உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளை வெற்றி கொண்ட இந்திய அணி நேற்று ஐக்கிய அரபு எமிரேட் அணியை மிக எளிதில் தோற்கடித்தது. இந்நிலையில் முதல்முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட் அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 31.3 ஓவர்களில் இந்திய அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுக்களையும், யாதவ் மற்றும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுக்களையும், குமார் மற்றும் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றி பெற 103 ரன்கள் மட்டுமே தேவை என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 104 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா 57 ரன்களும், விராத் கோஹ்லி 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.