இல்லத்தரசிகளின் இனிமையான வாழ்வுக்கு எளிமையான ‘டிப்ஸ்’
வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஒரு வகை என்றால், ‘ஹோம் மேக்கர்’ எனப்படும் இல்லத்தரசிகளின் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கின்றன. வீட்டு நிர்வாகத்தின் அடிப்படை விஷயங்களில் தொடங்கி, குடும்ப உறுப்பினர்களின் ஒவ்வொரு தேவையையும் கவனித்துகொள்வது வரையில் அவர்களது பொறுப்பாக இருக்கிறது.
அன்றாட வீட்டு வேலைகள் சரியான நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் நாள் முழுதும் இல்லத்தரசிகள் ‘பிசியாக’ இருப்பது வழக்கம். ஒரு குடும்பத்தின் முதுகெலும்பாக கருதப்படுவதால், அவர்களுக்கான பொறுப்புகளை மன அழுத்தம் இல்லாமல் செய்வது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. ஒரு சில இல்லத்தரசிகளுக்கு வேலைப்பளு காரணமாக மனச்சோர்வு உண்டாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற சிக்கல்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்த ஆலோசனைகளில் சில முக்கியமான பகுதிகளை இங்கே கவனிக்கலாம்.இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சின்னச்சின்ன பாராட்டுக்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு மன நிறைவு ஏற்படுகிறது.
அதன் காரணமாக அவர்களது மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. தொடந்த வீட்டு வேலைகள் காரணமாக சோர்வும், உடல் தளர்வும் ஏற்படுகின்றன. மருத்துவ விடுப்பு அல்லது தற்காலிக விடுப்பு என எதுவுமின்றி வருடத்தின் அனைத்து நாட்களும் இல்லத்தரசிகள் உழைக்கிறார்கள்.
நாள்பட்ட மன உளைச்சல்கள் மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட காரணிகளின் வெளிப்பாடு ஆகியவை காரணமாக சில பெண்களுக்கு ஏற்படும் மன இறுக்கம் காரணமாக உடலிலும் பாதிப்புகள் ஏற்படலாம். அதன் காரணமாக மனதில் காரணமற்ற கோப உணர்வுகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒரு நாளுக்கான வீட்டு வேலைகள் பட்டியலை தயார் செய்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துவிட்டு, மீதமுள்ள நேரத்தில் பிறருடன் பழகவும், இளைப்பாறவும் முயற்சி செய்வது மன உளைச்சலை குறைக்கும்.
மன இறுக்கத்தை சரிசெய்ய உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். ஆற்றலை அதிகப்படுத்தி, சோர்வை குறைக்கும் உடற்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். தினமும் 30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
நல்ல அமைதியான தூக்கம் என்பது மன இறுக்கத்தை போக்கும் சிறந்த மருந்தாகும். தூக்கம் மூளைக்கு ஓய்வு கொடுத்து, அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவும். எனவே, தினமும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது முக்கியம்.
தியானம், யோகா அல்லது சுவாச பயிற்சி போன்ற இளைப்பாறல் நுட்பங்களை முயற்சி செய்தால், மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவை தீர்ந்து மகிழ்ச்சியான நல்ல உணர்வுகளை அதிகரிக்கும். மன இறுக்கத்தின் அறிகுறிகள் அதிகமாக ஆகும் போது அதற்கான நிபுணரிடம் உதவியை நாட வேண்டும்.