எண் திசை லிங்க தரிசனம்!
ஒரு பௌர்ணமி தினத்தில் ‘ஓம் நமோ பகவதே ருத்ராயா… நமஸ்தே அஸ்துதன்வனே’ – என்ற ஸ்ரீருத்ர ஒலி ஒரு புறம் ஒலிக்க, மறுபுறத்தில் ‘நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க!’ என்ற திருவாசகத் தேன் காதுகளில் இனிமை சேர்க்க, திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சந்நிதியில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஆட்டோக்களிலும் வாகனங்களிலும் பக்திப் பரவசத்துடன் சென்றுகொண்டிருந்தார்கள். பக்தர்கள் கூட்டம் பரபரப்பாக வரவும் போகவுமாக இருந்தார்கள். எல்லோரும் அப்படி எங்குதான் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு பக்தரிடம் கேட்டோம். தாங்கள் அஷ்டலிங்கங்களை தரிசனம் செய்யச் செல்வதாகக் கூறினார்.
அஷ்ட லிங்கங்கள் உருவான திருக்கதை
வேதங்களே வேல மரங்களாக அடர்ந்திருந்த காரணத்தால், வேற்காடு என்று பெயர் பெற்ற திருவேற்காடு திருத்தலத்துக்கு அகத்தியர் விஜயம் செய்தபோது, சிவபெருமானைப் பாடிப் பணிந்து, இறைவன் தமக்கு தேவியுடன் மங்கள நாயகனாகக் காட்சி தரவேண்டும் என்று பிரார்த்தித்தார். ஐயனும் அப்படியே தேவியுடன் அகத்தியருக்கு திருக்காட்சி அருளினார்.
இவ்விதம் அகத்தியர் வேண்டிய உடனே காட்சி அருளிய சிவபெருமானிடம், உலக மக்களுக்கெல்லாம் அன்னையாகத் திகழும் உமாதேவியார், தன்னுடைய குழந்தைகளுக்கு ஐயனின் அருள் எளிதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஒரு கேள்வியை முன்வைத்தார்.
‘‘ஐயனே, மகரிஷிகளுக்கும், தவயோகிகளுக்கும், புண்ணிய சீலர்களுக்கும் அவர்கள் கேட்ட உடனே தங்களின் திருக்காட்சியை அருள்கிறீர்கள். ஆனால், நம்முடைய குழந்தைகளான உலக மக்களுக்கு மட்டும் அனைத்து விஷயங்களிலும் தாமதம் செய்கிறீர்களே?’’
நம்மிடம்தான் அம்பிகைக்கு அத்தனை பரிவு!
அம்பிகையின் கேள்விக்கு மெல்லிய புன்முறுவலுடன் ஐயன், ‘‘தேவி, கவலை வேண்டாம். உலக மக்களிடம் உனக்குள்ள அன்பும் பரிவும் எமக்குப் புரிகிறது. உன்னுடைய வேண்டுகோளின்படியே எளிய மக்களும் எளிதில் எம்மை வழிபட்டு அருள்பெற இந்த
தலத்தின் எட்டு திசைகளிலும் உன்னுடன் இணைந்து திருக்காட்சி தருவோம்’’ என்று கூறி, தமது ஞானக் கண்களில் இருந்தும், அங்கங்களில் இருந்தும் எட்டு லிங்கத் திருமேனிகளை வெளிப்படச் செய்து, திருவேற்காடு தலத்தின் எட்டு திசைகளிலும் கோயில் கொண்டார். அந்த சிவலிங்கங்களே அஷ்ட ஐஸ்வர்ய வடிவங்களாக, அஷ்டலக்ஷ்மி கடாக்ஷம் தருபவையாகத் திகழ்கின்றன.
தருமமிகு சென்னையில் ‘சிவாலய ஓட்டம்’ என்ற முறையிலும், அஷ்டலிங்க தரிசன சேவை என்ற வகையிலும் பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை, ஞாயிறு, வெள்ளி, திங்கட்கிழமைகளில் சென்று வணங்குகின்றனர். அந்த எட்டு சிவலிங்கங்கள் அமைந்திருக்கும் தலங்கள் மற்றும் வணங்கிப் பாட வேண்டிய பாடல் குறித்து இங்கே பார்ப்போம்.
முதலில் நாம் தரிசிப்பது திருவேற்காடு வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நேர் கிழக்கில் சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ள இந்திர லிங்கம்.
இஷ்டங்கள் அருளும் இந்திர லிங்கம்
இந்திரனால் பூஜை செய்யப்பட்டதால், இறைவன் இந்திர சேனாபதீஸ்வரர் என்ற திருப்பெயருடன் வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் காட்சி தருகிறார். இறைவனின் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து,
தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
பாயுமான் மழுவினோடு பகர்வர தாபயம் கண்
மேயதின் புயங்கள் நான்கும் மிளிருமின் அனைய தேகம்
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனிற் காக்க!
என்று பாடி வணங்கினால், பதவி உயர்வு, அரசாங்க காரிய அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
இடர்கள் களையும் அக்னி லிங்கம்
திருவேற்காட்டிற்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது அக்னி லிங்கம். இந்தக் கோயில் வள்ளிக் கொல்லைமேடில் இருந்து சுமார் 3.5 கி.மீ. தொலைவில் உள்ள நூம்பல் என்ற இடத்தில் உள்ளது. இங்கே இறைவன் ஆனந்தவல்லியுடன் அகத்தீஸ்வரர் என்னும் திருநாமம் கொண்டு அருள்புரிகிறார். அகத்திய முனிவரால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட நூம்பல் என்னும் அபூர்வ புஷ்பங்களால் வழிபடப் பெற்ற இறைவன் இவர். அதனாலேயே இந்தத் தலத்துக்கு நூம்பல் என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள இறைவனின் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி,
பங்கயத் தவிசின் மேவி இருந்துடற் பற்று நீக்கி
அங்கு நற்பூத சித்தி அடைவுடன் பின்னர்
கங்கையைத் தரிசித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற்
கொங்கை வெற்பனைய பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே.
என்று பாடிப் பணிய, வெப்பம் தொடர்பான பிணிகள் நம்மை அணுகாது.
தர்மம் காக்கும் யம லிங்கேசர்
நூம்பல் தலத்தில் இருந்து சுமார் 4.2 கி.மீ.தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையின் வலப்புறத்தில் உள்ள செந்நீர்க்குப்பம் என்ற இடத்தில், மரகதாம்பிகை தேவியுடன் கயிலாச நாதர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார் யமலிங்கேசர். இவருடைய சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி,
மான் மழுசூலம் தோட்டி வனைதரும் அக்கமாலை
கூன்மலி அங்குசம் தீத்தமருகம் கொண்ட செங்கை
நான்முக முக்கண் நீல நள்ளிருள் வருணம் கொண்டே
ஆன்வரும் அகோர மூர்த்தி தென்திசை அதனிற் காக்க!
என்று பாடி வணங்கிட, ஏழரைச் சனி, கண்டகச் சனி, வழக்குத் தொல்லைகள் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
நல்வழி காட்டும் நிருதி லிங்கம்
செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 4.5 கி.மீ. தொலைவில் ஆவடி-பட்டாபிராம் சாலையில், மகாநாடு பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் பாரிவாக்கம் என்ற தலத்தில், தென்மேற்கு திசைக்கு உரிய லிங்கமாக, பாலீஸ்வரர் என்ற திருப்பெயருடன், பாலாம்பிகை சமேதராகத் திருக்காட்சி அருள்கிறார். இந்தக் கோயில் சுமார் 2320 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஓலைச் சுவடிகள் மூலம் தெரியவருகிறது. இவருடைய சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி,
வனமறை பயிலு நாவன்நா மணி நீலகண்டன்
கனம் அடு பினாக பாணி கையினைத் தருமவாரு
கிளர்புயன் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய
ஒளிதரு மேருவல்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன்
என்று பாடி பிரார்த்தித்தால், உறவினர்களால் அனுகூலம், கொடுத்த பணம், பொருள் திரும்பக் கிடைத்தல் போன்ற சுப பலன்கள் உண்டாகும்.
தடைகளை நீக்கும் வருணலிங்கம்
செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 2.3 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில், மேற்கு திசைக்கு உரிய லிங்கமாக ஜலகண்டேஸ்வரி அம்பிகையுடன் ஜலகண்டேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு காட்சி தருகிறார் ஐயன். இவருடைய சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி,
திவண்மாரி அக்கமாலை செங்கையோர் இரண்டும் தாங்க
அளிந்தரும் இரண்டு செங்கை வரதம் தோள் அபயம் தாங்க
கவினிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும்
தவனமா மேனிச் சத்தியோ சாதண் மேற்றிசையில் காக்க.
என்று பாடி பிரார்த்தனை செய்து கொண்டால், வீடு கட்டுவதில் உள்ள தடைகள் விலகுதல், நீர் தொடர்பான பிணிகள் நீங்குதல் போன்ற நன்மைகள் உண்டாகும்.
நல்வாழ்வு அருளும் வாயு லிங்கம்
வேற்காட்டீஸ்வரர் சந்நிதிக்கு வடமேற்கு திசையில், வருணலிங்கம் அமைந்திருக்கும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் பருத்திப்பட்டு என்ற தலத்தில் அமைந்திருக்கிறது வாயுலிங்க சந்நிதி. இறைவன் விருத்தாம்பிகை தேவியுடன் வாயுலிங்கேஸ்வரராக அருள் புரிகிறார். இவருடைய சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி,
கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்
அடலை செய்து அமலை தானம் அறைதர நடிக்கும் ஈசன்
இடைநெறி வளைதா பத்தில் எறிதரு சூறைக் காற்றில்
தடைபடா தெம்மை இந்தத் தடங்கடல் உலகிற் காக்க
என்று பாடி வணங்கினால், கண் திருஷ்டி நீங்குதல், காற்றினால் உண்டாகும் நோய்களில் இருந்து நிவாரணம் பெறுதல் போன்ற பலன்கள் ஏற்படும்.
குபேர சம்பத்து அருளும் குபேரீஸ்வரர் வடக்கு திசைக்கு உரிய மூர்த்தியாக, பருத்திப்பட்டு வாயுலிங்க சந்நிதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், ஆவடி-திருவேற்காடு சாலையில், சுந்தரசோழபுரம் என்ற தலத்தில் வேம்புநாயகி சமேதராக திருக்காட்சி அருள்கிறார் குபேரீஸ்வரர். இந்தப் பகுதியை கி.பி.11-ம் நூற்றாண்டில் சுந்தர சோழன் என்பவன் ஆட்சி செய்தமையால் இந்த ஊருக்கு சுந்தர சோழபுரம் என்ற பெயர் ஏற்பட்டதாக செவிவழிச் செய்தி. இவருடைய சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி,
கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
அறைதரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்தி
பொறை கொள் நான் முகத்து முக்கண் பொன்னிற மேனியோடும்
மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனிற் காக்க.
பாடி வழிபட்டால், பொன் பொருள் சேரும். கடன்கள் நீங்கும்.