உகாண்டா நாட்டில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
உகாண்டாவில் டி20 கிரிக்கெட் விளையாடச் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், பணப் பிரச்சனை காரணமாக நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
டி20 கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த உகாண்டா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. இதற்காக பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சயீத் அஜ்மல், யாசிர் ஹமீது, இம்ரான் பர்ஹத் உட்பட சுமார் 20 பேர் உகாண்டா சென்றனர். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்தது. உகாண்டாவின் கம்பாலா போய் இறங்கிய பின் தான், போட்டி கைவிடப்பட்டது அவர்களுக்குத் தெரிய வந்தது. பிறகு ஓட்டலுக்கு சென்ற அவர்களிடம், போட்டியின் முக்கிய ஸ்பான்சராக இருந்த நிறுவனம் பின் வாங்கிவிட்டதால் போட்டி கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனால் கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், பேசிய சம்பளத்தில் பாதியாவது தரவேண்டும் என்று கேட்டனர். ஆனால், ஸ்பான்சர் இல்லாததால் கொடுக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஊருக்குத் திரும்ப விமான நிலையம் வந்தனர். விமான டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்பட்டுவிட்டதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் தூதரகத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஏற்பாட்டின்படி பாகிஸ்தான் வீரர்கள், நாளை நாடு திரும்புவார்கள் என்று தெரிகிறது.
இதுபற்றி பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூறும்போது, ’பணத்துக்கு ஆசைப்பட்டு இங்கு வந்து சொந்தப் பணத்தை செலவழிக்க வேண்டியதாகிவிட்டது. சனிக்கிழமை நாங்கள் பாகிஸ்தான் திரும்பிவிடுவோம்’ என்றார்.