முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க கோரி, தி.மு.க. எம்.பி.க்கள் தன்னை நேரில் வந்து சந்தித்து வலியுறுத்தியது உண்மைதான் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ், ஊழல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கிய நீதிபதி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதை மார்க்கண்டேய கட்ஜூ விரும்பவில்லை என்று தன்னை நேரில் சந்தித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூறியதாக கூறினார்.
ஆயினும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட விஷயத்தில் சட்ட அமைச்சராக இருந்த தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் , அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் ஒப்புதல் காரணமாகவே சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது என்றும் பரத்வாஜ் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக எம்.பி. ஒருவர், மிரட்டியதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பரத்வாஜ், அவ்வாறு மிரட்டும்போது மார்கண்டே கட்ஜு விமான நிலையத்தில் இருந்து நேரில் பார்த்தாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் புகழை கெடுக்கும் வகையில் முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ நடந்து கொள்வது குறித்து தான் கவலையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.