உளவியலிலும், உணவு பதப்படுத்துதலிலும் ஓராயிரம் வேலைவாய்ப்புகள்
உளவியல் படிப்பையும்,உணவு பதப்படுத்துல் படிப்பையும் பயின்றவர்களுக்கு ஓராயிரம் வேலைவாய்ப்புகள் இருப்பதாக கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது..
இன்றைய காலச் சூழ்நிலையில் மனிதன் பலதரப்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகிறான். நாம் ஏன் இவ்வாறு இருக்கிறோம்என்ற கேள்வி நமக்குள் அடிக்கடி தோன்றும்.நாம் நம்மைப் புரிந்து கொள்வதற்கும் உளவியல் இன்றியமையாததாகிறது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை மனஉளைச்சல் அடைகிறார்கள்.அதற்கான அறிவியல் பூர்வமான காரணங்களையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.இந்த உளவியல் துறையில் படிப்பில் பல்வேறு பிரிவுகள் உள்ளது.
உளவியல் பிரிவுகளில் மருத்துவம்,நரம்பியல்,மனித வள மேம்பாடு,ஊடகவியல்,தடயவியல், ஆலோசனை உளவியல்,ஊடக உளவியல்,இணைய உளவியல்,இஸ்லாமிய உளவியல்,கல்வி உளவியல் என பல்வேறு வகைகள் உள்ளன. இப்பிரிவுகள் அனைத்தும் நமது கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது.
உளவியல் படிப்புகளைப் பொறுத்தவரை மருத்துவமனைகளில்,கல்லூரிகளில்,பள்ளிக்கூடங்களில் மனநல,உளவியல் நிபுணர்களாக,உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக,சிறப்புப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களாக,மனிதவள மேம்பாட்டாளராக பணியாற்றலாம்.அரசு சாரா நிறுவனங்களிலும் பெண்கள் மேம்பாட்டுத்துறைகளிலும் ஆலோசனை உளவியலாளராகப் பணிபுரிய ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.ஐ.ஏ.எஸ்.மற்றும் இதர மத்திய மாநில அரசு வேலைவாய்ப்புகளின் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தனக்கும்,தன்னைச் சார்ந்தவர்களுக்கும்
சமூகத்திற்கும் உதவுவதற்கு உளவியல் பேருதவி புரிகிறது.தற்போது இப்படிப்புகளுக்கு அட்மிஷன் நடந்து கொண்டிருக்கிறது.
உணவுப் பதப்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறையில் ஓராயிரம் வேலைவாய்ப்புகளும் உள்ளது.மனிதன உயிர்வாழ அடிப்படைத் தேவையானது உணவு.இந்த உணவை உற்பத்தி செய்து கொடுத்து பொருளீட்டுவதும் இப்போது பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது.இந்த உணவகத்தொழிலில் வேலைவாய்ப்பும்,சுயதொழில் வாய்ப்பும் பலதரப்பட்ட நிலைகளில் கிடைக்கின்றன.
உணவுப் பதப்படுத்துதலில் பழங்கள்,காய்கறிகளைப் பாதுகாத்தல் அவற்றிலிருந்து ஜூஸ்,ஜாம்ஸ்,ஜெல்லி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தல்,பால்,பால்பொருட்கள்,ஐஸ்கிரீம்,பாலை அடிப்படையாகக் கொண்ட இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்தல். உணவுக்குச் சுவையூட்டும் மசாலாப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தல்.பேக்கரி தயாரிப்புப் பொருட்களான ரொட்டி,பிஸ்கட்,கேக் ஆகியன தயாரித்து விற்பனை செய்தல்,மீன்,இறைச்சி போன்றவற்றைப் பதப்படுத்துதல் மற்றும் அவை தொடர்பான பல்வேறு வகைகளில் உணவுகள் தயாரித்து விற்பனை செய்தல்,
தானியங்களை அடிப்படையாகக் கொண்டு மாவுமில்,அரவை மில்,எண்ணெய் தயாரித்தல்,விற்பனை செய்தல், பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை(ரெடிமேட் சப்பாத்தி,பரோட்டா உட்பட)தயாரித்து விற்பனை செய்தல். குளிர்பானங்கள், சுவையூட்டப்பட்ட தண்ணீர் போன்றவற்றைத் தயாரித்தல்,உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல உலோக-பிளாஸ்டிக் பொருட்கள்,பைகள்,பாட்டில்கள்,பாத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தல் ஆகிய அனைத்தும் உணவுத் தயாரிப்புத் தொழிலில் உள்ளடங்குவனவாகும்.தற்போது இந்த உணவுத்தொழிலை சொல்லிக் கொடுக்க ஏராளமான பயிலகங்கள் வந்து விட்டன.சான்றிதழ்,பட்டயம்,பட்டம்,முதுநிலைப்பட்டம் என பல நிலைகளில் பாடப்பிரிவுகளும் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் மட்டுமே பி.எஸ்.சி. உணவு பதப்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு என்ற பட்டப்படிப்பு கற்றுத்தரப்படுகிறது.பலதரப்பட்ட வேலை மற்றும் சுயதொழில் வாய்ப்புகளைத் தரும் இந்த உணவுத் தொழிலில் உங்களுடைய திறமை,முதலீடு போன்றவற்றிற்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேறலாம்.வாழ்க்கையை வெல்லலாம் எனவும் முதல்வர் சுமையா தாவூத் தெரிவித்தார்.