எப்படி இருக்கிறது வீட்டு வாடகைச் சந்தை?

எப்படி இருக்கிறது வீட்டு வாடகைச் சந்தை?

homeபிழைப்புக்காகத் தலைநகருக்கு வரும் பலரது கனவு வீடு என்பதாகத்தான் இன்னும் இருக்கிறது. நல்ல வேலை, கைநிறைய சம்பளம், காதல், கல்யாணம், வீடு, கார் என வாழ்க்கை ஓடிவிடாதா என்பதே பலரது விருப்பம். சமீப காலங்களில் வங்கிகளில் அதிக அளவில் கடன் தருவதால் பலரது வீட்டுக்கனவு கைகூடிவருவது கண்கூடு. அதுவும் சென்னை போன்ற பெரு நகரில் வாடகை கொடுத்துக் கட்டுப்படியாகாது என்பதாலேயே பலரும் அடித்துப் பிடித்து வீடு வாங்கத் துணிகிறார்கள். வீடு வாங்கவா, வேண்டாமா என்னும் யோசித்துக் கொண்டிருக்கும்போதே ‘எலி வளையானாலும் தனி வளை வேண்டும்’ என்பது போன்ற எதையாவது சொல்லி வீட்டை வாங்கவைத்துவிடுவார்கள். வீடு வாங்கி அதில் வீட்டு உரிமையாளரே குடிபுகுந்துவிட்டால் சிக்கலில்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் உரிமையாளர் குடிபோகாமல் வீட்டை வாடகைக்கு விட நேர்கிறது.

வேலையின் காரணமாக நகரில் மத்தியப் பகுதியில் குடியிருப்பவர்கள் வங்கிக் கடன் பெற்று வீடுகளைப் புறநகர்ப் பகுதிகளில் வாங்கி விடுகிறார்கள். எப்படியும் சென்னையில் ஒரு வீடு வேண்டுமே என்ற அவர்களது விருப்பம் இந்த வீட்டை வாங்கவைக்கிறது. ஆனால் வேலைக்காக அவ்வளவு தூரம் அலைய வேண்டுமா என்ற எண்ணம், பிள்ளைகளின் பள்ளி போன்ற பிரச்சினைகளால் நகரின் மத்தியப் பகுதியை விட்டு அகலவும் விரும்பாதிருக்கிறார்கள். இந்த மாதிரியானவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படிச் சொந்த வீட்டை வாடகைக்கு விடுபவர்களின் அவதி சொல்லில் அடங்காதது.

உதாரணத்துக்கு செயிண்ட் தாமஸ் மவுண்ட், நங்கநல்லூர் போன்ற நகரின் புறநகர்ப் பகுதியில் சுமார் முப்பது லட்சம், நாற்பது லட்சம் விலையில் ஒரு வீட்டை வாங்கிவிடுவார்கள். அதற்கான மாதாந்திரத் தவணைத் தொகை முப்பதாயிரம் வரைகூட இருக்கும். ஆனால் அவர்கள் வீட்டை வாடகைக்கு விற்று அந்தப் பணத்தைச் சம்பாதிக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. அதுவும் இப்போது பெரிய அளவில் வீட்டின் வாடகை உயரவே இல்லை. வீட்டு வாடகை உயரவில்லையா என புருவத்தை உயர்த்தாதீர்கள். அது கிட்டத்தட்ட உச்சத்தைத் தொட்டு அப்படியே நிற்கிறது. அதற்கு மேல் உயரவில்லை, அவ்வளவுதான்.

சராசரியாக அடுக்குமாடி குடியிருப்பு ஒரு சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீடு ஒன்றின் வாடகை மாம்பலம், தி.நகர் போன்ற இடங்களில் பத்தாயிரம் ரூபாய் என்றால் நங்கநல்லூர் போன்ற இடங்களில் ஏழாயிரம் எட்டாயிரம் என்று இருக்கிறது. அதுவும் ரயில் பாதையை ஒட்டிய பகுதியில் வீட்டு வாடகை ஆயிரம் இரண்டாயிரம் அதிகம். ஒரு வீட்டில் இருந்த குடித்தனக்காரர்கள் காலி செய்துவிட்டால் அடுத்ததாக அந்த வீட்டைக் குறைந்தது ஆயிரம் ரூபாய் அதிக வாடகைக்கு விட வேண்டும் என்று உரிமையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் ஊருக்குள் வீடு இருந்தாலும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் வாடகை குறைந்துவிடாதா என்று வாடகைக்குக் குடியிருப்பவர்கள் எண்ணுகிறார்கள். இந்த முரண் காரணமாகவே பல வீடுகளில் ‘வீடு வாடகைக்கு’ என்னும் பலகை நிரந்தரமாகத் தொங்குகிறது.

தனி வீடுகளில் வாடகை அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டைவிடக் குறைவுதான். ஆனால் சில இடங்களில் மின்சாரத்துக்கு என்று ஒரு தொகையைக் கறந்துவிடுகிறார்கள். ஒரே மின் இணைப்பை வைத்துக் கொண்டு பல வீடுகளில் சப் மீட்டரை வைத்துக் குடித்தனக்காரரின் பயன்பாட்டை மட்டும் அறிந்துகொண்டு யூனிட்டுக்கு ஆறேழு ரூபாய்வரை வாங்கிவிடுகிறார்கள். அரசுக் கட்டணத்தை அப்படியே கட்ட முடிந்தால் மட்டுமே தனி வீடு என்பது லாபகரமானது என்று வாடகைக்குக் குடியிருப்பவர்கள் கணக்குப் போடுவதும் சரிதான். சில இடங் களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வீடு வாடகைக்குக் கிடைக்கும் என்றும் சில பிரிவினருக்கு வீடே தர இயலாது என்றும் நேரிடையாகச் சொல்லிவிடுகிறார்கள். இது ஒரு காரணம் என்றால் சிலர் நல்ல வாடகைக்கு ஆள் கிடைக்கும்வரை வீட்டைப் பூட்டியே போட்டுவிடுகிறார்கள். இப்படியான பல காரணங்களால் பல வீடுகளில் ஆளே இல்லாத நிலை ஏற்படுகிறது. இத்தகைய போக்கால் வீட்டு உரிமையாளருக்குத் தவணைத் தொகையுடன் இந்தச் சுமையும் சேர்ந்துகொள்கிறது. ஒரு ஆயிரம் ரூபாய் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுக்கணக்கில் ஒரு வீட்டைப் பூட்டி வைப்பது சரிதானா? நிதானமாக யோசித்துப் பார்த்தால் சரியில்லை என்பதையும் யாரும் உணர்ந்துகொள்ள முடியும். வீடு என்பது குடியிருப்பதற்கானது. அதைப் பூட்டிப் போடுவதன் மூலம் யாருக்குமே பயனில்லை. ஆகவே ஓரளவு நியாயமான வாடகைக்கு வீட்டைப் பிறருக்குத் தரும்போது அதனால் உரிமையாளருக்கும் பயன் உண்டு, வீட்டை வாடகைக்கு எடுப்போருக்கும் பயன் உண்டு.

Leave a Reply