இளமை .நெட்: ‘ஹோக்ஸி’: ஃபேக் நியூஸுக்கு முடிவு?
இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. புதிய தேடியந்திரம் என்றவுடன், கூகுளுக்குப் போட்டியாக இன்னொரு தேடியந்திரமா என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இது முற்றிலும் வேறுவிதமான தேடியந்திரம். இணைய உலகம் இப்போது எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்சினையை அலசி ஆராய உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தேடியந்திரம் இது.
ஆம், ‘ஹோக்ஸி’ எனும் இந்தத் தேடியந்திரம், இணையத்தில் பொய்ச் செய்திகள் பரவும் விதத்தை அலசி ஆராய்ந்து தெளிவு பெற உதவுகிறது. அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக ஊடகத்திற்கான ஆய்வகம் சார்பில் இந்தத் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் பொய்ச் செய்தி எப்படி எல்லாம் பரவுகிறது எனப் புரிந்துகொள்ள இந்தத் தேடியந்திரம் கைகொடுக்கிறது.
வதந்தியின் புதிய வடிவம்
‘ஃபேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச் செய்திகள் இணைய உலகை உலுக்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பொய்ச் செய்தி முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்து சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. தேர்தல் முடிந்த பிறகும் பிரச்சினை தொடர்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பொய்ச் செய்திகளின் பங்கு என்ன எனும் விவாதமும் தொடர்கிறது. அமெரிக்க அரசியல் மட்டும் அல்ல, இணைய உலகம் முழுவதும் வெவ்வேறு அளவுகளில் பொய்ச் செய்தி பிரச்சினையாகத்தான் இருக்கிறது.
வதந்தி பரவுவதும், பாதிப்பை ஏற்படுத்துவதும் எல்லாக் காலத்திலும் உள்ள பிரச்சினை என்றாலும், சமூக ஊடக யுகத்தில் இந்தப் பிரச்சினை பொய்ச் செய்தி வடிவில் புதிய பரிமானம் எடுத்துள்ளது. பல நேரங்களில் வில்லங்கமாகவும் விவகாரமாகவும் ஆகிவிடுகிறது.
நன்கு அறியப்பட்ட இணையதளம் அல்லது பிரபலமான செய்தித்தளம் போன்ற தோற்றம் கொண்ட பொய்யான இணையதளங்கள் மூலம், சூடான செய்தி போல கவனத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட, ஆனால் பொய்யான தகவல்களைக் கொண்ட செய்திகளே பொய்ச் செய்தி எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் உண்மையான செய்தி போலவே இருக்கும் என்பதால் கவனத்தை ஈர்க்கின்றன. பல நேரங்களில் இவை உள்நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் பிரச்சினை என்னவெனில் எதையும் பார்த்துவுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைச் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியிருப்பதால் இத்தகைய பொய்ச் செய்திகள் உடனடியாகப் பகிரப்பட்டு இணைய உலகில் வெகுவேகமாகப் பரவிவிடுகின்றன. இணையவாசிகள் அதை இன்னும் ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்ளும்போது நிலைமை இன்னும் மோசமாகிறது. திடீரெனப் பார்த்தால் சமூக ஊடக வெளி முழுவதும் விலங்கமான செய்திகள் வலம்வரத் தொடங்கிவிடுகின்றன.
ஆதாரம் என்ன, மூலம் என்ன என்பன போன்ற விவரங்கள் இல்லாத செய்திகள் எல்லாம் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்படுவது இந்த வகையைச் சேர்ந்த பாதிப்பு தான்.
நவீன குடிசைத் தொழில்
இத்தகைய பொய்ச் செய்திகளை உருவாக்குவது யார் என்பதைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. அதைவிட முக்கியமாக அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தை அறிவது இன்னமும் கடினமாக இருக்கிறது. ரஷ்யா மற்றும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் பொய்ச் செய்திகளை உருவாக்குவதைத் தொழில்நுட்பக் கில்லாடிகள் நவீன குடிசைத் தொழிலாகச் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு எதிராகத் திட்டமிட்டு பொய்ச் செய்தித் தளங்களைப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் பின்னணியில் இன்னும் பல இருண்ட பக்கங்களும், திடுக்கிடும் உண்மைகளும் இருக்கின்றன. விஷயம் என்னவெனில் பொய்ச் செய்தி பிரச்சனை இணையத்தின் நம்பகத்தன்மையைப் பாதித்திருக்கிறது என்பதுதான். யாரோ ஒரு சிலரின் ஆதாயத்திற்காக உருவாக்கும், ஆதாரம் இல்லாமல் உருவாக்கும் பொய்ச் செய்திகள் இணைய உலகில் வேகமாகப் பரவ வாய்ப்பிருக்கும் தன்மை அனைத்துத் தரப்பினருக்குமே பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது.
சமூக ஊடகங்களும், தேடியந்திரங்களுமே இவற்றுக்கான வாகனமாகக் கருதப்படுவதால் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட இணைய நிறுவனங்கள் பொய்ச் செய்திகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்திவருகின்றன.
பொய்ச் செய்தி பரவல் அறிய…
இந்தப் பின்னணியில்தான் ஹோக்ஸி தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது. ஹோக்ஸி பொய்ச் செய்திகளைக் கண்டறிய வழி செய்யாவிட்டாலும், அவை பரவும் விதத்தை ஆய்வு செய்ய உதவுகிறது. வழக்கான தேடியந்திரம் போலவே இதையும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட செய்தியின் உண்மைத்தன்மையில் சந்தேகம் எனில் அந்தச் செய்தி தொடர்பான குறிச்சொற்களை ஹோக்ஸியில் சமர்பித்தால், அந்தக் குறிச்சொற்கள் தொடர்பான செய்தி தொடர்பான அறிக்கையை அளிக்கிறது இந்தத் தளம்.
செய்தி பரவிய விதம் மற்றும் அவை சரி பார்க்கப்பட்ட விதம் குறித்தும் தகவல்களைக் கொண்டதாக இந்த அறிக்கை அமைகிறது. பொய்ச் செய்தி பரவிய விதத்தின் காட்சி ரீதியான விவரிப்பாகவும் இது அமைகிறது. இந்த அறிக்கையை அலசுவதன் மூலம் குறிப்பிட்ட பொய்ச் செய்தி எப்படி எல்லாம் பரவியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். அறிக்கையில் உள்ள எந்தத் தகவலை வேண்டுமானாலும் கிளிக் செய்து மேற்கொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக, பொய்ச் செய்திகளின் பிறப்பிடம் என அறியப்பட்டுள்ள இணைய தளங்களிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளின் இணைப்பை அடிப்படையாகக் கொண்டு ஹோக்ஸி செயல்படுகிறது. இவை தவிர ‘ஸ்னோப்ஸ்’, ‘ஃபேக்ட்செக்’ போன்ற உண்மை அறிதலை நோக்கமாகக் கொண்ட தளங்களிலிருந்து பகிரப்படும் இணைப்புகளையும் ஆய்வு செய்கிறது. எனவே பொய்ச் செய்திகள் பரவிய விதம் பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம். குறிப்பிட்ட செய்தியை யாரெல்லாம் பகிர்ந்து கொண்டனர், எப்படிப் பகிர்ந்துகொண்டனர் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
பொய்ச் செய்தி பரவிய விதத்தை அறிய உதவுகிறதே தவிர, குறிப்பிட்ட செய்தி உண்மையா, பொய்யா என்பதை அறிய இந்தத் தேடியந்திரம் வழி செய்யவில்லை. இது அதன் நோக்கமும் அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தேடியந்திரம் போல விழிப்புடன் இருந்து பொய்ச் செய்தி பரவும் விதம் பற்றிய சித்திரத்தை இது அளிக்கிறது. முதல் கட்டமாகக் குறும்பதிவுச் சேவையான ட்விட்டரில் பகிரப்படும் இணைப்புகளே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களிலும் பொய்ச் செய்திகள் அதிக அளவில் பரவுவதால் இந்தத் தேடியந்திர ஆய்வை முழுமையானது எனக் கொள்ள முடியாது. ஆனால் பொய்ச் செய்திகள் பரவலின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள நிச்சயம் உதவும். எல்லாவற்றுக்கும் மேல், பொய்ச் செய்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண, வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு உட்காந்திருக்க முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை உணர்த்தும் முயற்சியாகவும் இது அமைகிறது.
இணைய முகவரி: https://hoaxy.iuni.iu.edu/