எங்கே வீடு வாங்கலாம்?
சென்னையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இந்த ஆண்டு பிரபலமாகப்போவதாக ஐந்து குடியிருப்புப் பகுதிகளை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். வீடு வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இந்தப் பகுதிகளைப் பரிசீலிக்கலாம்.
பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை
ஒஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளுடன் இணைக்கும் இந்தப் பகுதி நிபுணர்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றி நிறையை வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.
இந்தப் பகுதியின் மொத்தக் குடியிருப்பு விநியோகத்தில், 1 படுக்கையறை வீடுகள் (சுமார் 550 சதுர அடி) எட்டு சதவீதமாக இருக்கிறது. இந்த நுண் சந்தையின் (மைக்ரோ மார்க்கெட்) ஈட்டு விகிதம் 2-3 சதவீதமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. “ஒரு சிறப்பு பொருளாதார திட்டத்துக்காக 25 லட்சம் சதர அடியில் அலுவலக இடம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2020-ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் 75,000 வேலைவாய்ப்புகள் உருவாகவிருக்கின்றன. அதுவும் இந்தப் பகுதியின் குடியிருப்புத் தேவையை அதிகரிக்கவிருக்கிறது” என்கிறார் ஜெஎல்எல் தேசியத் தலைவர் ஏ. சங்கர்.
இந்தப் பகுதியில் அலுவலக இடத்துக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் போக்குவரத்து வசதிகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படவிருக்கின்றன.
நைட் ஃபிராங்க் (இந்தியா) நிறுவனத்தின் சென்னை இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன், “பெரியளவிலான வேலைவாய்ப்புகள், குறைவான வீட்டு வாடகை போன்றவை இந்தப் பகுதி நுண்-சந்தையில் தேவை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. வாடகை வீடுகளில் ‘ஸ்டுடியோ-மாதிரி’ அடுக்குமாடி குடியிருப்புகள், 3 படுக்கையறை அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள், வரிசை வீடுகள் எனப் பல வகைகளில் கிடைக்கின்றன” என்கிறார்.
தேவை – 2, 3 படுக்கையறை வீடுகள்
அளவு – 790 ச. அடி, 1,650 ச. அடி
விலை – ஒரு ச.அடி ரூ. 4,000 முதல் ரூ.6,200 வரை
ஒஎம்ஆர்
நகரின் ஐடி பகுதியான இது கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய ரியால்டி வளர்ச்சியடைந்துள்ளது. ஒஎம்ஆரும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஐடி, காப்பீடு, பொறியியல், உற்பத்தி போன்ற பெருநிறுவன துறைகளைத் தொடர்ந்து ஈர்த்துவருகிறது. அதேபோல், குடியிருப்புச் சந்தையும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மால்கள் போன்றவற்றின் தேவையும் அதிகரிக்கவிருக்கிறது.
“இந்தப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களும் விலை ஏற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன” என்கிறார் ‘ஹவுஸ் ஆஃப் ஹிராநந்தனி’ தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுரந்திர ஹிராநந்தனி. பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையிலிருந்து ஈசிஆர் வரையும், மெட்ரோ பகுதியிலிருந்து ஒஎம்ஆர் வரையும் திட்டமிடப்பட்ட நீட்டிப்பு நிறைவேறினால் மேடவாக்கமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பெரிய வளர்ச்சியடையும். வண்டலூரில் 60 ஏக்கரில் வரவிருக்கும் பேருந்து நிலையம், தரமணியிலிருந்து கடலூர் (திருப்போரூர், மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக) வரை அமையவிருக்கும் ரயில் இணைப்பு போன்ற திட்டங்கள் இந்தப் பகுதியில் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஈசிஆர் பகுதியின் நடுவில் இருக்கும் அக்கரையிலிருந்து மாமல்லபுரம் வரை 33.5 கிலோமீட்டரில் அமையவிருக்கும் நான்கு வழிச்சாலையும் இந்தப் பகுதியில் குடியிருப்புத் தேவைகளை அதிகரிக்கவிருக்கிறது. சோழிங்கநல்லூர் நிதி நகரமாகவும், காலவாக்கம், திருப்போரூர் போன்றவை விளையாட்டு நகரங்களாகவும் இந்தப் பகுதியில் வளர்ச்சியடைந்துவருகின்றன.
தேவை – ஒருங்கிணைந்த வளர்ச்சிகள்
அளவு – 1,000 ச.அடி – 1,900 ச.அடி
விலை ஒரு ச.அடி – ரூ. 5,000 முதல் 7,500 வரை
வேளச்சேரி-தாம்பரம் சாலை
புதிய வாடிக்கையாளர்களுக்கு வேளச்சேரி பகுதி பல வகையான குடியிருப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. கிண்டிக்கும், ஒஎம்ஆருக்கும் அருகேயிருப்பதால் இந்தப் பகுதி பிரபலமாக இருக்கிறது. சமூக உள்கட்டமைப்பு வசதிகளும், குடிமை வசதிகளும் இந்தப் பகுதியின் விலை ஏற்றத்துக்குக் காரணமாக இருக்கிறது. அத்துடன், நீட்டிக்கப்படவிருக்கும் மெட்ரோ-எம்ஆர்டிஎஸ் இணைப்பும் சாலைகளின் நெரிசலைக் குறைக்கவிருக்கிறது.
இந்தப் பகுதியில் மூலதன மதிப்பு இடைக்காலத்தில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வாடகை வீடுகளுக்கான தேவையும், வாடகையும் வலுவான வளர்ச்சியடைந்திருக்கிறது. “இந்தப் பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளில் ஆறுவழி வேளச்சேரி-தாம்பரம் சாலை, மெட்ரோவின் இரண்டாவது கட்டம், மோனோ ரயில் போன்றவை அடங்கும்” என்கிறார் தோஷி ஹவுசிங் இயக்குநர் மெஹுல் தோஷி.
தேவை – நடுத்தர வருமான குடியிருப்பு
அளவு – 900 ச. டி – 1,300 ச. அடி
விலை – ஒரு ச. அடி ரூ. 4,000 முதல் 5,000 வரை
கூடுவாஞ்சேரி
நகரத்தோடும் புறநகர்ப் பகுதிகளோடும் இணைப்பிலிருக்கும் இந்தப் பகுதி மலிவான சந்தையாக இருக்கிறது. தாம்பரத்துக்கும் செங்கல்பட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் இந்த நுண் சந்தை ஐடி துறை ஊழியர்களை ஈர்த்துவருகிறது.
குறைவான விலையில் கிடைக்கும் நிலங்களால் இந்தப் பகுதியில் மலிவு குடியிருப்புத் திட்டங்கள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துவருகிறது. “கூடுவாஞ்சேரி அருகிலிருக்கும் பகுதிகளோடு இணைப்பிலிருக்கிறது. தரமான மருத்துவ வசதிகள், கல்வி நிறுவனங்களையும் இந்தப் பகுதி கொண்டிருக்கிறது” என்கிறார் சங்கர். உள்கட்டமைப்பு வசதிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருக்கும் புறநகர்ப் பேருந்து நிலையம், ஆவடியிலிருந்து கூடுவாஞ்சேரி வரையிலான ரயில் இணைப்பு போன்றவை ரியல் எஸ்டேட் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவிருக்கின்றன.
தேவை – 2 மற்றும் 3 படுக்கையறை வீடுகள்
அளவு – 700 ச. அடி – 1,250 ச.அடி
விலை – ஒரு ச. அடி ரூ. 2,800 முதல் 3,500 வரை
கோயம்பேடு
மத்திய சென்னையின் நிறைவுற்ற சந்தையின் காரணமாகக் கட்டுநர்கள் மேற்கு சென்னை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றனர். முதன்மைக் குடியிருப்புத் திட்டங்கள், ஸ்ரீபெரும்பத்தூர், ஒரகடத்தில் அமைந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை இந்தப் பகுதியின் நுண் சந்தை தேவைக்குக் காரணமாக இருக்கின்றன.
“இந்தப் பகுதியில் குறைவான விலை திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருக்கிறது” என்று சொல்கிறார் காஞ்சனா. கோயம்பேட்டைத் தவிர மதுரவாயல், போரூர் போன்ற பகுதிகளிலும் இந்தத் தேவை அதிகரித்திருக்கிறது.
ஒஆர்ஆர் சாலை கட்டுமானத்துக்குப் பிறகு, மேற்கு புறநகர்ப் பகுதிகளிலும் இணைப்புப் பெரியளவில் அதிகரித்திருக்கிறது. மதுரவாயல் மேம்பாலம், மெட்ரோ திட்டம் நிறைவு போன்றவை இந்தப் பகுதிகளில் வரவிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள்.
தேவை – 2 மற்றும் 3 படுக்கையறை வீடுகள்
அளவு – 900 ச.அடி – 1,400 ச.அடி
விலை – ஒரு ச.அடி ரூ. 9000 முதல் 11000 வரை