புத்தாண்டு பிறந்தாலே குதூகலமும் தொற்றிக்கொண்டுவிடும். அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்த சிந்தனையைத் தூண்டுவதே புத்தாண்டுதான். ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அவரவர் துறை சார்ந்த எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதும் இப்போதுதான். இருசக்கர வாகன பிரியர்களுக்கு, புத்தாண்டில் எத்தகைய புது மாடல்களில் வாகனங்கள் சந்தைக்கு வர உள்ளன என்ற எதிர்பார்ப்பு மேலிடுவது இயற்கை. மோட்டார் வாகன உற்பத்தியாளர்களும் புத்தாண்டுக்கென சில புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி சந்தையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வர். அந்தவகையில் ஒவ்வொரு நிறுவனமும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளன.
அப்ரிலியா ஆஎஸ்வி4
இத்தாலியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தின் பிரபலமான மோட்டார் சைக்கிள் இதுவாகும். இக்குழுமத்தின் மற்றொரு தயாரிப்பான பியாஜியோ ஸ்கூட்டர்கள் ஏற்கெனவே இந்திய சந்தைகளில் விற்பனையாகின்றன. தற்போது மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்துகிறது. 999.60 சிசி திறனுடன் சூப்பர் பைக்காக இது அறிமுகமாகிறது. டிராக், ஸ்போர்ட்ஸ் மற்றும் ரேஸ் என 3 மாடல்களில் இது அறிமுகமாகிறது,
டிவிஎஸ் அபாச்சே
இந்நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான அபாச்சே மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சந்தைக்கு வருகிறது. இந்த மாடல் ஏற்கெனவே 2014 ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஏபிஎஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கேடிஎம் டியூக் 200, பஜாஜ் பல்சர் 200 என்எஸ், ஹோண்டா சிபிஆர் 250ஆர், ஹீரோ ஹெச்எக்ஸ்250ஆர் மோட்டார் சைக்கிளில் மட்டுமே உள்ளது. இத்தகைய வசதியை டிவிஎஸ் நிறுவனமும் தனது தயாரிப்பில் புகுத்தியுள்ளது.
ஹீரோ ஹெச்எக்ஸ் 250ஆர்
ஹெச்எக்ஸ்250ஆர் மோட்டார் சைக்கிள் 4 ஸ்டிரோக் ஒற்றை இன்ஜினுடன் வர உள்ளது. இதில் 100 கி.மீ. வேகத்தை 9 விநாடிகளில் தொட்டுவிட முடியுமாம். புத்தாண்டில் ஹீரோ குழும பெருமையைக் காப்பாற்ற சந்தைக்கு வரும் இதன் விலை ரூ. 1.50 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை இருக்கும்.
டிவிஎஸ் விக்டர்
தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான தயாரிப்பான விக்டரை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ மொபைல் கண்காட்சியில் டிவிஎஸ் விக்டர் இடம்பெற உள்ளது. 110 சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் இன்ஜினுடன் இது அறிமுகமாக உள்ளது. பின்னர் இதன் திறனை 125 சிசி ஆக உயர்த்தி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. விலை ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 52 ஆயிரம் வரையாகும்.
ஹோண்டா சிபி500எப்
471 சிசி டிஸ்பிளேஸ்மென்ட் திறனுடன், இரட்டை இன்ஜின், 47பிஹெச்பி திறனுடன் புத்தாண்டில் வர உள்ளது. இதன் விலை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கவாஸகி இஆர்6என், கவாஸகி 650ஆர் ஆகிய வாகனங்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா சிபி 300எப்
ஒற்றை இன்ஜினுடன் 30பிஹெச்பி சக்தி மற்றும் 27 நியூட்டன் மீட்டர் டார்க் விசையுடன் அறிமுகமாக உள்ளது. முந்தைய மாடலில் பாதி விலையில் அதாவது ரூ. 2.50 லட்சத்துக்கு இது கிடைக்கும். இது கவாஸகி இஸட்250 மாடலுக்குப் போட்டியாக இருக்கும்.
பிஎம்டபிள்யூ கேஓ3
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள். இதற்கு சங்கேத பெயராக கேஓ3 என பெயரிடப்பட்டுள்ளது. புதிய கூட்டாளி டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் புத்தாண்டில் சந்தைக்கு வருகிறது. 500 சிசி பிரிவில் என்பீல்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு இது சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 400
மோட்டார் சைக்கிளில் பஜாஜ் குழுமத்தை மிகவும் பிரபலப்படுத்தியதில் பல்சருக்கு தனி பங்குண்டு. புத்தாண்டில் சாலைகளில் சீறிப்பாய வரும் ஆர்எஸ் 400 பல்சர் 375 சிசி திறன் கொண்டது. இதன் விலை ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 1.80 லட்சமாக இருக்கும் என தெரிகிறது. ஹோண்டாவின் சிபிஆர் 300 ஆர் ரக மோட்டார் சைக்கிளுக்கு இது கடும் சவாலாக விளங்கும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
கேடிஎம் 1050 அட்வெஞ்சர்
கடந்த ஆண்டிலேயே சந்தைக்கு வந்திருக்க வேண்டிய வாகனம். 95 ஹெச்பி அதிகபட்ச வேகம், 107 நியூட்டன் மீட்டர் டார்க், 1,055 சிசி திறனுடன் சாலைகளில் சீறிப்பாய வருகிறது. ஸ்போர்ட், ஸ்டிரீட், ரெயின், ஆஃப்ரோட் என 4 மாடல்களில் ஏபிஎஸ் (Anti-lock Braking System) வசதியோடு வர உள்ளது.