எம்.எல். சட்ட மேற்படிப்பை மீண்டும் 2 ஆண்டுகளாக உயர்த்த யுஜிசி முடிவு
எம்.எல். சட்ட மேற்படிப்பை மீண்டும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கென அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு யுஜிசி ஒப்புதல் அளிக்குமேயானால், 2016-17 கல்வியாண்டு முதல் இப்போது எல்.எல்.எம். என அழைக்கப்படும் எம்.எல். சட்டப் மேற்படிப்பின் படிப்புக் காலம் மீண்டும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை எல்.எல்.எம். சட்ட மேற்படிப்பின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு இந்த முதுநிலை சட்ட பட்டப் படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறையத் தொடங்கியது. இதனால், பி.எல். முடித்து சட்ட விரிவுரையாளர் பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எல்.எல்.எம். படிப்பை எளிமைப்படுத்தியதோடு, படிப்புக் காலத்தையும் ஓராண்டாக யுஜிசி குறைத்தது.
குழு அமைப்பு: கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்வி நிறுவனங்களில் எல்.எல்.எம். படிப்புக் காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், யுஜிசியின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றாமல் இந்தப் படிப்புகள் வழங்கப்படுவது தொடர்பாக வந்த தொடர்ச்சியான புகார்களைத் தொடர்ந்து, இந்த முதுநிலை சட்டப் மேற்படிப்பின் படிப்புக் காலத்தை மீண்டும் 2 ஆண்டுகளாக உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை யுஜிசி அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கும் பெங்களூரு இந்திய சட்டப் பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி பேராசிரியர் வீ.விஜயகுமார் கூறியதாவது:
2 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை: தனியார் சட்டக் கல்லூரிகள் மட்டுமின்றி, பெரும்பாலான அரசு சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் யுஜிசி வழிகாட்டுதல்களின்படி போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி ஓராண்டு எல்.எல்.எம். படிப்புகள் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, இதற்கான படிப்புக் காலத்தை மீண்டும் 2 ஆண்டுகளாக உயர்த்தப் பரிந்துரைத்துள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றார் அவர்.