ஸ்பைசீ உணவுகளில், அதிக அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவு கலோரி நிறைந்து இருக்கும். செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்; அதிக உடல் அழுப்பை உண்டாக்கும். நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். ஸ்பைசீ உணவில் உள்ள கார்போஹைட்ரேட், உடலின் இன்சுலின் அளவை அதிகரித்து, ரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கச்செய்கிறது. இவற்றில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம், உடல் பருமனை அதிகரிக்கும்.
10. சோடா, கார்பனேட்டட் பானங்கள்: சோடாவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கலோரி நிறைந்து உள்ளன. நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று உபாதைகளை உருவாக்கும். தூக்கத்தைக் குறைக்கும். இது குடல் வால்வுகளைப் பாதிக்கிறது. சோடாவில் அதிகப்படியான அமிலச்சத்து இருப்பதே இதற்குக் காரணம்.