எதையும் அழகாக்கும் தொங்கும் விளக்குகள்
விளக்குகள் வீட்டுக்கு வெளிச்சத்தை மட்டுமல்ல, அழகையும் கொண்டு வருபவை. இன்றைக்குப் பல வடிவங்களில் விளக்குகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று தொங்கட்டான் விளக்குகள். பல்லாண்டுகளுக்கு முன்பிருந்து இம்மாதிரியான விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே மெழுவர்த்தி ஏற்றி வைக்க இம்மாதிரியான தொங்கட்டான் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தொங்கட்டான் விளக்குகளில் பயன்பாட்டுக்கு ஏற்ப பல வகை உள்ளன. மரம், காகிதம், இரும்புச் சட்டம் போன்ற பல் வகைப் பொருள்கள் கொண்டு இந்தத் தொங்கட்ட விளக்குகள் செய்யப்படுகின்றன. அதுபோல வடிவங்களிலும் பல வகை உள்ளன. பந்து வடிவத்திலும் உள்ளன. செவ்வக வடிவத்திலும் உள்ளன.
சாப்பாட்டு மேஜை விளக்கு
இவையும் தொங்கு விளக்குகளாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்குப் பதிலாக வட்ட வடிவில் ஒரே விளக்காகச் சாப்பாட்டு மேஜையின் நடுவில் பொருத்தினால் போதுமானது. மேலும் இம்மாதிரியான விளக்குகள் உயரத்தை கூட்டி, குறைக்கும் வகையிலும் கிடைக்கின்றன.
அலுவலக மேஜைக்கான விளக்கு
பொதுவாக அலுவலகப் பயன்பாட்டுக்கு மேஜை விளக்குகளைப் பயன்படுத்துவதுதான் வழக்கம். ஏனெனில் ஒரு விஷயத்தைக் கூர்ந்து பார்ப்பதற்கான வெளிச்சத்தை மேஜை விளக்குகள் அளிக்கும். அதற்குப் பதிலாக உயரம் குறைந்த தொங்கட்டான் விளக்குகளைப் பயன்படுத்தலாம்.
இவை கண்ணாடிக்கு மேல் பொருத்தப்படும் விளக்குகள். அறையில் பிரதான விளக்குகள் இருந்தாலும், இந்த விளக்குகள் கண்ணாடியில் தெரியும். நமது தோற்றத்தைத் தெளிவாகக் காட்ட உதவுகின்றன. குளியலறைகளில் இந்த விளக்குகளைப் பொருத்தலாம். இவற்றிலும் பல வகை உள்ளன.
வரவேற்பறை விளக்கு
பிரதானமான கூடங்களை அலங்கரிக்க முன்பு தொங்குசர விளக்குகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். பூக்கொத்து போல இந்த விளக்குகள் பல விளக்குகளைக் கொண்டவையாக இருக்கும். அதற்குப் பதிலாக வரவேற்பறையின் ஓரத்தில் பல்வேறு உயரங்களில் தொங்கு விளக்குகளைத் தொங்க விடலாம். இது நவீன அழகைத் தரும்.
படுக்கையறை விளக்கு
படுக்கையறைக்குப் பெரும்பாலும் பக்கவாட்டுச் சுவர்களில் பொருத்துவது மாதிரியான விளக்குகளைத்தான் அமைப்பார்கள். மாறாக இங்கும் தொங்கட்டான் விளக்குகளையே பயன்படுத்திப் பார்க்கலாம். சீனப் பந்து விளக்குகள் படுக்கையறைக்குப் பொருத்தமானதாக இருக்கும். மிதமான வெளிச்சத்தைத் தரும் வகையில் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.