ஈபில் கோபுரத்தை விட தாஜ்மகால் அழகு: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து
தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் அதனை இடித்து தள்ளுங்கள் என்று மத்திய அரசுக்கும், உத்தரபிரதேச அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாஜ்மகாலை பாதுகாக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆா்வலா் எம்.சி.மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில் உலக அதிசயமான தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்து உத்தரபிரதேச அரசு தொலைநோக்கு திட்ட அறிக்கை ஒன்றை ஜூலை 11ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரபிரதேச அரசு திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தாஜ்மகாலை பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவது கிடையாது. தாஜ்மகாலை காக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அதை மூடிவிடுவோம் அல்லது நீங்களே அதை இடித்துத் தள்ளுங்கள் என்று கடுமையாக சாடினர்.
மேலும் பாரிசில் உள்ள ஈபில் கோபுரத்தை விட தாஜ்மகால் அழகாக இருப்பதாகவும், அதை வைத்து நமது அந்நிய செலாவணி பிரச்சினைகளை தீா்த்திருக்க முடியும் என்றும் நீதிபதிகள் தொிவித்தனா். “ஆண்டுக்கு சுமார் 80- லட்சம் போ் தொலைக்காட்சி கோபுரம் போல் உள்ள ஈபில் கோபுரத்தை பார்ப்பதற்கு செல்கிறார்கள். ஆனால் நமது தாஜ்மகால் அதைவிட எவ்வளவு அழகாக இருக்கிறது. நீங்கள் மட்டும் அதை பாதுகாத்திருந்தால், நம் அந்நிய செலாவணி பிரச்சினைகளை சுலபமாக தீா்த்திருக்க முடியும்” என்று கூறினர்.