உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம் இடிப்பு: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
மாலத்தீவில் அமைக்கப்பட்ட உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம் இடிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாலத்தீவில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்று உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம். கடந்த ஜுலை மாதம் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.
கடலுக்கு மேலும், கடலுக்கு கீழும் என வித்தியாசமாக அமைந்திருந்த இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால சிலைகளும், அதிநவீன சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு கடலில் நீர் மட்டம் குறையும் போது கடலுக்கு அடியில் இருக்கும் சிலைகள் மேலே தெரியும் வகையில் உருவாக்கியதுதான்
இந்த நிலையில் இந்த அருங்காட்சியம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக உள்ளதாக அந்நாட்டில் உள்ள மத குருக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனையடுத்து சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த தற்போதைய அதிபர் அப்துல்லா யாமின் இந்த அருங்காட்சியத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கிய பிரிட்டன் சிற்பி ஜேசன் டிகேய்ர்ஸ் டெய்லர் கூறுகையில், “அந்த சிலைகள் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. கலையை பிரதிபலிக்கிறது அவ்வளவே” என தெரிவித்துள்ளார்.