இந்திய கணித மேதை ராமானுஜருக்கு இணையாக போற்றப்பட்ட பிரபல அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் நேற்று சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார். மனக்கணக்கு போடும் கலையில் வல்லவராக புகழப்படும் அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் மறைவு அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகிற்கே பெரிய இழப்பு என அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பலர் தங்கள் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு கோட்பாட்டில் கணிதத்தை நுழைத்தவர் என்று அறியப்படும் இவரும், இவரது மனைவி அலிசியா நாஷ் என்பவரும் நேற்று நியூ ஜெர்சி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கணித மேதை ஜான் நாஷ் சம்பவ இடத்திலேயே பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1994-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல்பரிசை பெற்று, கணிதத்துறையின் மிகவும் உயரிய பரிசான ‘அபேல்’ பரிசை சமீபத்தில் பெற்ற இவரது வாழ்க்கையை தழுவி வெளியான ’எ பியூட்டுபுல் மைன்ட்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டது. வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.