இ-லைசென்ஸ், இ-ஆர்.சி புக் பெற உதவும் டிஜிலாக்கர்!
சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள் ஆகியவற்றை எல்லாம் மின்னணு முறையில் சேமித்து வைத்துக் கொள்வதற்காக, டிஜிலாக்கர் வசதி மத்திய அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் கூட, இன்னும் இதனைப் பெரும்பாலானோர் இதனைப் பயன்படுத்துவது கிடையாது. காரணம் இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள்தான். இன்னுமே கூட, இதில் புதிதாக பதிவு செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் தொடர்கின்றன. அதனை களைய கொஞ்சம் கொஞ்சமாக தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு.
இதுவரைக்கும் நாம் ஸ்கேன் செய்த, ஆவணங்களை மட்டுமே, டிஜிலாக்கரில் சேமித்துக் கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் இனிமேல், போனில் டிஜிலாக்கர் ஆப்பை டவுன்லோடு செய்து, அதில் ஆதார் எண் கொடுத்து, உள்ளே நுழைந்தால் போதும். நமது லைசென்சின் மின்-நகலை இதில் பெற முடியும். அத்துடன் வாகனப் பதிவு சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-ஆவணங்கள் வாகன ஓட்டிகளுக்கு சிறந்த வசதியாக இருக்கும். இந்த சேவை இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துறை அமைச்சகத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த இ-லைசென்ஸ் நமது போனில் இருந்தால் போதும், நமது ஒரிஜினல் லைசென்சை எடுத்துசெல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அத்துடன், நாம் காட்டும் லைசென்ஸ் உண்மையானதுதானா என காவல் துறையினரும் இந்த ஆப் மூலம், எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் இ-லைசென்ஸ்க்கு என தனியாக ஒரு ஆப் உருவாக்கப்பட்டு, நல்ல வரவேற்பு பெற்றது. இதுபோல, வருங்காலத்தில் எல்லா அரசு ஆவணங்களையும், மின்னணு முறையில் மாற்றினால், டிஜிலாக்கர் நல்ல வரவேற்பை பெறும்.
இதுவரைக்கும் இந்த டிஜிலாக்கர் வசதிக்காக 21,51,527 பேர் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 24,91,159 ஆவணங்கள் இதில் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.