ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடியாக உயர்வு
ஈக்விட்டி மியூச்சுவல் பண்டின் சொத்து மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 4.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் வரையிலான புள்ளிவிவரங்கள்படி இது தெரியவந்துள்ளது. ஈக்விட்டி மியூச்சுவல் பண்டில் தொடர்ச்சியான முதலீடுகளால் இதுவரை இல்லாத அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் முறையில் முதலீடுகளை அதிகரித் துள்ளதே இதற்கு காரணம் என்று சந்தை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். தவிர வங்கி சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளதாலும் சிறு முதலீட் டாளர்கள் தங்களது சேமிப்பின் பெரும்பாலானவற்றை ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய மியூச்சுவல் பண்ட் கூட்டமைப்பு வெளிட்டுள்ள அறிக்கைபடி (ஆம்ஃபி) பங்கு சார்ந்த சேமிப்பு திட்டம் (ELSS) உள்ளிட்ட ஈக்விட்டி பண்டுகளில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலகட்டத்தில் நிகர முதலீடு 11,985 கோடி ரூபாயாக உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 2,506 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது.
முதலீடுகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதன் காரணமாக ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஜூலை மாதம் வரையில் ரூ.4.5 லட்சம் கோடியாக அதிகரித்துள் ளது. இதற்கு முன்பு ஜூன் மாதத்தில் 4.28 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகள் வெளியே எடுத்தாலும் அதை ஈடுகட்டும் விதமாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு உள்ளது.
இந்த சொத்து மதிப்பை ஒட்டுமொத்தமாக 42 நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. மேலும் இந்த நிறுவனங்கள் இதுவரை இல்லாத அளவில் கடந்த மாத இறுதியில் 15.2 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டுள்ளன.