இரு படுக்கையறை வீடுகள் ஏன் தேவை?
சொந்த வீடு வாங்க வேண்டும் என்று முடிவெடுக்கும் பலரும், அந்த வீடு குறைந்தபட்சம் இரண்டு படுக்கையறைகளைக் (2 பிஎச்கே) கொண்ட வீடாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். குறைந்தபட்சம் 4 பேர் முதல் 6வரை வசிக்க ஏற்ற வீடு என்பதால், 2 பிஎச்கே வீட்டுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு வீடாக இருந்தாலும் இரண்டு படுக்கையறை வீடுகளை வாங்கவே பலரும் விரும்புகிறார்கள். 2பிஎச்கே வீடு வாங்க மக்கள் விரும்புவது ஏன்?
தமிழகத்தில் நகரங்களுக்கு அருகிலேயே சிறந்த போக்குவரத்து, அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய புறநகர்ப் பகுதிகளில் 25 முதல் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வசதிகளுடனும் கூடிய 2பிஎச்கே வீடுகள், விரும்பிய பரப்பளவில் கிடைப்பதே இதற்கு முக்கியக் காரணம். சென்னை போன்ற பெருநகரில் நகரின் மையப் பகுதியிலும் நகரின் இதயப் பகுதியிலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகள் யானை விலை, குதிரை விலை அளவுக்கு விற்பதால், புறநகர்ப் பகுதிகளில் 2பிஎச்கே வீட்டை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போதைய நிலையில் சென்னையில் போரூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், கீழ்க்கட்டளை, சேலையூர் போன்ற இடங்களை 2பிஎச்கே வீடுகள் வாங்க சிறந்த பகுதிகள் என்று ரியல் எஸ்டேட் துறையினர் சொல்கிறார்கள்.
2பிஎச்கே வீடுகளுக்கான தேவை அதிகம் இருக்கும்போதிலும், புதிதாகக் கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அதற்கான மவுசை அதிகரித்துள்ளது. பொருளாதார மந்த நிலை, மணல் தட்டுப்பாடு, ஜி.எஸ்.டி.யால் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழகத்தின் பல நகரங்களிலும் வீட்டுத் திட்டங்கள் குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர். அதனால் 2 பிஎச்கே வீடுகளின் கட்டுமானமும் குறைந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்), ஒரகடம் போன்ற பகுதிகளில் 2பிஎச்கே வீடுகள் அதிக அளவில் கட்டப்பட்டு வந்தாலும், உடனடியாகக் குடியேறக்கூடிய வகையில் முழுவதும் தயாரான வீடுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மேடவாக்கம் பகுதிகளில் 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2பிஎச்கே வீடுகளின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் தேக்க நிலை நீடித்தாலும், இந்தப் பகுதிகளில் சொத்துகளின் மதிப்பு தொடர்ந்து உயரவும் செய்திருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற பகுதிகளில் 2பிஎச்கே வீடுகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாங்கும்போது அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரிக்கப்படாத மனையின் பாகம் (யுடிஎஸ்) சற்றுக் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாலும், 2பிஎச்கே வீட்டுக்கு வரவேற்பு இருக்கவே செய்கிறது.
அதே நேரத்தில் 20 லட்சத்துக்குக் குறைவான விலையில் விற்கப்படும் 2பிஎச்கே வீடுகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடையே தயக்கம் காணப்படுவதாக ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர். புறநகர்ப் பகுதிகளையும் தாண்டி அடிப்படை வசதிகள் குறைவான அல்லது இல்லாத பகுதிகளில் வீடுகள் கட்டப்படுவதே இதற்குக் காரணம். இது போன்ற இடங்களில் போக்குவரத்து வசதியும் குறைவாக இருக்கும் என்பதால், அந்த வீடுகளின் சொத்து மதிப்பு உயர பல ஆண்டுகள் பிடிக்கலாம்.
எனவே, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள போக்குவரத்து வசதி, கட்டமைப்பு வசதியுள்ள பகுதிகளில் இருக்கும் 2பிஎச்கே வீடுகளை வாங்குவதிலேயே முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.