இளமை .நெட்: சர்ச்சையில் சிக்கிய ஸ்னாப்சாட்

இளமை .நெட்: சர்ச்சையில் சிக்கிய ஸ்னாப்சாட்

இந்தியாவிலிருந்து இப்படி ஒரு திடீர் கவனம் கிடைக்கும் என ஸ்னாப்சாட் நிறுவனம் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. இந்தக் கவனம் எதிர்மறையானது என்பதால், இதை விரும்பியும் இருக்காது. ஆனால் என்ன செய்ய, ஸ்னாப்சாட் சேவை மீது இந்தியப் பயனாளிகள் திடீர் கோபம் கொண்டு பொங்கி எழுந்ததோடு, இந்தச் செயலியை நீக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். ஸ்னாப்சாட்டுக்கு எதிரான ஹாஷ்டேகுடன் ஒரு குறும்பதிவு யுத்தமும் தொடங்கியது.

ஸ்னாப்சாட் மீது இணையவாசிகள் இப்படிப் பொங்கி எழ என்ன காரணம்? ’ஸ்னாப்சாட் பணக்காரர்களுக்கானது, இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு அதை விரிவாக்கம் செய்வதில் நிறுவனத்துக்கு ஆர்வம் இல்லை’ என்றும் பொருள்படும் வகையில் ஸ்னாப்சாட் இளம் இணை நிறுவனர் ஸ்பிஜெல் கூறியதாக வெளியான செய்தியே இதற்குக் காரணம்.

தீவிரமடைந்த எதிர்ப்பு

இந்தியா பற்றியும் இந்தியர்கள் பற்றியும் இப்படி மோசமாகக் கருத்து கூறினால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும். அதுதான் இந்திய இணையவாசிகள் ஸ்னாப்சாட்டுக்கு பாடம் கற்றுத்தர விரும்பி இணையப் போராட்டத்தில் குதித்தனர். குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பயனாளிகள் பலர் ஸ்னாப்சாட்டுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். ஜேம்ஸ்பாண்டை வைத்துக் குட்கா விளம்பரம் செய்யும் நாடு என்பது தெரியுமா என்றும், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் வசம் உள்ள தங்கத்தை எல்லாம்விட இந்தியப் பெண்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு அதிகம் தெரியுமா என்பது போல எல்லாம் பதிவிட்டு ஸ்னாப்சாட் இணை நிறுவனரைக் கலாய்த்ததோடு, ஸ்னாப்சாட்டை புறக்கணிக்கும் கோஷத்தோடு ‘பாய்காட்ஸ்னாப்சாட்’ எனும் ஹாஷ்டேகும் உருவாக்கப்பட்டது.

மேலும், பலர் இந்த இணையப் போராட்டத்தில் குதித்தனர். பலர் ஸ்னாப்சாட் செயலியை நீக்கும் செயலிலும் ஈடுபட்டனர். விளைவு ஆப் ஸ்டோரில் ஸ்னாப்சாட் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

போராட்டம், டிவிட்டரோடு நிற்கவில்லை. மற்ற இணைய மேடைகளிலும் பரவியது. பாய்காட் ஸ்னாப்சாட் எனும் பேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/boycottsnapchat/) உருவாக்கப்பட்டது. அந்தப் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் ஸ்னாப்சாட்டுக்கு எதிரான செய்திகள் டைம்லைனில் தோன்றுகின்றன.

மாற்றத்துக்காகப் போராட உதவும் இணையதளமான சேஞ்ச்.ஆர்க் தளத்தில், ஸ்னாப்சாட் சேவையைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் மனுவும் உருவாக்கி ஆதரவு கோரப்பட்டது. பிரதமர் அலுவலகத்துக்கு மனு போட்டு, இந்தச் சேவைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது: https://www.change.org/p/pmo-india-ban-and-boycott-snapchat-in-india

வறுத்தெடுத்த மீம்கள்

இது தவிர மீம்கள் மூலமும் ஸ்பிஜெல்லை வறுத்தெடுத்துவிட்டனர். இதனிடையே, ஸ்னாப்சாட் மீதான கோபத்தில் பல பயனாளிகள் மின்வணிக நிறுவனமான ஸ்னாப்டீல் செயலியை நீக்கி, தங்கள் ஆவேசத்தைத் தனித்துக்கொண்டனர். இதனால் இந்தப் பிரச்சினையில் தொடர்பே இல்லாத ஸ்னாப்டீல் பாதிப்புக்குள்ளானது.

ஸ்னாப்சாட் உலகின் முன்னணி மெசேஜிங் செயலிகளில் ஒன்று என்றாலும், இந்தியாவில் அப்படி ஒன்றும் பிரபலம் இல்லை. ஆனால் ஸ்னாப்சாட்டை அறியாதவர்கள்கூட, அந்தச் சேவையைப் பற்றி பேசவும், பொங்கவும் இந்தச் சர்ச்சை காரணமானது. பகிர்ந்துகொண்ட பின் மறைந்துவிடும் ஒளிப்படங்களையும், காணொலிகளையும் பகிர உதவும் புதுமையான அணுகுமுறை மூலம் வெற்றி பெற்ற ஸ்னாப்சாட் இப்போதுதான் பாலிவுட் பிரபலங்களை எல்லாம் கவர்ந்திழுத்து இந்தியாவிலும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான், இந்தியாவுக்கு எதிரான கருத்தால் ஸ்னாப்சாட் சிக்கலுக்கு இலக்காகி இருக்கிறது. இந்தியா தொடர்பாக ஸ்பிஜெல் இப்படி ஒரு மோசமான கருத்தைச் சொல்லலாம் என ஆவேசப்படுவதற்கு முன், இந்தப் பிரச்சினையின் பின்னணியைச் சரியாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

உண்மை என்ன?

முதல் விஷயம், ஸ்பிஜெல் இந்தியாவுக்கு எதிராக நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதோடு அந்தக் கருத்துகள் இப்போது தெரிவிக்கப்பட்டவையும் அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவன ஆலோசனை கூட்டத்தில் ஸ்பிஜெல் கூறிய கருத்துகள் என முன்னாள் ஊழியர் ஒருவர் தெரிவித்த கருத்துகள்தான், இப்படிப் பிரச்சினைக்குக் காரணம். ஸ்னாப்சாட் முன்னாள் ஊழியர் அந்தோனி பாம்பிலியானோ என்பவர்.

பாம்பிலியானோ ஒரு காலத்தில் பேஸ்புக் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தவர். பின்னர் ஸ்னாப்சாட் அவரை வளைத்துப்போட்டது. அதன் பிறகு ஏதோ பிரச்சினையில் அவர் நீக்கப்பட்டுவிட்டார்.

இந்தப் பிரச்சினைக்குப் பின், பாம்பிலியானோ லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். முதலீட்டாளர்களையும் விளம்பரதாரர்களையும் கவர ஸ்னாப்சாட் பயனாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட தரவுகளை மிகைப்படுத்தியது என்பதுதான் அவர் தொடுத்துள்ள வழக்கின் சாரம்சம். இது தொடர்பாகத்தான், அவர் 2015-ம் ஆண்டு ஸ்னாப்சாட் விரிவாக்கம் பற்றி கேட்டதாகவும், அப்போது இந்தியா, ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில் விரிவாக்கம் செய்ய விருப்பமில்லை என ஸ்பிஜெல் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இங்கிருந்துதான் சர்ச்சை ஆரம்பமானது. ஸ்னாப்சாட் தரப்பில் இந்தத் தகவல் மறுக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்சாட் சேவையை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மோசமான செயல்திறனுக்கான நீக்கப்பட்ட ஒரு ஊழியரின் அவதூறு இது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சர்ச்சை ஸ்னாப்சாட் வளர்ச்சியை எந்த அளவு பாதிக்கும் எனும் கேள்வி ஒரு பக்கம் இருக்க, ஸ்பிஜெல் இப்படி ஒரு கருத்தைக் கூறினாரா எனும் கேள்வியும் எழாமல் இல்லை. உண்மையில் அப்படி ஒரு கருத்தைக் கூறியிருந்தார் எனில், அதற்கான விலையை அவர் கொடுத்தாக வேண்டும். அதேநேரத்தில், இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்கள், எந்தக் கருத்தையும் பகிரும் முன் அதன் மூல வடிவத்தை உறுதி செய்துகொள்வதிலும் கொஞ்சம் ஆர்வம் காட்டுவது நல்லது என்பதை இந்தச் சர்ச்சை உணர்த்துகிறது.

Leave a Reply