உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இந்த அரையிறுதியில் சொதப்பலாக பேட்டிங் செய்ததால் படுதோல்வி அடைந்து பரிதாபமாக போட்டியில் இருந்து வெளியேறியது.
329 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பம் ஓரளவு சுமாராக இருந்தாலும், அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க தவறியதோடு தொடர்ச்சியாக விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். கேப்டன் தோனி மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடினாலும், இந்தியாவின் ரன் விகிதம் உயரவில்லை. இறுதியில் இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த அரையிறுதி ஆட்டத்தில் கேப்டன் தோனி 65 ரன்களும், தவான் 45 ரன்களும், ரஹானே 44 ரன்களும், ரோஹித் சர்மா 34 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராத் கோஹ்லி ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இந்திய அணியின் தோல்வியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சதம் அடித்து இந்த போட்டியில் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவின் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணி வரும் ஞாயிறு அன்று நியூசிலாந்து அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது.