எது உங்களை ‘வெயிட்’டாக்கும்? எது உங்களை ‘லைட்’டாக்கும்?
என்ன சாப்பிட்டாலும் எடை கூட மாட்டேங்குது” என்று புலம்பியபடி எதையாவது கொரித்துக்கொண்டிருப்பார்கள் சிலர். “எதைச் சாப்பிட்டாலும் வெயிட் ஏறுது… என்ன செய்யறதுன்னே தெரியலை” என்று சாலட், சூப் என எதையும் பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவார்கள் சிலர். “ஜிம்முக்குப் போறேன், டயட் ஃபாலோ பண்றேன்… ஆயில் ஃபுட்ஸை விட்டுட்டேன். ஆனாலும், வெயிட் குறைஞ்சபாடில்லை” என்று பலரும் புலம்புவார்கள். உணவைப் போட்டிபோட்டு சாப்பிடுபவருக்கு எடை கூடவில்லை; சாப்பிடாதவருக்கு எடை கூடுகிறது. இது எல்லாம் என்ன டிசைன் என்று ஆச்சரியமாக இருக்கும்.
உடல் பருமனுக்குக் காரணம் என்ன? அதிகமாகச் சாப்பிடுவதா? சரியானதைச் சாப்பிடாததா? உணவில் இருந்து, நமக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதில் ஏற்படும் சமச்சீரின்மையே உடல் பருமனுக்குக் காரணம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, அதிகம் சாப்பிடுவது மட்டும் அல்ல, அதை எரிக்காமல் உடல் உழைப்பற்ற வாழ்க்கை வாழ்வதுதான் உடல் பருமன் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது.
எது உங்களைப் பருமனாக்குகிறது?
நிச்சயமாக உணவை மட்டும் குறைசொல்ல முடியாது. எதைச் சாப்பிடுகிறோம், அதில் எவ்வளவு கலோரி கிடைக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். கிடைத்த கலோரியை செலவழித்தோமா என்பதைக் கவனிக்க வேண்டும். செலவாகாத கலோரிதான் கொழுப்பாக மாறும். இது உடலில் சேகரிக்கப்படும். தொடர்ந்து சேகரிக்கப்படும்போது உடல் பருமன் ஏற்படும். இந்தச் சுழற்சியைப் புரிந்துகொண்டாலே உடல் பருமனைத் தவிர்க்கலாம்.
ஏன் கொழுப்பை உடல் சேகரிக்கிறது என்று சந்தேகம் எழலாம். உடல் ஆரோக்கியமாக இயங்க ஆற்றல் தேவை. தினசரி, போதுமான ஆற்றல் கிடைத்தாலும் எதிர்காலத் தேவையை உடல் கவனத்தில்கொள்ளும். எனவே, தேவையான அளவு பயன்படுத்திக்கொண்டு, மீதம் உள்ள கலோரியை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதுபோல, உடலில் கொழுப்பாக மாற்றி சேமித்துவைக்கும்.
இதனால்தான், ஒன்று இரண்டு நாட்கள் உண்ணாமல் இருந்தாலும்கூட பசி உணர்வைத் தவிர ஒன்றும் ஆவது இல்லை. ஏனெனில், உடலில் சேகரிக்கப்பட்ட கொழுப்பு, மீண்டும் ஆற்றலாக மாற்றப்பட்டு உடல் சோர்வடையாமல் இருக்கச் செய்யும். கலோரியை செலவிடாமல் சேமித்துவைக்கும்போது, உடல் பருமன் தவிர்க்க முடியாததாகிவிடும்.
கலோரியை எரிக்க, கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டு வேலை, தோட்ட வேலை, நடைப்பயிற்சி போன்ற எளிய விஷயங்களைச் செய்தாலேபோதும், கலோரிகள் எரிக்கப்படும்.
உணவில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், நார்ச்சத்து என நான்கு முக்கிய சத்துக்கள் இருக்கின்றன. தவிர, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மூன்றும் கலோரிகளாக மாற்றப்படும். இந்த அடிப்படையைத் தெரிந்துகொண்டால், உடல் எடையைத் தவிர்க்க முடியும்.
காலை உணவு என்பது அந்த நாள் முழுதும் எனர்ஜியைத் தரக்கூடியது. சாப்பிட்ட சில மணி நேரங்களில் எனர்ஜியாக மாறும். தேவையான நேரத்தில் உணவு உள்ளே செல்லும்போது, செரிமானம் சீராக நடக்கும். காலை உணவைத் தவிர்த்துவிட்டோம் எனில், உடல் அதன் தேவையைத் தானாகக் கட்டுப்படுத்தி இருக்கும். அந்த நேரத்தில் 11 மணிக்குப் போய் காலை உணவை வயிறு நிறைய சாப்பிட்டால், பாதி உணவு செரிமானம் ஆகாமல் கழிவாகவும் மாறாமல் கொழுப்பாக மாறிவிடும்.
இரவு தாமதமாகத் தூங்குவது தவறு. இரவெல்லாம் விழித்திருக்க, நிறைய உடல் சக்தி தேவைப்படும். இதனால், இரவு நேரத்தில் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதனால், செரிமானமும் பாதிக்கப்படும், அதிகப்படியான கலோரியால் உடல் எடை அதிகரிக்கும்.
‘எனக்குச் சாப்பிடணும் போல மூட் இருக்கு’ எனச் சாப்பிடுவது, நான்கு பேருடன் பேசும்போது சும்மா நொறுக்குத்தீனிகளைக் கொறிப்பது, ‘இந்தக் கடையில் ஸ்வீட் சூப்பர்’, ‘இந்த கலர்…செம’, ‘இந்த உணவு டேஸ்ட்டி’ எனத் தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடுவது போன்றவை உடல் எடை கூடுவதற்கான முக்கியக் காரணங்கள்.
தண்ணீர் சரியாகக் குடிக்காமல் இருந்து, உணவை அதிகமாகச் சாப்பிட்டால் செரிக்கும் சக்தி குறையும். உடலில் உறிஞ்சும் சக்தியும் குறைந்துபோகும். அதுபோல், சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துவதால் உடலின் கிரகிக்கும் தன்மை குறைந்துபோகும்.
நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால் வாயு சேரும். சில வகை உணவுகளாலும் வாயு சேரும். இப்படி, பல வகையில் வாயு சேர்ந்தால் உடல் எடை அதிகரிக்கவே செய்யும்.
கார்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளைச் சர்க்கரை, மைதா, பேக்டு உணவுகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வதும் உடல் எடையை அதிகரிக்கும்.
கடைகளில் கிடைக்கும் ‘ரெடி டூ ஈட்’ மற்றும் நிமிடங்களில் சமைக்கலாம் போன்ற உணவுகள். ‘நங்கட்ஸ்’, ‘ஃபிரென்ச் ஃப்ரைஸ்’, ‘ஸ்மைலீஸ்’ போன்ற உடனடியாகத் தயாரிக்கப்படும் உணவுகளில் மோனோசோடியம் உப்பு, சுவையூட்டிகள், பதப்படுத்திகள் அதிக அளவில் இருக்கின்றன.
மனஅழுத்தத்துக்கும் உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனஅழுத்தம் காரணமாக எதையாவது கொரிக்கத் தோன்றும். இதனால், உடல் பருமன் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.
டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது, சுவாரஸ்யம் காரணமாகப் போதுமான அளவைவிட சற்றுக் கூடுதலாகச் சாப்பிட நேரும். இதனால், சாப்பிடும்போது டி.வி பார்ப்பது, பத்திரிகை படிப்பதைத் தவிர்க்க வேண்டும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் எப்போதும் கவனம் தேவை.
ஏ.சியிலேயே இருப்பவர்கள், வியர்க்காமல் இருப்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் உடல் உழைப்பு இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இடுப்பு, வயிற்றுப்பகுதிகளில் சதை போடத்தான் செய்யும். வியர்வை வெளியே போகாமல் இருந்தால், கழிவுகள் அப்படியே உடலில் தங்கும்.
மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்குக் கழிவுகள் உடலில் தேங்கி நிற்கும். உடல் எடை கூட வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஹார்மோன் பிரச்னைகளும்கூட பருமனுக்குக் காரணம் ஆகலாம். ஹைப்போதை ராய்டிசம், தைராய்டு, ஹார்மோன் பிரச்னை இருப்பவர்களுக்கும் உடல் எடை அதிகரிக்கும்.
ஃபிட் உடல் அமைப்பு கிடைக்க…
பசிக்குச் சாப்பிட வேண்டும். முழு வயிறு நிரம்பும் அளவுக்குச் சாப்பிடக் கூடாது. நேரத்துக்குச் சரியாகச் சாப்பிடுவதும் முக்கியம்.
உணவைச் சமைத்த, மூன்று நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இதுதான் உணவு உண்ணும் நல்ல முறை. மறுமுறை சூடுபடுத்தும் உணவுகளில் பூஞ்சைகள் உருவாகி, ஃபுட் பாய்சனுக்கு வழி வகுக்கும்.
எடை குறைக்க வேண்டும் என்று நினைப்போர், கட்டாயம் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது முக்கியம். உடலில் நீரின் அளவு குறைந்தாலும் உடல் எடை கூடலாம்.
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை உணவைப் போதுமான அளவு சாப்பிடுவது முக்கியம். இரவில் பாதி வயிறு சாப்பிடுவதே சரி.
மண் குளியல் (மட் தெரப்பி) உடலில் உள்ள நச்சுத்தன்மையை உறியும். செரிக்காத உணவுகள் மூலமாக ஏற்படும் கழிவுகளை மட் தெரப்பி சரி செய்துவிடும்.
வாழை இலைக் குளியல் (Plantain Leaf bath), மாதம் ஓரிரு முறை எடுத்தால், உடலில் வியர்வை நன்கு சுரக்கும். கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறும்.
அடிபோஸ் கொழுப்புத் தசையில் இரண்டு வகை உள்ளன. அதில், பழுப்புக் கொழுப்பு (Brown fat) அடர்நிறத்தில் இருக்கும் எடை அதிகரிக்கும். வெள்ளைக் கொழுப்பு (White fat) எடை அதிகரிக்காது. ஐஸ் தெரப்பி (Ice pack) மூலம், பழுப்புக் கொழுப்பு, வெள்ளைக் கொழுப்பாக மாறும். இதனுடன், நாம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தோமானால், உடல் எடை விரைவில் குறைய இந்த தெரப்பி உதவும். தொடை, இடுப்பு, வயிற்றுப் பகுதிகளில் உள்ள கொழுப்பைக் கரைக்க ஐஸ் தெரப்பி சிறந்தது.
நீராவிக் குளியல், நச்சுத்தன்மையையும் தேவை இல்லாத கொழுப்பையும் கரைத்து வியர்வை மூலமாக வெளியேற்றிவிடும்.
மூச்சுப்பயிற்சி, நடை, ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் போன்ற பயிற்சிகள் உடல் எடையைச் சீராகப் பராமரிக்கும். வாரத்தில் ஐந்து நாட்கள், ஏதாவது ஒரு பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.