உலகின் உயர்ந்த கோபுரம்

உலகின் உயர்ந்த கோபுரம்

9உலகின் முதல் உயர்ந்த காட்சிக் கோபுரம் ஈபிள் கோபுரம்தான். ஆனால் அது 1931-ம் ஆண்டு வரை இருந்த நிலைதான். ஏனெனில் அந்த ஆண்டில் அமெரிக்காவில் எம்பயர் கட்டிடம் கட்டப்பட்டது. அதன் பிறகு 1973-ல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டிடம் அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றது. இப்போது உலகின் மிக உயரமான காட்சி கோபுரம் என துபாயில் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மேலிருக்கும் காட்சிக் கோபுரம்தான். பொது மக்களுக்கான காட்சிக் கோபுரத்தில் இதுதான் மிகவும் உயரமானது.

வித்தகனை மிஞ்சும் வித்தகன் மண்ணில் தோன்றுவது இயல்புதானே. கடந்த வாரம் உலகின் உயரமான காட்சிக் கோபுரம் இங்கிலாந்தில் ப்ரைட்டன் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸூக்குச் சொந்தமான இந்த காட்சிக் கோபுரத்தின் பெயர் 360i. இது என்ன பெயர் என்கிறீர்களா, இதில் ‘I’ என்பது புதுமை, புத்திசாலித்தனம், ஒருமைப்பாடு (Innovation, Integration and Intelligence) என்பதைச் சுட்டுகிறது. 360 என்பது கோணத்தைக் குறிக்கிறது. அதாவது பார்வைக் கோபுர மேடையாக உருவாக்கப்பட்டுள்ள அந்த அறை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லாக் கோணங்களிலும் பார்க்க முடியும்.

மேல் வசம் செல்லும் ராட்டின வடிவில் இந்தக் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. உயரமான ஒரு தூண் மீது வட்ட வடிவ அறை பார்வையாளர் மேல் வசமாக ஏறி, இறங்கும் வகையில் அமைக்கப்படுள்ளது.

இந்தக் கோபுரத்துக்கான ஃப்ளாஞ்ச் (Flange) ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளது. காற்றால் ஏற்படும் அதிர்வுகளைத் தடுக்கக்கூடிய டெம்பர் (Damper) ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. ஹாலந்தில் இருந்து இரும்பு உருளைகளும் இத்தாலியிலிருந்து ராட்சத சன் கிளாஸ்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜெர்மனியிலிருந்து பிரம்மாண்டமான போல்ட் நட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. உலகத்தின் மிகச் சிறந்தவற்றை இணைத்துச் சிற்பங்கள் உருவாக்குவதைப் பாடல்களில் கேட்டிருப்போம். இது நிஜத்தில் நடந்திருக்கும் அதிசயம்.

இந்தப் பிரம்மாண்டமான கோபுரத்தை லண்டனைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர்கள் டேவிட் பார்ப்ஃபீல்டு, ஜூலியா பார்ஃப்பீல்டு ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இந்தக் கோபுரத்தின் கட்டிடப் பணிகள் கடந்த 2014 ஜூலையில் தொடங்கப்பட்டன. இதன் உயரம் 531 அடி. இந்தக் கோபுரத்தை உருவாக்க 4.62 கோடி இங்கிலாந்து பவுண்ட் செல்வாகியுள்ளது. இந்தக் கோபுர அறையில் 200 பேர் பயணிக்க முடியும். பகல் நேரத்தில் 20 நிமிடங்களைக் கழிக்கலாம். மாலை நேரம் 30 நிமிடங்களை இந்தக் கோபுர அறைப் பயணத்தில் செலவழிக்கலாம். இதில் பயணிக்கப் பெரியவர்களுக்கு 15 பவுண்டும் சிறுவர்களுக்கு 7.5 பவுண்டும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைக் காண வேண்டும் இந்தக் கோபுரத்தில் ஏறி நின்றால் போதும் என்ற சொல்வழக்கும் உருவாகத் தொடங்கிவிட்டது இப்போது.

Leave a Reply