எப்படி இருக்க வேண்டும் குளியலறை?
இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலுமே உள்ளே குளியலறைகள் கட்டப்படுகின்றன. முன்பெல்லாம் குளியலறையும் கழிவறையும் தனித்தனியாகக் கட்டப்பட்டன. இப்போது குளியலறை என்பது கழிவறையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ‘கழிவறையும், குளியலறையும் ஒரே இடத்திலா?’ என்று முகம் சுளித்தவர்கள்கூட அதுதான் மேல்நாட்டு நாகரிகம் என்று கூறியவுடன் வாயை மூடிக்கொண்டு ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தவிர சென்னை போன்ற மாநகரங்களில் இட நெருக்கடி வேறு.
தற்காலிக விருந்தாளிகள் வீட்டுக்கு வரும்போது வரவேற்பு அறைக்கு அடுத்து அவர்கள் பயன்படுத்தும் பகுதி இந்தக் குளியலறைதான். எனவே, இந்த அறையைச் சரியாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.
ஈரம் தொடர்ந்து இருக்கக்கூடிய இடம் அது என்பதால் தரையில் பதிக்கப்படும் கற்கள் வழுவழுப்பானதாக இருக்கக் கூடாது. கொஞ்சம் செலவு அதிகமானாலும் வழுக்காத தன்மை கொண்ட கற்களையே தேர்ந்தெடுங்கள்.
சிலர் இந்த அறைக்கும் மின்விசிறி பொருத்துகிறார்கள். அப்படியானால் அது துருவுக்கு எதிராகச் செயல்படும்தன்மை கொண்ட பெயிண்ட் அடிக்கப்பட்ட மின்விசிறியாக இருக்க வேண்டும். குளியலறைக்கு வெளியே கட்டாயம் மிதியடி இருக்க வேண்டும் என்பதுடன் அந்த மிதியடி ஈரத்தை நன்கு உறிஞ்சிக் கொள்வதாகவும் இருக்க வேண்டும்.
நம் வீடுகளில் சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை மட்டுமல்லாமல் வேறு பல பொருள்களையும் அங்கே வைப்பார்கள் (யோசித்துப் பாருங்கள் உங்கள் குளியலறையில்கூட இப்படி 20 பொருட்களாவது இருக்க வாய்ப்பு உண்டு). இவற்றையெல்லாம் சரிவர வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்றை எடுக்கும்போது பல பொருட்களும் கீழே விழுந்து தொலைக்கும்.
சிலர் தங்கள் மேக்-அப்பையும் குளியலறையிலேயே முடித்துக் கொண்டு விடுவார்கள். வெளியே வந்து பார்த்தால் அவர்கள் முகம் அவர்கள் சிறிதும் எதிர்பாராததாகக் காட்சி தரும். காரணம் குளியலறையில் உள்ள ஒளியும் வெளியே உள்ள ஒளியும் மாறுபடுவதுதான். எனவே, ஒப்பனைசெய்யக் குளியலறையைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கத்தக்கது அல்ல.
குளியலறை அலமாரிகளுக்கு மரச் சட்டகங்களைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது அல்ல. காரணம் மரமும் ஈரமும் ஒன்றுக்கொன்று எதிரானது. என்னதான் பிரம்மாண்டமான குளியலறையாக இருந்தாலும் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குளியலறைகள் இருப்பதுதான் நல்லது. அவசர நிலை உருவாகலாம்.
சில நவீனக் குளியலறைகளில் குளிக்கும் பகுதியையும் கழிப்பறையையும் பிரிப்பதற்குக் கண்ணாடிக் கதவுகள் பொருத்தப்படுகின்றன. எனினும், இடையே ஒரு திரை (Shower curtain) இருப்பதே போதுமானது. குளியலறைக்குள் கைப்பிடிகள் (Hand railings) இருப்பது நல்லது. சற்று வயதானவர்களுக்கு இது உதவியாக இருக்கும். சோப்புக் கையைப் பயன்படுத்துபவர்களுக்கும்தான்.
குளியலறையில் ஒரு கண்ணாடி பொருத்தப்பட வேண்டியது அவசியம். அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். குளியலறைத் தொட்டி என்பது நடுத்தர வீடுகளில் இப்போதும் காணப்படுவதில்லை. என்றாலும், வருங்காலத் தலைமுறைக்கு அது தேவைப்படலாம் என்ற கோணத்தில் அதற்கான வருங்கால இடத்தை மனத்தில் கொண்டு வடிவமைப்பது நல்லது. (அந்தக் காலத்தில் கார் நிறுத்தத்துக்கு இடம் இல்லாமல் நிலம் முழுவதும் வீடாகக் கட்டிவிட்டு இப்போது அதற்காகப் பெருமூச்சு விடுபவர்கள் உண்டு).
குளியலறைக்குப் போதிய காற்று வசதி தேவை. இதுதான் ஆரோக்கியம் என்பதோடு அசுத்தக் காற்று வெளியேறுவதற்கு நிச்சயம் இடம் தேவை. அதேபோல வெளிச்சமும் போதிய அளவு இருக்க வேண்டும். ஓரளவு இயற்கை வெளிச்சமும் கிடைக்குமாறு குளியலறையைக் கட்டுங்கள்.
குளியலறையில் தண்ணீர் தேங்கக் கூடாது. இதற்குத் தகுந்த மாதிரி தளம் அமைக்கப்பட வேண்டும். சிறிதும் மேடு, பள்ளம் இருக்கக் கூடாது. அதே சமயம் நீர் வெளியேறும் பகுதியை நோக்கி லேசான சாய்தளமாகத் தரைப்பகுதி இருக்க வேண்டும். குளியலறையின் ஒரு மூலையில் ‘மாப்’ ஒன்றை வைத்திருங்கள். தண்ணீர் எங்காவது தேங்குவதுபோல இருந்தால் உடனே அதனால் துடைத்து விடுங்கள்.
குளியலறையின் தரையில் பதிக்கப்பட்டுள்ள ஓடுகளில் கறை படிந்தால் உடனுக்குடன் அதை நீக்குவதுதான் புத்திசாலித்தனம். இல்லையேல் அதை நீக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். குளியலறைக்கான குழாய்களை வாங்கும்போது நவீனமானவற்றை வாங்குவதில் தவறில்லை. அதேநேரம் முழு அளவு தண்ணீர் வரவேண்டும் என்றால் பலமுறை சுற்ற வேண்டும் எனும்படியான குழாய்களைத் தவிர்த்து விடுங்கள்.
பலரும் அதிகம் திட்டமிடாத வீட்டுப்பகுதி குளியலறைதான். இதற்காகப் பின்னர் பலரும் வருத்தப்படுவதும் உண்டு. அந்தக் குழுவில் நீங்கள் இருக்காதீர்கள்..