எம்.பி, எம்.எல்.ஏ திரும்ப பெறும் மசோதா. வருண்காந்தி கனவு பலிக்குமா?
மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பாஜக எம்பியுமான வருண்காந்தியின் புரட்சிகரமான மசோதாவுக்கு பிற அரசியல்வாதிகள் ஆதரவு கொடுப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு எம்பி அல்லது எம்.எல்.ஏவை தேர்வு செய்ய மக்களுக்கு உரிமை இருப்பதை போல, அந்த எம்.பி அல்லது எம்.எல்.ஏ சரியாக செயல்படவில்லை என்றால் அவர்களை திரும்ப பெறவும் மக்களுக்கு உரிமை வேண்டும் என்பதே வருண்காந்தி மசோதாவின் நோக்கம் ஆகும். இந்த மசோதா அரசியல்வாதிகளுக்கு எதிரானது என்பதால் பிற அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு தருவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வருண்காந்தியின் மசோதாவின்படி ஒரு தொகுதியை சேர்ந்த எம்.பி அல்லது எம்.எல்.ஏ சரியாக செயல்படாவிட்டால், அந்த தொகுதியின் வாக்காளர்களில் குறைந்தபட்சம் 25 சதவீதம் பேர் கைழுத்திட்ட மனுவை சபாநாயகருக்கு அளிக்கலாம். அந்த மனு மீதான நம்பகத்தன்மையை தேர்தல் கமிஷன் உறுதி செய்த பின் சரியாக செயல்படாத எம்.பி., எம்.எல்.ஏக்களை திரும்ப பெறுவதற்கான ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இந்த ஓட்டெடுப்பில் 75 சதவீதம் பேர் திரும்ப பெறுவதற்காக ஓட்டளித்தால் எம்.பி.,எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்து இடைத்தேர்தல் நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது
இந்த மசோதா தற்கால இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்தில் தற்போது மிகவும் அவசியம் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வருண்காந்தி எம்பியின் இந்த மசோதாவினால் சரியாக செயல்படாத எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும் என்பதால் அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.