எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆய்வு செய்த கவர்னர்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் தொடங்கி தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு நடத்தி வருகிறார். கவர்னரின் இந்த ஆய்வுக்கு திமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசின் கவர்னர் தலையிடுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கவர்னர் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் கூறும் குறைகளை அதிகாரிகள் மூலம் குறிப்பெடுத்துக் கொண்டார் ஆளுநர். ஆனால் கவர்னரின் இந்த ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு திமுகவும் ஆதரவு கொடுத்துள்ளது.
இருப்பினும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் கவர்னர் தனது ஆய்வை தொடர்ந்து நடத்தி வருகிறார். கவர்னரின் ஆய்வுக்கு பொதுமக்களின் முழு ஆதரவு இருப்பதால் எதிர்க்கட்சிகளின் போராட்டம் பிசுபிசுத்து போயுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.